ஸ்டெர்லைட் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஸ்டெர்லைட் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 21 மே, 2025

ஸ்டெர்லைட் இன்னும் அகற்றப்படாதது ஏன்? கொலையாளிகள் மீது நடவடிக்கை எடுக்காத மர்மம் என்ன?ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு: ஏழாம் ஆண்டு நினைவு நாளில் கேள்விக்குறியாகும் நீதி தீர்ப்பு வந்து ஓராண்டு மேலாகியும் ஸ்டெர்லைட்டை அகற்ற தமிழக அரசுக்கு தயக்கம் ஏன்?

Tamil Nadu updates

Photo news by Arunan journalist 

 #தூத்துக்குடி லீக்ஸ்

நாளிதழ் செய்தி | புதன்கிழமை | 

மே 21, 2025


## ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு கொலை : 

ஏழாம் ஆண்டு நினைவு நாளில் கேள்விக்குறியாகும் நீதி


தூத்துக்குடி, மே 21

: நாளை (மே 22) ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்ட 15 பேரின் ஏழாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.


 இந்நிலையில், ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு தமிழக அரசுக்கு முன்வைத்துள்ள கோரிக்கைகள் கவனம் பெறுகின்றன.


###தீர்ப்பு வந்து ஓராண்டு மேலாகியும் ஸ்டெர்லைட்டை அகற்ற தமிழக அரசுக்கு தயக்கம் ஏன்?



கடந்த பிப்ரவரி 29, 2024 அன்று உச்சநீதிமன்றம் ஸ்டெர்லைட்டின் அப்பீலை தள்ளுபடி செய்து நிரந்தரமாக ஆலையை மூட உத்தரவிட்டது. 


அதனைத் தொடர்ந்து தமிழக முதல்வரை சந்தித்த போராட்ட அமைப்பினர், உடனடியாக ஸ்டெர்லைட் ஆலையை அகற்ற வேண்டும் (DISMANTLE) என வலியுறுத்தினர். தாமதிக்கும் பட்சத்தில் ஸ்டெர்லைட் ஆலை தரப்பில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்து சட்டச் சிக்கலை உருவாக்குவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரித்தனர்.


"தமிழக முதல்வர் ஆலையை அகற்றுவதற்கான சட்டப்படி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்." 


ஆனால், எதிர்பார்த்தபடியே, ஸ்டெர்லைட் நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் மீண்டும் மறு சீராய்வு மனு தாக்கல் செய்தது.

 அந்த மனுவும் கடந்த நவம்பர் 11, 2024 அன்று உச்சநீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.

மீண்டும்.. மீண்டும்....!!!

தற்போது சிறிது காலம் அமைதியாக இருந்த ஆலை நிர்வாகம் மீண்டும் உச்சநீதிமன்றத்தில் CURATIVE மனுவை தாக்கல் செய்து, ஆலைக்கு மக்கள் மத்தியில் ஆதரவு இருப்பதாகக் காட்டி குறுக்கு வழியில் திறப்பதற்கு முயற்சித்து வருகிறது.


### மக்களின் கேள்வி: "இன்னும் ஏன் இந்த ஆலையை அப்புறப்படுத்தவில்லை?"


தூத்துக்குடி மக்கள் "இன்னும் இந்த ஆலையை ஏன் தான் இங்கிருந்து அப்புறப்படுத்தாமல் இருக்கிறார்கள்?" என்று தமிழக அரசைப் பார்த்து கேள்வி எழுப்புகின்றனர்.


ஸ்டெர்லைட் நிர்வாகம் மீண்டும், மீண்டும் உச்ச நீதிமன்றத்தை அணுகுவதற்கு காரணம், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பின்னும் ஸ்டெர்லைட் ஆலையை தூத்துக்குடியிலிருந்து அகற்றாமல் தமிழக அரசு மௌனம் காப்பதே என்று மக்கள் கூட்டமைப்பு குற்றம் சாட்டுகிறது. 


இது வேதாந்தாவிற்கு ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க முடியும் என்ற நம்பிக்கையை கொடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.


"ஒருவேளை மீண்டும் உச்சநீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு உத்தரவிட்டால், இதற்காகப் போராடி உயிர்நீத்த 15 பேரின் உயிரை யாராவது திருப்பிக் கொடுக்க முடியுமா?" என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது.


### அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையின் முக்கிய கண்டுபிடிப்புகள்


தூத்துக்குடி ஸ்டெர்லைட் படுகொலை தொடர்பாக தமிழ்நாடு அரசு நியமித்த நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம், பல்வேறு சாட்சிகளை விசாரித்ததில், 20-30 பேர் அடங்கிய கூட்டம் ரகசியமாக போராட்டக் கூட்டத்தில் நுழைந்து நாசவேலையில் ஈடுபட்டதாகக் கண்டறிந்தது. 

இவர்கள் ஸ்டெர்லைட் நிர்வாகம் மற்றும் காவல்துறையின் கூட்டுப் பங்களிப்புடன் செயல்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது.


"இதை சாதாரணமாக எடுத்துக் கொண்டு விட்டுவிட முடியாது, 

இது நிச்சயமாக சம்பந்தப்பட்ட அலுவலர்களால் தொடர்ந்து விசாரிக்கப்பட வேண்டியதாகும்" (ஆணையத்தின் இறுதி அறிக்கை, பகுதி-2, பக்கம் 84) என்று ஆணையம் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தும், தமிழக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

### கோரிக்கைகள்

ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்துள்ளது:


1. ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் கலவரமாக மாறியதற்கு ஸ்டெர்லைட்டின் பின்புலத்தை புலன் விசாரணை செய்ய வேண்டும்.

2. போராடிய பொதுமக்களைச் சுட்டுக் கொன்ற கொலையாளிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

3. உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக அகற்ற வேண்டும்.


"படுகொலை நடந்து 7 ஆண்டுகள் ஆகியும், இன்னும் நீதி கிடைக்கவில்லை. 


குற்றவாளிகள் தண்டிக்கப்படாமல் இருப்பது ஏன்? ஸ்டெர்லைட் ஆலை அகற்றப்படாமல் இருப்பது ஏன்? இந்தக் கேள்விகளுக்கு தமிழக அரசு பதில் சொல்ல வேண்டும்," என்று ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பின் சட்ட ஆலோசகர் கே. அரி ராகவன் வலியுறுத்தியுள்ளார்.


ஸ்டெர்லைட் இன்னும் அகற்றப்படாதது ஏன்? கொலையாளிகள் மீது நடவடிக்கை எடுக்காத மர்மம் என்ன?


---

*தூத்துக்குடி லீக்ஸ் செய்தி குழு*

வியாழன், 20 மார்ச், 2025

80 நாட்களில் ஸ்டெர்லைட் ஆலை குஜராத் மாநிலத்திற்கு ஷிப்ட் ஆகிறது????

Tamil Nadu updates,

 photo news by Arunan journalist 

ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து அகற்றப்படும் வேதிப்பொருட்கள் குஜராத்துக்கு அனுப்பப்படுகிறது – தூத்துக்குடி ஆட்சியர் தகவல்

தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை 2018 முதல் மூடப்பட்டிருந்த நிலையில், ஆலையில் சேமிக்கப்பட்டிருந்த வேதிப்பொருட்கள் அகற்றப்பட உள்ளன.

உச்சநீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முடியாது என்று உத்தரவிட்டது. இந்த நிலையில், வேதாந்தா நிறுவனம் தமிழக அரசிடம் ஆலையில் தேங்கி இருந்த பொருட்களை அகற்ற அனுமதி கோரியது. 


இதன் அடிப்படையில் 80 நாட்களுக்குள் அகற்றும் பணியை நிறைவு செய்ய அரசின் அனுமதி கிடைத்துள்ளது.


இன்றிலிருந்து அகற்றும் பணிகள் தொடங்கியுள்ளன. கண்டெய்னர் லாரிகள், ஜேசிபி இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு, வேதிப்பொருட்கள் குஜராத்தின் டாமன் – டையூ பகுதிக்கு கொண்டு செல்லப்படுவதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு: தூத்துக்குடி லீக்ஸ்

மீள் விட்டான் பகுதியில் ஸ்டெர்லைட் ஆலை யின் தெர்மல் பிளான்ட்


அடுத்தாக...

தூத்துக்குடி சிப்காட் அருகில் மீள் விட்டான்  பகுதியில் ஸ்டெர்லைட் ஆலை சொந்தமான அனல் மின் நிலையம் ஆரம்ப ஆயத்த பணிகள் நடந்து வருகின்றன 

ஸ்டெர்லைட் ஆலையில் வேதி பொருட்கள் அகற்றும் பணியில் ...!!!


வெள்ளி, 21 பிப்ரவரி, 2025

மீண்டும் திறக்க வேண்டும் ஸ்டெர்லைட் தமிழக முதல்வருக்கு கோரிக்கை

Tamil Nadu updates, 

photo news by Arunan journalist 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும்: தமிழக முதல்வருக்கு கோரிக்கை


தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என தமிழ்நாடு மக்கள் வாழ்வாதர பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.



இது தொடர்பாக சங்கத்தின் தலைவர் தியாகராஜன், செயலாளர் கணேசன், இணை செயலாளர் சிந்தா ஆகியோர் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில்....


, "தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை ஒரு சிலரின் தவறான புரிதல் மற்றும் அந்நிய சதியால் நடத்தப்பட்ட போராட்டத்தின் விளைவாக மூடப்பட்டது. 


ஆலை மூடியதன் காரணமாக அப்பாவி தொழிலாளர்கள் சுமார் 20,000-க்கு மேல் வாழ்வாதாரம் இழந்து தவிக்கிறார்கள். அதே போன்று ஆலையின் ஒப்பந்தகாரர்கள் மற்றும் லாரி உரிமையாளர்கள், 400-க்கு மேற்பட்ட சிறு, குறு தொழிலகங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் எல்லாம் பத்திரிக்கை மூலம் ஆலையை திறக்க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்கள். 


அன்மையில் வேலூர் பாலாற்றில் தோல் தொழிற்சாலைகளால் ஏற்பட்ட மாசு காரணமாக, அந்த பகுதி விவசாயிகள், பொதுமக்கள், ஆகியோரது வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே தற்போது பிறப்பித்துள்ள தீர்ப்பின் அடிப்படையில் விதிமுறைகளை முறையாக பின்பற்றி தொழற்சாலைகள் செயல்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்த ஆலையை மூட உத்திரவிடவில்லை. 


ஆனால் 20 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையால் அப்படி யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்பட்டதற்கான சான்றினை இதுவரை யாரும் சமர்ப்பிக்கவில்லை. வெறும் வதந்தியின் காரணமாக ஏற்பட்ட போராட்டத்தில் நடைபெற்ற துரதிஷ்டவசமான துப்பாக்கி சூட்டால் ஆலை மூடப்பட்டுள்ளது. நீதியரசர் ஆனந்த் வெங்கடேஷ் கூறியுள்ளது போல் "கூட்டமாக தவறு செய்தால் அது நியாயப்படுத்தப்படுகிறது தனித்து நேர்மையாக செயல்பட்டால் அது குற்றமாக்கப்படுகிறது" என்பதற்கு ஸ்டெர்லைட் ஆலை மூடல் எடுத்துக்காட்டாகும். 


ஸ்டெர்லைட் ஆலை மற்றும் அதனால் பாதிப்புக்கு உள்ளானதாக போராட்டக்காரர்கள் குறிப்பிட்ட இடங்களையெல்லாம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த (NGT) தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பில் "வலுவான காரணமின்றி ஆலை மூடப்பட்டுள்ளது என்று தெரிவித்து சில நிபந்தனைகளுடன் ஆலையை திறக்க உத்திரவிட்டுள்ளதை" அரசு கருணையுடன் பரிசீலனை செய்ய வேண்டுகிறோம். 


அரசும் சரி, உச்சநீதிமன்றமும் சரி ஒருமுறை எடுத்த முடிவை /தீர்ப்பை சில ஆண்டுகளுக்குப் பின் தேவைக்கும், சூழ்நிலைக்கும் ஏற்ப மாற்றி அமைப்பது நடைமுறையில் உள்ளது. எனவே, தமிழக அரசு இதனை கெளரவப் பிரச்சனையாக கருதாமல், ஏழை தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மற்றும் தமிழகத்தின் தொழில், பொருளாதார வளர்ச்சியினை கருத்தில் கொண்டு, ஒரு நிபுணர் குழு அமைத்து ஆய்வு செய்து நல்ல முடிவு எடுக்க பணிவுடன் வேண்டுகிறோம். 


இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வியாழன், 19 ஜனவரி, 2023

ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் சார்பாக இரவு உணவு சாலையோர வாசிகளுக்கு தூத்துக்குடியில் வழங்கினர்

thoothukudileaks 20-1-2023

News by Roja arunan 

ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் சார்பாக இரவு உணவு சாலையோர வாசிகளுக்கு தூத்துக்குடியில் வழங்கினர் 



      இதுபற்றிய செய்தியாவது :-

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் சார்பில் ஒருங்கிணைப்பாளர் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் பேராசிரியர் பாத்திமா பாபு தலைமையில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகள் நேற்று இரவு 19-1-2023 தூத்துக்குடி மாவட்ட பத்திர அலுவலகம் புதிய பேருந்து நிலையம் அருகே 

வீடற்ற சாலையோர வாசிகள் மற்றும் கஷ்டப்படுவோருக்கு  இரவு உணவு அளித்தார்கள்.





இந்நிகழ்ச்சியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகள் ஹார்ட்மன் மற்றும் வினோத் முறாயிஸ் மறைவுக்குப் வீரவணக்கம் கூறி நினைவு அஞ்சலி செலுத்தினார்கள் .









ஞாயிறு, 11 டிசம்பர், 2022

தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் ஒப்படைக்க கோரி தூத்துக்குடி கலெக்டரிடம் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகள் மனு அளித்தனர்


🤷🏻‍♀️, thoothukudileaks

12-12-2022

தூத்துக்குடி மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று 12-12-2022 காலை 10. மணி அளவில் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் _சுமார் 300மேற்பட்டோர் தமிழக மூதல்வர் ஸ்டாலின் அவரிடம் ஒப்படைக்க கோரி தூத்துக்குடி கலெக்டர் செந்தில் ராஜ் இடம் புகார் மனு கொடுத்தார் கள். 


மனு கொடுக்க எழுச்சியுடன் வந்த ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்கள்



_இதனால் தூத்துக்குடி மாநகரத்தில் பல பகுதிகளில் காவல்துறை வாகனம் போலீசார் பாதுகாப்பு பணி‌ என்று நிறுத்த ப்பட்டிருந்தார்கள்_



_இதையொட்டி தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகம் வழக்த்தை விட காவல்துறை போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டு இருந்தார்கள்_




ஒருங்கிணைந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பாக அளித்த மனுவில் கூறப்பட்டிருந்தாவது:-

7339110763 9443584049 9488478955 9843412669 9791123059 7305172352

பெறுநர்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்,

தலைமைச் செயலகம்,

சென்னை.

உரிய வழியாக:

மதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சியர் அவர்கள்,

தூத்துக்குடி மாவட்டம்,

தூத்துக்குடி.

தேதி:12.12.2022

பெருமதிப்பிற்குரிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு,

நாசகார ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மே.22 & 23, 2018

நாட்களில் நடந்த அமைதி வழிப் போராட்டத்தில், காவல்துறையால் 13 பேர்

சுட்டும், 2 பேர் அடித்தும் கொல்லப்பட்டனர். துப்பாக்கிசூட்டில் காவல்துறை

அத்துமீறல் இருந்ததா? என்பதை விசாரிக்க கடந்த அதிமுக அரசால்

நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி திருமதி. அருணா ஜெகதீசன் ஆணையம்

கடந்த மே-18 ல் தமிழக அரசிடம் தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.



ஆணையத்தின் அறிக்கையை முழுவதுமாக ஏற்றுக்கொள்வதாக தாங்கள் கூறினீர்கள்.

ஆணைய அறிக்கை மீது, கடந்த 18-10-2022-ல் தமிழக சட்டமன்றத்தில்

நிகழ்ந்த வாதத்தின் போது தாங்கள் "துப்பாக்கிச்சூட்டில் சம்பந்தப்பட்ட

அனைவரும் குற்றவாளி கூண்டில் ஏற்றப்படுவார்கள்” என்று உறுதியளித்தீர்கள்.

தூத்துக்குடி-தமிழக மக்களும், பிஜேபி தவிர்த்த அனைத்து கட்சிகளும் தங்களின்

உறுதிமொழியை பெரிதும் வரவேற்றனர்.

ஆனால் 17-10-22 அன்று தங்களது அரசால் வெளியிடப்பட்ட G.O.No.SS

11/320-16/2022 அரசாணையில், அமைச்சரவை முடிவுப்படி, ஆணையத்தின்

பரிந்துரையில் துறை ரீதியான நடவடிக்கை மட்டும் ஏற்றுக்கொள்வதாக

கூறப்பட்டுள்ளது. இது எங்களுக்கு மிகுந்த அதிர்ச்சியையும், மனவேதனையையும்

உண்டாக்கியுள்ளது.

திமுக ஆட்சிக்கு வந்த பின்பு தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில்

பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு கல்வித் தகுதிக்கேற்ற வேலை,

வேலை வாய்ப்பு & வெளிநாடு செல்ல வழக்குத்தடை நீக்கம், ஸ்டெர்லைட்

போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீதும் தலைவர்கள் மீதும் பதியப்பட்ட

வழக்குகள் வாபஸ், சட்ட முரணாக சிறையில் அடைக்கப்பட்டவர்களுக்கு

ரூ.1,00,000/-நிவாரணம் உட்பட பல்வேறு பொருத்தமான துயர்துடைக்கும்

பணிகளை செவ்வனே செயல்படுத்தி உள்ளீர்கள். இன்றுவரை ஸ்டெர்லைட்டை

திறக்க விடாமல் தடுத்து வருகிறீர்கள்.

துறை ரீதியிலான

குற்ற நடவடிக்கையும்,

கொன்றவர்கள் மீதான

நடவடிக்கையும் ஆணைய அறிக்கை வந்தவுடன் தமிழ்நாடு அரசு எடுக்கும் என

எதிர்பார்த்தோம். 

தாங்கள் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது, மக்களை

படுகொலை செய்தவர்கள் எந்த உயர் பொறுப்பில் இருந்தாலும் குற்றவியல்

நடவடிக்கை எடுத்து தண்டிக்கப்படுவார்கள் எனவும், கடந்த அதிமுக அரசின்

ஸ்டெர்லைட் ஆலையை மூடும் அரசாணை பலவீனமானது என்றும் தாங்கள்

ஆட்சிக்கு வந்த பின்பு சிறப்பு சட்டம் இயற்றி ஸ்டெர்லைட் நிரந்தரமாக

அகற்றப்படும் என்றும் உறுதியளித்து இருந்தீர்கள்.

தங்களின் வாக்குறுதியை உண்மையானது, சரியானது, உறுதியாக

நடைமுறைக்கு வரும் என்று ஏற்றுக்கொண்டோம். ஆனால், தற்போது கொலை செய்த போலீசார் மீது குற்ற நடவடிக்கை இல்லை என்பது தூத்துக்குடி மக்களை

அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

எனவே, சட்டப் பேரவையில் தாங்கள் "தவறு செய்தோர் குற்றவாளிக்

கூண்டில் ஏற்றப்படுவார்கள்" என்ற உறுதிமொழியை அமல்படுத்த,

அமைச்சரவையை மறுபடியும் கூட்டி உரிய ஆலோசனை செய்து மேற்படி

அரசாணையை திரும்பப் பெற்றோ அல்லது திருத்தம் செய்தோ துப்பாக்கிச் சூடு

நடத்தி மக்களை கொன்ற போலீஸார் மீதும், அதற்கு துணை போன அதிகாரிகள்

மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டியும், சிறப்பு சட்டமியற்றி

ஸ்டெர்லைட்டை அகற்றி, நீதியை நிலைநாட்டிட வேண்டுமென்றும் தங்களை

மிகுந்த நம்பிக்கையோடு தூத்துக்குடி மற்றும் தமிழ்நாடு மக்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

ஒருங்கிணைந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு

கூட்டமைப்பு

இடம்: தூத்துக்குடி



தூத்துக்குடியில் டிசம்பர் -12 மனு கொடுக்கும் போராட்டம் தொடர்பாக அறிவிப்பு டிசம்பர் -12 திங்கள்கிழமை அன்று மனு கொடுக்க ஸ்டெர்லைட் எதிர்ப்பு தியாகிகளின் குடும்பத்தினர், அனைத்து ஸ்டெர்லைட் எதிர்ப்பு அமைப்பினர் மற்றும் அரசியல் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மட்டும் செல்வது என முடிவு. பெருந்திரளாக மக்கள் கலந்து கொள்ள வேண்டாம் என்று வேண்டுகோள்

   thoothukudileaks 11-12-2022

தூத்துக்குடி மாவட்டம்ஆட்சியரிடம்  மீண்டும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்த தூத்துக்குடி மக்கள் டிசம்பர் -12 மனு கொடுக்கும் போராட்டம் .செய்ய போவதாக அறிவித்து இருந்தார் கள் .

இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் மக்கள் மற்றும் காவல்துறை மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது .



இதுபற்றிய செய்தியாவது:-


நீதிபதி அருணா ஜெகதீசன் பரிந்துரையின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்ட காவல்துறையினர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்காக வரும் 12-12-22 (திங்கள்கிழமை) அன்று ஆட்சியர் வழியாக மனு கொடுப்பதற்கு   மாவட்ட  ஆட்சியர் அலுவலகம் செல்ல முடிவு செய்யப்பட்டிருந்தது.


அதன் பின்னர் மாண்புமிகு  கனிமொழி MP அவர் அமைப்புகளின் நிர்வாகிகளை சந்திக்க அழைப்பு விடுத்திருந்ததின் பேரில் கடந்த 29-11-22 அன்றும், அதே போல மதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சியர் அழைப்பின் பேரில் 07-12-12 மற்றும் 09-12-22 அன்றும் பல்வேறு கிராம, மாநகர ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்த மக்கள் பிரதிநிதிகளுடன் சந்திப்பு நடைபெற்றது. 


அப்போது ஸ்டெர்லைட் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அப்பீல்  வழக்கு வரும் ஜனவரி 17ஆம் தேதி விசாரணைக்கு வருகிறதென்றும், அந்த வழக்கிற்காக தமிழக அரசு நீதிமன்றத்தில் உறுதியாக போராடி ஸ்டெர்லைட்டை மீண்டும் வரவிடாமல் தடுப்போம் என்றும், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு போதிய கால அவகாசம் வேண்டும் எனவும், இதனால் அதிக எண்ணிக்கையில் மக்கள் கலந்து கொள்ள வேண்டாம், நிர்வாகிகள் / பிரதிநிதிகள் மட்டும் 12-12-22  அன்று மனு கொடுக்குமாறு கேட்டுக் கொண்டனர்.


அதன் பின்னர் 08-12-22 அன்று அனைத்து ஸ்டெர்லைட் எதிர்ப்பு அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் கலந்து பேசி, அரசு தரப்பின் கோரிக்கை குறித்தும், ஜனவரி 17ல் உச்சநீதிமன்றத்தில் இறுதி விசாரணைக்கு வரும் வழக்கு மற்றும் நிலவும் சூழல்கள் குறித்தும் விரிவாக பரிசீலிக்கப்பட்டது. 



 மாண்புமிகு. திருமதி கனிமொழி MP மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவரின் உறுதிமொழியை பரிசீலித்த பின்னர் டிசம்பர் -12 திங்கள்கிழமை அன்று மனு கொடுக்க செல்வதென்றும், பெருந்திரளாக மக்கள் கலந்து கொள்ள வேண்டாம் என்றும், குறிப்பாக ஸ்டெர்லைட் எதிர்ப்பு தியாகிகளின் குடும்பத்தினர், அனைத்து ஸ்டெர்லைட் எதிர்ப்பு அமைப்பினர் மற்றும் அரசியல் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மட்டும் செல்வது என முடிவு செய்யப்பட்டது.


ஒரு வேளை நமது கோரிக்கைகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் நிறைவேற்றப்படவில்லை என்றால் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்காக நாம் கலந்தாலோசனை செய்து அதற்கடுத்த கட்ட போராட்டம் குறித்து முடிவு செய்யப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.


டிசம்பர்-12 போராட்டத்திற்கு முழு அளவில் தயாராகி வந்த அனைத்து பொதுமக்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.


எனவே மேற்கண்ட வேண்டுகோளை ஏற்று தொடர்ந்து ஆதரவும், ஒத்துழைப்பும் தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு தெரிவித்துள்ளார் கள்.

வியாழன், 8 டிசம்பர், 2022

ஸ்டெர்லைட் எதிர்ப்பு துப்பாக்கிச் சூடு விவகாரத்தில் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் சுட்டிக்காட்டிய 17 பேர் மீது ஆணையத்தின் பரிந்துரைப்படி சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்! - எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல்

   thoothukudileaks 8-12-2022

 எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;


தூத்துக்குடியில் உயிர்கொல்லி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் நடத்திய போராட்டத்தில் காவல்துறையின் அநியாயமான துப்பாக்கிச் சூட்டில் மாணவி ஸ்னோலின் உட்பட 14 பேர் படுகொலை செய்யப்பட்டனர். காவல்துறையின் அநியாய துப்பாக்கிச் சூடு நடவடிக்கைகள் குறித்து விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட நீதிபதி அருணாஜெகதீசன் ஆணையம், மாவட்ட நிர்வாகம், காவல்துறை உயர் அதிகாரிகளை குற்றப்படுத்தி அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பரிந்துரை செய்திருந்தது.



விசாரணை ஆணையத்தின் அறிக்கையும், பரிந்துரைகளும் கடந்த அக்டோபர் மாதம் 18ம் தேதி சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் அறவழியில் போராடிய மக்களின் மீது நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச்சூடு மிருகத்தனமானது என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும், துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தங்களது பொறுப்புகளை தட்டிக்கழித்த தூத்துக்குடி மாவட்டத்தின் அப்போதைய ஆட்சியர் மட்டுமின்றி, மூன்று வருவாய் துறை அதிகாரிகள், அப்போதைய தென் மண்டல காவல்துறை தலைவர், திருநெல்வேலி சரக காவல் துறை துணைத் தலைவர், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், ஒரு காவல் துணைக் காண்காணிப்பாளர், மூன்று ஆய்வாளர்கள், ஒரு சார்-ஆய்வாளர் மற்றும் 7 காவலர்கள் உள்ளிட்ட 17 பேர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விசாரணை ஆணையம் பரிந்துரை செய்திருந்தது.


ஜனநாயகத்தின் மீது விழுந்த கரும்புள்ளியாக உள்ள தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டிற்கு விரைவாக நீதி கிடைக்கப்பெற வேண்டும், தவறிழைத்தவர்கள் மீது சட்டப்படி நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே நீதியை விரும்பும் அனைவரின் எதிர்ப்பார்ப்பாகும். விசாரணை ஆணையத்தின் அறிக்கை மீது உரையாற்றிய தமிழக முதல்வர் அவர்களும், தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் தவறிழைத்தவகள் கூண்டில் ஏற்றப்படுவார்கள் என தெரிவித்தார். 


ஆனால், இதுதொடர்பாக வெளியான அரசாணையில் உயர் அதிகாரிகள் மீது நீதித்துறை நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படாமல், துறை ரீதியான நடவடிக்கை மட்டுமே மேற்கொள்ள முடிவு செய்திருப்பது அதிர்ச்சி அளிக்கின்றது. குற்றத்தில் தொடர்புடைய கடைமட்டத்தில் உள்ள 7 காவலர்கள் மட்டும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், மற்றவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை மட்டுமே மேற்கொள்ளப்படுவது ஏற்புடையதல்ல.


ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவம் முழுக்க முழுக்க ஆலை நிர்வாகம் மற்றும் ஆலை நிர்வாகத்துக்கு ஆதரவான உயர் அதிகாரிகளின் சதியின் பேரிலேயே நிகழ்ந்துள்ளது என்பது ஆணையத்தின் அறிக்கை மூலம் தெரிய வருகிறது.  அறவழியில் போராடிய பொதுமக்கள் மீது மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை பெரும் குற்றத்தை இழைத்தது என்பது சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் நடவடிக்கை அல்ல; மாறாக அது ஆலைக்கு ஆதரவான சதியின் அடிப்படையிலான நடவடிக்கை என்பது விசாரணை ஆணையத்தின் அறிக்கையாகும். சதிச் செயல் மூலம் 13 உயிர்களை கொன்ற குற்றத்திற்கு வெறும் துறை ரீதியான நடவடிக்கை என்பது நீதி மற்றும் சட்ட அடிப்படையிலான நடவடிக்கை அல்ல.


தூத்துக்குடி துப்பாக்கி சூடு நடந்தபோது அன்றைய ஆட்சியாளர்கள் மீது கடுமையான விமர்சனங்களையும், குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தும் துப்பாக்கி சூட்டுக்கு காரணமானவர்களை ஆட்சிக்கு வந்தவுடன் தண்டிப்போம் என்று உறுதியளித்த நிலையில், ஆட்சிக்கட்டிலில் அமர்ந்து விசாரணை ஆணையத்தின் அறிக்கை கிடைத்த பின்னர், துறை ரீதியான நடவடிக்கைகளை மட்டும் மேற்கொள்வது என்பது நீதிக்காக காத்திருக்கும் மக்களை ஏமாற்றுவது போல் உள்ளது.


ஆகவே, தமிழக அரசு தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விவகாரத்தில் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் சுட்டிக்காட்டிய 17 அதிகாரிகள் மீது மட்டுமின்றி, தொடர்புடைய அனைத்து அதிகார வர்க்கத்தை சேர்ந்தவர்கள் மீதும் சட்ட நடவடிக்கையை தாமதமின்றி விரைவாக மேற்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவாக நீதி கிடைக்கச் செய்திட வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.


இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

திங்கள், 24 அக்டோபர், 2022

இனி ஸ்டெர்லைட் தொலைஞ்சதது போ..?! செல்போனில் தூத்துக்குடியில் காற்றின் தரத்தை அறிந்துகொள்ள புதிய வசதி !

 தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி மாநகரத்தில் தூத்துக்குடி பொதுமக்கள் தங்கள் செல்போனில் காற்றின் தரத்தை அறிந்துகொள்ளலாம் அதற்கு கூகுள் மேப்ஸ் வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.

தூத்துக்குடி சுற்றி பல காற்றை மாசு ஏற்படுத்த கூடிய ஆலைகள் இருப்பதாக சமுக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர் மாசுகட்டுபாடு அதிகாரி கள் மழுப்பி சமாளிக்க முடியாது இனி ஸ்டெர்லைட் போன்ற ஆலைகள் தொலைந்தது போ என்கிறார்கள்.


கூகுள் மேப்ஸ் 

காற்றின் தரத்தை அறிந்துகொள்ளும் வசதி கூகுள் மேப்ஸ் தளத்தில் உள்ளது. இதன் மூலம் பயனர்கள் தங்கள் பகுதியில் உள்ள காற்றின் தரத்தை தெரிந்து கொள்ள முடியும். அது எப்படி என்பது குறித்து பார்ப்போம்.


இப்போதெல்லாம் ஏதேனும் ஒரு புதிய இடத்திற்கோ அல்லது ஊருக்கோ செல்வதென்றால் பெரும்பாலனவர்கள் கூகுள் மேப்ஸ் துணையை நாடுவதுண்டு. லொகேஷனை பகிர்ந்தால் போதும் உலகின் எந்த பகுதியில் உள்ள இடமானாலும் கூகுள் மேப்ஸ் அறியும் என சொல்லலாம். அந்த அளவிற்கு உலகம் முழுவதும் இந்த அப்ளிகேஷன் மிகவும் பிரபலமானது. இந்த அப்ளிகேஷன் மூலம் பயனர்கள் காற்றின் தரத்தையும் அறிந்து கொள்ளலாம்.


பயன்படுத்துவது எப்படி?


மொபைல் போனில் கூகுள் மேப்ஸ் செயலியை ஓப்பன் செய்ய வேண்டும்.

பின்னர் லேயர் ஐகானை கிளிக் செய்ய வேண்டும்.

அதில் ஸ்ட்ரீட் வியூ, 3டி, டிராஃபிக் வரிசையில் காற்றின் தரம் (ஏர் குவாலிட்டி) இருக்கும்.

அதன் மூலம் பயனர்கள் காற்றின் தரத்தை அறிந்து கொள்ளலாம்.

இதற்காக காற்றின் தரத்தை கணக்கிடும் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் போன்ற இந்திய அமைப்புகளுடன் இதற்காக இணைந்துள்ளது கூகுள். நலம், திருப்திகரம், மிதம், மோசம், மிகவும் மோசம் என்ற வகையில் இது வகைப்படுத்தப்பட்டுள்ளது. 

காற்றின் தரத்திற்கு ஏற்ப இதன் நிறம் வகைப்படுத்தப்பட்டுள்ளது. அதே போல குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டுமே இப்போதைக்கு இதன் மூலம் காற்றின் தரத்தை அறிந்து கொள்ள முடிகிறது. காற்றின் தரம் மோசமானால் அந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு பல்வேறு ஆரோக்கிய நலன் சார்ந்த சீர்கேடுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

புதன், 19 அக்டோபர், 2022

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எதற்காகத் துப்பாக்கிச்சூட்டுக்கு அனுமதியளித்தார்? யாருக்காக இதுவெல்லாம் நடந்தது? அனில் அகர்வாலை மனம் நிறைவடையச் செய்யவா? நாம் தமிழர் சீமான் பரபரப்பு மேலும் படிக்க...

 தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு துப்பாக்கிச்சூட்டுக்குக் காரணமான அரசு அதிகாரிகள், காவல்துறையினர், முந்தைய அரசின் ஆட்சியாளர்கள் மீது கொலைவழக்குப் பதிவுசெய்து கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் – சீமான் வலியுறுத்தல் 



இதுபற்றிய செய்தியாவது:- 

தூத்துக்குடியிலுள்ள ஸ்டெர்லைட் தாமிர ஆலைக்கெதிராக மண்ணின் மக்கள் நடத்திய மக்கள்திரள் போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தியும், தடியடி நடத்தியும் 14 உயிர்களைப் பறித்த முந்தைய அதிமுக அரசின் அரசப்பயங்கரவாத நடவடிக்கையை விசாரிக்க அமைக்கப்பட்ட நீதியரசர் அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையத்தின் இறுதி அறிக்கை பல உண்மைகளை வெளிக்கொண்டு வந்திருக்கிறது. 


சமூக விரோதிகள் என முத்திரைக் குத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட மண்ணின் மக்களுக்கான நீதியை நிலைநாட்டும்விதமாக, போராட்டக்களத்தில் நடந்த உண்மைகளை வெளிக்கொணர்ந்திருக்கிறார்.அம்மையார் அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும். 


தூத்துக்குடி மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடும் அநீதியை மக்கள் மன்றத்திலும், ஆணையத்தின் முன் நேர்நின்றும் தொடர்ச்சியாக எடுத்துரைத்து வந்தேன். அவற்றைப் பிரதிபலிப்பது போல, சட்டமன்றத்தில் முன்வைக்கப்பட்டிருக்கிறது 


ஆணையத்தின் அறிக்கை. தூத்துக்குடி மக்களின் மீது சுமத்தப்பட்ட அவப்பெயரையும், பழிச்சொல்லையும் முழுமையாகப் போக்கி, ஆளும் வர்க்கத்தின் கோரப்படுகொலைகளைத் தோலுரித்த அம்மையார் அருணாஜெகதீசன் அவர்களுக்கு எனது உளப்பூர்வமானப் பாராட்டுகளையும், பெரும் நன்றியையும் 

தெரிவித்துக்கொள்கிறேன். 


ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடைபெற்ற அறப்போராட்டத்தின் நூறாவது நாளில், பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கிப் பேரணியாய் வந்தபோது... அவர்களை நோக்கித் தடியடியும், துப்பாக்கிச்சூடும் நடத்தி, அடக்குமுறையையும், ஒடுக்குமுறையையும் கட்டவிழ்த்து விடப்பட்டது. 


பேரணி நடைபெற்ற இடத்திற்குத் தொடர்பே இல்லாது தொலைதூரத்திலுள்ள பகுதியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் அம்மையார் ஜான்சி படுகொலை செய்யப்பட்டார் என்பதும், போராட்டத்திற்கு அடுத்த நாள் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டிலும் ஒருவர் பலியானார் என்கிற இரு சம்பவங்களே, இத்துப்பாக்கிச் சூடு திட்டமிட்டு நிகழ்த்தியப் பச்சைப்படுகொலை என்பதற்கான சாட்சியங்களாகும். 


காவல்துறையினர் போராட்டக்காரர்களின் முட்டிக்குக் கீழே சுடுகிற வகையில் வெள்ளை ஏகாதிபத்திய ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட விதிமுறையையே நாம் ஏற்காதபோது, போராட்டக்காரர்களின் தொண்டை, மார்புப்பகுதிகளைக் குறிவைத்து சுட்டு, தூத்துக்குடி மக்களைச் சுட்டுக் கொன்றொழித்தக் கொடுங்கோன்மையை எப்படி சகித்துக்கொள்ள முடியும்? மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குள் தீ வைக்கப்படுவதற்கு முன்பே, அங்கு துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது; 


பொதுமக்கள் தப்பியோடும்போதும் அவர்களைக் குறிவைத்து சுட்டுக் கொன்றிருக்கிறார்கள் என்பதும், அவர்கள் எவ்வித ஆயுதமும் இல்லாத நிராயுதபாணியாக நின்றார்கள் என்பதும் அறிக்கையில் தெளிவாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூடு தற்காப்பு நடவடிக்கையாக மேற்கொள்ளப்படவில்லை; மாறாக, மக்களைக் கொன்றுகுவிக்கும் நோக்கத்தோடே நிகழ்த்தப்பட்டது என்பதை அம்மையார் அருணா ஜெகதீசன் ஆதாரத்தோடு உறுதிசெய்திருக்கிறார். 


துப்பாக்கிச்சூடு குறித்தான முன் எச்சரிக்கை மக்களுக்குக் கொடுக்கப்படாததும், சுடப்பட்டவர்களில் ஒருவர்கூட முட்டிக்குக் கீழே சுடப்படவில்லை என்பதும் இது திட்டமிட்டப் படுகொலை என்பதை ஆணித்தரமாகக் கூற போதுமான காரணமாகும். 


போராட்டக்காரர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையேயான வேறுபாட்டை அறியப் பாதுகாப்புக்கு வரும் காவல்துறையினர் கட்டாயம் சீருடையில்தான் வர வேண்டும் எனும் விதியிருக்கும்போது, சீருடை அணியாத காவலர்கள் அதிநவீனத்துப்பாக்கியோடு எப்படிக் களத்திற்கு வந்தார்கள்? துப்பாக்கிச்சூடு நடக்கப்போகிறது என்பது முன்கூட்டியே எப்படி அவர்களுக்குத் தெரிந்தது? கூட்டத்தைக் கலைக்க வழிவாய்ப்புகள் இருந்தும் அதனைச் செய்யாது, துப்பாக்கிச்சூட்டைக் கையிலெடுத்தது எதற்காக? எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமலும், கூட்டத்திலிருந்து தப்பியோடியவர்களைக்கூட விடாமலும், காவலர்கள் வாகனத்தின் மீது ஏறி நின்று, போராட்டக்காரர்களைக் குறிவைத்துச் சுட்டுக்கொன்றது எதனால்? போராட்டத்தில் சுடப்பட்டவர்கள், காயம்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்ட அரசு மருத்துவமனையின் வளாகத்தில்கூட துப்பாக்கிச்சூடு நடத்த வேண்டிய தேவையென்ன வந்தது? இவ்வளவு பெரிய போராட்டம் நகரத்தில் நடந்து கொண்டிருக்கும் நாளன்று, தூத்துக்குடியில் இல்லாது மாவட்ட ஆட்சியர் கோவில்பட்டிக்கு ஏன் சென்றார்? துப்பாக்கிச்சூட்டுக்கு அனுமதி அளித்தது வட்டாட்சியர்கள்தான் எனக்கூறுவது உண்மைக்குப் புறம்பானது இல்லையா? நாடே உற்றுநோக்கிக்கவனிக்கிற ஒரு போராட்டத்தில், மத்திய/மாநில அரசின் அனுமதியில்லாமல் மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த அனுமதியளிக்கிற அளவுக்கு வட்டாட்சியர்களுக்கு இந்த அமைப்பில் அதிகாரமும், வலிமையும் இருக்கிறதா? என நீளும் கேள்விகள் யாவும் வேதாந்தா குழுமத்துக்கு ஆதரவாக மண்ணின் மக்களைக் கொன்றொழிக்க அன்றைய அரசுகள் நிகழ்த்திய சதிச்செயலை அம்பலப்படுத்துகிறது. 


நீதியரசர் அருணாஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் ஆணையத்தின் அறிக்கையில், காக்கை, குருவிகளைப் போல, மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்; 


காவல் துறையினர் ஒளிந்துகொண்டு தப்பித்து ஓடியவர்களையும் சுட்டுப்படுகொலை செய்துள்ளனர் எனக்கூறி, 17 காவல்துறையினர் பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்குப் பரிந்துரை அளிக்கப்பட்டிருக்கிறது. 


மேலும், தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் காவல்துறை அதிகாரி சுடலைக்கண்ணு மட்டும் 17 சுற்றுகள் சுட்டுள்ளார் எனவும், 4 இடங்களில் அவரைச் சுட வைத்ததன் மூலம், அடியாள் போல காவல்துறை பயன்படுத்தியுள்ளது எனவும், காவல்துறை தலைமையின் அப்பட்டமான தோல்விதான் தூத்துக்குடி படுகொலை எனவும் கூறியுள்ளது 

ஆணையத்தின் அறிக்கை. 14 உயிர்களைப் பலிகொண்ட படுகொலைகளுக்கு முழுமுதற் பொறுப்பேற்க வேண்டிய அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ‘தொலைக்காட்சியைப் பார்த்துதான் துப்பாக்கிச்சூட்டைத் தெரிந்துகொண்டேன்’ எனக்கூறிய பொருந்தா வாதம் முழுமையானப் பொய்யென்பதை அம்பலப்படுத்தியிருக்கிறது ஆணையத்தின் அறிக்கை. 


துப்பாக்கிச்சூடு குறித்தான ஒவ்வொரு செய்தியும் முதல்வருக்குத் தெரிவிக்கப்பட்டு வந்திருக்கிறது என்பதன் மூலம் அதிமுக அரசால் நிகழ்த்தப்பட்டப் படுகொலையே தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு என்பது தெளிவாகிறது. 


முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி  எதற்காகத் துப்பாக்கிச்சூட்டுக்கு அனுமதியளித்தார்? எதற்காகப் பச்சைப்படுகொலைகளை அரங்கேற்றினார்? யாருக்காக இதுவெல்லாம் நடந்தது? அனில் அகர்வாலை மனம் நிறைவடையச் செய்யவா? பிரதமர் மோடியை மனம்நிறைவடையச் செய்யவா? இது மன்னிக்கவே முடியாத கொடுந்துரோகம்! வாக்குச்செலுத்தி ஆட்சியதிகாரத்தில் ஏற்றி வைத்த மண்ணின் மக்களையே அரச வலிமையைக் கொண்டு, படுகொலை செய்திட்ட இக்கொடுஞ்செயலை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது.


ஆகவே, நீதியரசர் அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையத்தின் பரிந்துரைகளை ஏற்று, துப்பாக்கிச்சூட்டுக்குப் பலியானோர் குடும்பத்தினருக்கு 

50 இலட்ச ரூபாயும், காயமுற்றவர்களுக்கு 10 இலட்ச ரூபாயும் துயர்துடைப்புத்தொகை உடனடியாக வழங்க வேண்டுமெனவும், துப்பாக்கிச்சூட்டை நிகழ்த்திய 17 காவல்துறையினர் மீது மட்டுமல்லாது, சுட ஆணையிட்ட அரசு அதிகாரிகள், முந்தைய அரசின் ஆட்சியாளர்கள் மீதும் கொலைவழக்குப் பதிவுசெய்து, அவர்கள் மீதும் கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

-செந்தமிழன் சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு துப்பாக்கிச்சூடு! முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியையும் குற்றவாளியாக சேர்த்து - அனைவர் மீதும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்தல்! மேலும் படிக்க...!


 தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு துப்பாக்கிச்சூடு! முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியையும் குற்றவாளியாக சேர்த்து - அனைவர் மீதும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்தல் செய்துள்ளது.

இதுபற்றிய செய்தியாவது:-

தூத்துக்குடி ஸ்டெர்லைட்ஆலை எதிர்ப்பு போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது குறித்த ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கையை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு வரவேற்கிறது. 


அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள, மாவட்ட ஆட்சித்தலைவர், வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீது துறைவாரியான நடவடிக்கைகள் எடுப்பதுடன் உரிய குற்றவியல் நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும். அத்துமீறி கொலை செய்வது, உயர் அதிகாரிகளின் ஆணைப்படி செய்யப்பட்டாலும் கூட  கொலைக் குற்றமாகவே கருதப்பட வேண்டும். எனவே போராடிய மக்களின் மீது சட்டத்திற்கு புறம்பாக  துப்பாக்கிச் சூடு நடத்தி பலரது மரணத்திற்கும், பலரது உடல் உறுப்புகள் சேதப்படுத்தப்பட்டதற்கும், பலர் மீதான பொய் வழக்குகளுக்கும் காரணமாக இருந்த காவல்துறை அதிகாரிகள், அந்த குற்றங்களுக்கு உரிய சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வற்புறுத்துகிறது.



இத்தகைய உயிரிழப்புகளுக்கும், அமைதி குலைவிற்கும், முதலீட்டுச் சூழல் பாதிக்கப்பட்டதற்கும் அன்றைய அதிமுக அரசு மற்றும் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி முழுமையாக பொறுப்பேற்க வேண்டும். எனவே, முற்றிலும் பொறுப்பற்ற முறையில் தனக்கு எதுவும் தெரியாது என்று ஊடக சந்திப்பில் அப்பாவி போல பேசி, இந்த குற்றங்களிலிருந்து தப்பிக்க அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி முயற்சித்துள்ளார். தனது பொறுப்பினை மூடி மறைக்கும் நோக்கிலேயே எடப்பாடி அரசு கடைசி வரை துப்பாக்கிச் சூட்டுக்கு பொறுப்பானவர்கள் மீது சிறு நடவடிக்கை கூட மேற்கொள்ளாமல் அவர்களை பாதுகாத்து வந்துள்ளார். எனவே,  எடப்பாடி பழனிச்சாமி இக்குற்றங்களுக்கு முழு பொறுப்பாக்கப்பட்டு குற்றவாளியாக சேர்க்கப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.


மாவட்ட ஆட்சியர், வருவாய்த்துறையினர் மற்றும் காவல்துறையினர், இத்தனை வன்மத்தோடு முன்னெடுத்த தாக்குதலுக்கும், தங்களுடைய வரம்பை மீறிச் செயல்பட்டதற்கும் நோக்கங்களும் காரணங்களும் உள்ளன. 


உச்ச நீதிமன்றத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவராக இருந்த . ஆஷிஸ்குமார் ஐ.ஏ.எஸ் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தை உச்ச நீதிமன்றம் ‘இது மாவட்ட நிர்வாகத்தின் பிரமாண பத்திரமா, ஸ்டெர்லைட் நிர்வாகத்தின் பிரமாண பத்திரமா’ என்று கேள்வி எழுப்பி, வேறு பிரமாண பத்திரம் தாக்கல் செய்திட பணித்ததை நினைவூட்ட விரும்புகிறோம்.


எனவே, அதிகாரிகள் தவறு இழைப்பதற்கும், வரம்பினை மீறி செயல்பட்டதற்கும் ஸ்டெர்லைட் நிர்வாகத்தின் பின்னணியும், தலையீடும் இல்லையென்பதற்கான வாய்ப்புகளே இல்லை. அத்தகைய ஸ்டெர்லைட் நிர்வாகத்தை பற்றி, நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கை கண்டும் காணாமல் இருப்பது சரியல்ல. 


ஸ்டெர்லைட் உட்பட, மாநிலத்தின் பிற பகுதிகளில் இயங்கிக் கொண்டிருக்கும் பல பன்னாட்டு, உள்நாட்டு பெரு நிறுவனங்கள், சம்பந்தப்பட்ட அரசுத்துறைகளை தங்களுடைய கட்டுக்குள் கொண்டுவந்து சட்டத்தை மீறி செயல்படுவது வழக்கமாக மாறியுள்ளது. 

எனவே இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காமலிருக்க தமிழ்நாடு அரசு தேவையான, சட்டப்படியான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.


மக்கள் தங்கள் அனுபவத்திலிருந்து போராடிக் கொண்டிருந்த போது, பொருத்தமற்ற முறையில் அரசியல் மற்றும் சுயநல நோக்கில் இருந்து 4 காவல்துறையினரை தாக்கிய பிறகுதான் காவல்துறையினர் திருப்பி தாக்கினார்கள்’ என்று பேசிய திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் மற்றும் பிற பிரபலங்கள் எதிர்காலத்தில் இத்தகைய தேவையற்ற கருத்துக்கள் வெளியிடுவதை தவிர்க்க வேண்டும். திரு. ரஜினிகாந்த் தமிழ்நாட்டு மக்களிடம் வருத்தம் தெரிவிக்க வேண்டும்.


துப்பாக்கிச் சூடு என்று மட்டும் இந்த சம்பவத்தை தமிழக அரசு தனித்துப் பார்க்கக் கூடாது. ஸ்டெர்லைட் ஆலை தொடங்கப்பட்ட காலத்தில் இருந்தே சுற்றுச்சூழல், தொழிலாளர் நலன் உள்ளிட்ட பல்வேறு விதி மீறல்களை அப்பட்டமாக மேற்கொண்டு, சட்ட விரோதமாகவே நடந்துகொண்டு வந்திருக்கிறது அந்த நிறுவனம். பசுமை வளாகம் அமைக்க மறுத்தது, தாமிர தாது கொண்டு வரும்போது கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு விதிகளை மறுத்தது, நச்சுக் கழிவுகளை பாதுகாப்பற்ற முறையில் மண்ணையும், காற்றையும், நீரையும் மாசு படுத்தும் விதத்தில் கொட்டியது. தங்களது நிறுவன கழிவு நீரை பொது ஓடையில் கலக்கச் செய்தது உள்ளிட்ட ஏராளமான புகார்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பிலும், பல்வேறு அரசியல் மற்றும் சமூக இயக்கங்களின் சார்பிலும் பல முறை அதிகாரிகள் மற்றும் அரசின் கவனத்திற்கு கொண்டுவந்த பிறகும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாததே இந்த போராட்டம் நடைபெறுவதற்கான காரணமாக அமைந்தது. எனவே முறையான நடவடிக்கைகள் எடுக்காத மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அதிகாரிகள், மாவட்ட நிர்வாகத்தின் மீது உரிய துறைவாரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.


14 உயிர்கள் கொல்லப்படுவதற்கும், சட்டம் ஒழுங்கு குலைவதற்கும் முதலீட்டுச் சூழல் பாதிக்கப்படுவதற்கும் தமிழ் நாட்டின் பெருமை குலைவதற்கும் இட்டுச் சென்ற மிக மோசமான சம்பவம் இது என்பதால் ஆரம்பம் தொட்டு அதன் காரணங்கள் ஆராயப்பட்டு, நடவடிக்கைகள் மேற்கொள்வதுடன் எதிர்காலத்தின் இப்படிப்பட்ட நிலைமை ஏற்படாமலிருக்க உரிய வழிமுறைகளை தமிழ் நாடு அரசாங்கம் உருவாக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் ) கேட்டுக்கொள்கிறது.


ஒரு மாவட்டத்தில், ஒரு தொழில் நிறுவனம் உருவாக்கப்படுகிறபோது அந்த மாவட்ட மக்கள் நிலம், நீர் உள்ளிட்ட வளங்களை அளிக்கிறார்கள். அதுமட்டுமின்றி எவ்வளவு பாதுகாப்பான தொழிலாக இருந்தாலும் மாசுபடுதல் தவிர்க்கவே முடியாதது. அதையும் அந்த பகுதி மக்களே ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால், ஸ்டெர்லைட் நிர்வாகம் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின்பு அன்றாட பணிகளுக்கும், ஒப்பந்தப் பணிகளுக்கும் வெளி மாநிலத்தவரை பயன்படுத்தியதும் உள்ளூர் மக்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. இதனையும் கணக்கிலெடுத்து தொழிற்சாலை உருவாக்கப்பட்டால் அதில் உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பினை உத்திரவாதப்படுத்த உரிய ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழக அரசை வலியுறுத்துகிறது.


கே.பாலகிருஷ்ணன்


மாநில செயலாளர்

எடப்பாடி பழனிச்சாமி கூறிய பச்சை பொய் ?! தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தில் இரக்கமற்ற அதிமுக ஆட்சி நடத்திய அந்தத் துப்பாக்கிச் சூட்டில் யார் யாரெல்லாம் குற்றவாளிகளோ அவர்கள் அனைவரும் உறுதியாக தண்டிக்கப்படுவார்கள். முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி

 அதிமுக ஆட்சியின் ஆணவத்துக்கும், எடப்பாடி பழனிசாமியின் எதேச்சதிகாரத்துக்கும் உதாரணமாக அமைந்த ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தமிழ்நாட்டுக்குக் கரும்புள்ளி.





எதிர்க்கட்சித் தலைவராக அங்கு சென்றபோது, ஒலித்த துப்பாக்கிச் சூட்டின் சத்தமும், மக்களின் மரண ஓலமும், இன்றும் என் மனதை வாட்டுகிறது. துயரமும், கொடுமையும் நிறைந்த அந்தச் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை இப்போது நினைத்தாலும் உடல் நடுங்குகிறது.

இதுகுறித்து, நீதியரசர் அருணா ஜெகதீசன் ஆணையம் தெரிவித்துள்ள கருத்துக்களின் அடிப்படையில், தூத்துக்குடி ஆட்சியர், வருவாய்த் துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட அலுவலர்கள் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கடப்பாறையை முழுங்கி விட்டு கசாயம் குடித்தான்’ என்பது போல, தூத்துக்குடித் துப்பாக்கிச்சூட்டில் நடந்தக் கொடுமையான தகவல்களை நேரடி வர்ணனை போல கேட்டுக் கொண்டிருந்துவிட்டு, ‘டிவியில் பார்த்துதான் தெரிந்து கொண்டேன்’ என்று உண்மைக்கு மாறான தகவலை எடப்பாடி பழனிசாமி சொல்லியிருப்பது விசாரணை அறிக்கையில் வெளியாகியுள்ளது.

மேலும், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அமைதி ஊர்வலம் நடத்திய மக்கள் மீது திட்டமிட்டுத் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு இருப்பதை ஆணைய அறிக்கை உறுதிபடுத்தியுள்ளது.

இரக்கமற்ற அதிமுக ஆட்சி நடத்திய அந்தத் துப்பாக்கிச் சூட்டில் யார் யாரெல்லாம் குற்றவாளிகளோ அவர்கள் அனைவரும் உறுதியாக தண்டிக்கப்படுவார்கள். துப்பாக்கிச் சூட்டில் பலியான 13 பேரின் குடும்பத்துக்குக் கூடுதலாக ரூ. 5 இலட்சம் வழங்கப்படும்.

இவ்வாறு தெரிவித்தார்.

செவ்வாய், 18 அக்டோபர், 2022

தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்கவும் காயமடைந்த வர்களுக்கு ரூ10லட்சம் வழங்கவும் விசாரணை ஆணையம் பரிந்துரை

ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வரும் காயமடைந்த வர்களுக்கு ரூ 10லட்சம் வழங்கவும் விசாரணை ஆணையம் பரிந்துரை இன்று நடைபெற்ற தமிழக சட்டபேரவையில் தாக்கல் செய்துள்ளது.



இதுபற்றிய செய்தியாவது:-

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு துப்பாக்கிச்சூடு தொடர்பான விசாரணை அறிக்கை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 


இதில்  துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்கவும், அப்போதைய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் 3 வருவாய்த்துறை அலுவலர்கள் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கவும், 17 காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் பரிந்துரை வழங்கியுள்ளது.


ஸ்டர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் உள்ள பொதுமக்கள் கடந்த 2018-ம் ஆண்டு போராட்டம் நடத்தினர். 100-வது நாள் போராட்டத்தின் போது நடைபெற கலவரத்தில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை செய்து அறிக்கை தக்கல் செய்ய அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையமானது அமைக்கப்பட்டது.


22-05-2018-ம் நாள் நடைபெற்ற துப்பாக்கி சூட்டின் விளைவாக இறப்பு, காயங்கள் ஏற்பட்டதற்கான காரணங்கள், சூழ்நிலைகள் குறித்தும், தூத்துக்குடியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு காரணமாக பொது சொத்துக்கள், தனியார் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதம் உள்ளிட்ட முந்தைய நிகழ்வுகள் குறித்து விசாரணை செய்வதற்கு ஆணையமானது அமைக்கப்பட்டு பல்வேறு தரப்பு விசாரணையானது நடத்தப்பட்டது.


அந்த விசாரணையின் அடிப்படையில் 17 நபர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அவரது கல்வி தகுதியின் அடிப்படையில் வேலை வாய்ப்பு வழங்க ஆணைகள் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கவும் பரிந்துரைக்கப்பட்டது. இந்த விசாரணை ஆணையத்தின் அறிக்கையானது அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது.


பல கோணங்களில் ஒட்டுமொத்தமாக கருதும் போது இந்த சம்பந்தமானது காவல்துறை அவர்களுக்கு உரிய அதிகாரத்தை பயன்படுத்தியற்கான நிகழ்வு அல்ல என்று நிச்சியமாக காவல்துறை வரம்பு மீறியுள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

ஸ்டெர்லைட் கலவரத்தை கட்டுப்படுத்த காவல்துறை உயர் அதிகாரிகளிடம் ஒருங்கிணைப்பு இல்லை. போராட்டக்காரர்களை எச்சரிக்கும் விதமாக அவர்களுக்கு எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. 

தூத்துக்குடி தனியார் மருத்துவமனையில் நுழைந்து கண்ணில் பட்டோரையெல்லாம் காவலர்கள் தாக்கியுள்ளனர் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதன் அடிப்படையில், காவல்துறை தரப்பில் மிகை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விசாரணை ஆணையம் முடிவுக்கு வந்ததை அடுத்து, குற்றவியல் நடவடிக்கை எடுப்பதற்கு குந்தகம் இன்றி அப்போதைய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் 3 வருவாய்த்துறை அலுவலர்கள் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கவும் 17 காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் பரிந்துரை வழங்கியுள்ளது.


விசாரணை ஆணையம் இறந்தவர்களின் உறவினர்கள், சட்டபூர்வ வாரிசுகளுக்கு தலா ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்கவும், காயமடைந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.


இறந்துபோன ஜஸ்டின் செல்வமிதீஷின் உயிரிழப்பை துப்பாக்கிசூட்டில் உயிரிழந்த 13 நபர்களுக்கு இணையாக பாவித்து அவர்களது குடும்பத்தினருக்கு அரசு சார்பில் தகுந்த நிவாரணத்தை வழங்கவும், அவரது தாயாருக்கு அரசு பணி வழங்கவும், பலத்த காயமடைந்த காவலர் மணிகண்டனுக்கு மருத்துவ வசதிக்கான நிவாரணம் வழங்கவும் ஆணையமானது பரிந்துரைத்துள்ளது.


இதுபோன்ற நிகழ்வுகள் எதிர்காலங்களில் நிகழாமல் இருக்க தகுந்த நடவடிக்கை எடுக்கவும் ஆணையமானது பரிந்துரை வழங்கியுள்ளது.

.

திங்கள், 5 செப்டம்பர், 2022

சுதந்திர போராட்ட போராளி ஐயா வ உ சிதம்பரனார் 151-வது பிறந்த நாள் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் & அரசியல் கட்சி தலைவர்கள் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவிப்பு

 ஏகாதிபத்திய எதிர்ப்பின் அடையாளம் வ.உ.சி. (5 செப். 1872 - 18 நவ. 1936); ஏகாதிபத்திய எதிர்ப்பின் அடையாளமாகவும் தொழிலாளி வர்க்கத்தை திரட்டுவதற்கான வடிவமாகவும் திகழ்ந்தவர். 


சுதந்திர போராட்ட போராளி கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் இன்று அவரது .151-வது பிறந்த நாள் 

தூத்துக்குடியில் பல்வேறு அமைப்புகள் அரசியல் கட்சிகள் பழைய நகராட்சியில் வீற்றிருக்கும் வ.உ.சி திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார்கள். 


ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு கிருஷ்ணமூர்த்தி, தோழர் சுஜித், மகேஷ் ஆகியோர் தலைமையில் மாலை அணிவித்து வீர முழக்கம்் செய்தனர்.

வீடியோ பார்க்க
தூத்துக்குடி மாவட்ட செயலாளர் தலைமையில் பிஜேபி யினர் .. வக்கீல் சந்தணராஜ் வக்கீல் வாரியார், கனகராஜ் மற்றும் பலர்

                   ஜ ஜே கே



ஜ ஜே கே தலைவர் பச்சமுத்து

இன்டர்நேஷனல் முதலியார் & பிள்ளைமார் அசோசி ேஸசன்

                             தேமுதிக 






திமுக அதிமுக பாஜக காங்கிரஸ் அம்மு க தேமுதிக  ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு இன்டர்நேசுனல் முதலியார் & பிள்ளைமார் அசோஸிசேசன் இந்து மக்கள் கட்சி, ஜ ஜே கே மற்றும் பல அமைப்புகள் தேசிய தலைவர் வ.உ.சி- திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்தார்கள்.





வியாழன், 18 ஆகஸ்ட், 2022

தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்களை குருவிகளை சுடுவதைபோல் சுட்ட போலீசார்: நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையில் அதிர்ச்சி


தூத்துக்குடி: ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்களை குருவிகளை சுடுவதைபோல் போலீசார் சுட்டு கொன்றுள்ளதாக ஆணையம் தெரிவித்திருக்கிறது. தொலைவில் இருந்து குறிபார்த்து சுடக்கூடிய துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டதும் உடற்கூறாய்வில் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. குண்டுகள் பின் தலை வழியே ஊடுருவி நெற்றி வழியாக வெளியே வந்ததன் மூலம், பின்னால் இருந்து சுட்டது அம்பலமாகியுள்ளது. 



சுட்டுக்கொல்லப்பட்ட 13 பேரில் 6 பேர் பின்னந்தலையில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். தடியடி, கண்ணீர் புகைவீச்சு, வானத்தை நோக்கி சுடுதல் போன்ற எவ்வித நடவடிக்கையையும் போலீஸ் மேற்கொள்ளவில்லை.


தூத்துக்குடி கலவரம்: எந்த போலீசுக்கும் படுகாயமில்லை


தூத்துக்குடி கலவரத்தில் எந்த ஒரு போலீஸ்காரருக்கும் படுகாயம் ஏற்படவில்லை. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு அப்போதைய காவல்துறை தலைமை பொறுப்பில் இருந்தவர்களின் அப்பட்டமான தோல்வி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என்ற போலீசாரின் வாதத்துக்கு எந்த ஆதாரமும் இல்லை. போராட்டம் தொடர்பான உளவுத்துறை தகவல் முன்கூட்டியே கிடைத்தும் அப்போதைய ஐஜி நடவடிக்கை எடுக்கவில்லை.


17 ரவுண்டுகள் சுட்ட போலீஸ்காரர் சுடலைக்கண்ணு


தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டின் போது போலீஸ்காரர் சுடலைக்கண்ணு மட்டும் 17 ரவுண்டுகள் சுட்டுள்ளார். தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம், 3ம் மைல், எஃப்சிஐ ரவுண்டானா, திரேஸ்புறம் இடங்களிலும் சுடலைக்கண்ணு சுட்டுள்ளார். ஒரே போலீஸ்காரர் 4 இடங்களில் சுட்டதன் மூலம் அவரை அடியாள் போல் காவல்துறை பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. எஃப்சிஐ ரவுண்டானா அருகே சுடலைக்கண்ணு சுட்டபோது எஸ்.பி. மகேந்திரன், எஸ்.பி. அருண்சக்தி குமார் உடனிருந்தனர். ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தை கையாள்வதில் ஆட்சியர் வெங்கடேஷ் தொடக்கம் முதலே அலட்சியம் காட்டியுள்ளார். போராட்டத்துக்கு முதல் நாள் ஆட்சியர் வீட்டில் இருந்து கொண்டே உதவி ஆட்சியரை சமாதானக் கூட்டத்துக்கு தலைமை தாங்க அழைத்துள்ளார்.


தூத்துக்குடி சம்பவம் - நடவடிக்கைக்கு பரிந்துரை:



தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக 17 போலீசார் மீது நடவடிக்கை எடுக்க நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. 2018ல் தென்மண்டல ஐ.ஜி.யாக இருந்த சைலேஷ்குமார் யாதவ் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. நெல்லை சரக டி.ஐ.ஜி.யாக இருந்த கபில்குமார் சர்கார், தூத்துக்குடி எஸ்.பி.யாக இருந்த மகேந்திரன், டி.எஸ்.பி. லிங்கதிருமாறன், 3 ஆய்வாளர்கள், 2 எஸ்.ஐ., ஒரு தலைமை காவலர், 7 காவலர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.


ஒளிந்துகொண்டு சுட்ட போலீஸ்:


ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது போலீசார் ஒளிந்து கொண்டு துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். எந்தவித ஆத்திரமூட்டலும் இல்லாத போதிலும் போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். போராட்டக்காரர்களின் கண்களில் படாமல் மறைந்து நின்று போலீசார் துப்பாக்கியால் சுட்டனர்.



தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு - குரூரமான செயல்


தூத்துக்குடி சம்பவம் போலீசாரின் குரூரமான செயல் என்று நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அறிக்கையில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. துப்பாக்கி குண்டு எங்கிருந்து வருகிறது என்றே தெரியாமல் போராட்டக்காரர்கள் சிதறி ஓடினர். கலைந்து ஓடிய போராட்டக்காரர்கள் மீதும் போலீசார் துப்பாக்கியால் சுட்டுள்ளதாக அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. வன்முறையில் ஈடுபட்டவர்களை தடுக்கவே துப்பாக்கிச்சூடு என்ற  போலீசாரின் வாதத்துக்கு எந்த ஆதாரமும் இல்லை. தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் கூடிய போராட்டக்காரர்களை பூங்காவில் ஒளிந்துகொண்டு சுட்டுள்ளனர். போலீசார் தங்களின் வரம்புகளை மீறி செயல்பட்டதாகவும் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் குற்றம்சாட்டியுள்ளது. தவறு செய்த போலீசார் மீது குற்றவியல், துறை ரீதியான நடவடிக்கை எடுக்க நீதிபதி அருணா ஜெகதீசன் பரிந்துரை செய்துள்ளார்.


ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை:


அப்போதைய தூத்துக்குடி ஆட்சியர் வெங்கடேஷ், பொறுப்புகளை தட்டிக்கழித்து அலட்சியத்துடன் கோவில்பட்டியில் இருந்துள்ளார். ஆட்சியர் வெங்கடேஷ் எவ்வித யோசனையுமின்றி முடிவுகளை எடுத்துள்ளதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது....