செவ்வாய், 30 ஜூன், 2026

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சாதனை 9 வயது சிறுமிக்கு செயற்கை கண் பொருத்தி மறுவாழ்வு தமிழக அரசுக்கும் மருத்துவர்களுக்கும் பெற்றோர் நெகிழ்ச்சி நன்றி!

Tamil Nadu updates, 

photo news by Arunan journalist 

தூத்துக்குடி: ஜுலை 1

தூத்துக்குடி அரசினர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், பிறவியிலேயே இடது கண் குறைபாட்டுடன் பிறந்த 9 வயது சிறுமிக்கு அரிய வகை கண் குழி சீரமைப்பு மற்றும் செயற்கை கண் பொருத்தும் அறுவை சிகிச்சை வெற்றிகரமாகச் செய்யப்பட்டு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.



 இதுதொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று காலை மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.

பிறவிக்குறைபாட்டால் அவதிப்பட்ட சிறுமி!!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில், ஆரல்வாய்மொழி கிராமத்தில் வசித்து வரும் பொன்னு என்பவரின் 9 வயது மகள் முத்துசெல்வி. அச்சிறுமிக்குப் பிறவியிலேயே இடது கண் இல்லாததால், அவதிப்பட்டு வந்தார்.

thoothukudileaks
தாயார் உடன் சிறுமி

video 

மருத்துவக் குழுவின் அரிய சாதனை

thoothukudileaks

கடந்த 20.06.2026 அன்று, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு. எபனேசர் ஜோயல் குமார், துணை முதல்வர் மரு. கலைவாணி, மற்றும் மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு. பத்மநாபன் ஆகியோரின் வழிகாட்டுதலின் பேரில் இந்த அரிய அறுவை சிகிச்சை நடைபெற்றது.

thoothukudileaks


கண் பிரிவு துறைத் தலைவர் மற்றும் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்க திட்ட மேலாளருமான மரு. ம. ரீட்டா ஹெப்சிராணி  தலைமையில், பின்வரும் மருத்துவக் குழுவினர் இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளனர்:

 பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர்: மரு. அருணா தேவி

 மயக்கவியல் மருத்துவர்கள்: மரு. ஸ்ரீராம், மரு. அஜய் சந்தோஷ் டேவிட்

 உதவி மருத்துவர்கள்:  மரு. ஜெயந்தி, மரு. வின்சா, மரு. திவ்யா

 செவிலியர்கள்: சுரேகா,  ரத்னா

இந்த மருத்துவக் குழுவினர் இணைந்து சிறுமிக்குக் கண் குழி சீரமைப்பு அறுவை சிகிச்சை மற்றும் செயற்கை கண் பொருத்தும் அறுவை சிகிச்சையை மிக வெற்றிகரமாகச் செய்து முடித்தனர். .

செய்தியாளர் சந்திப்பில் பெற்றோர் நெகிழ்ச்சி!

தமிழக அரசுக்கு நன்றி!!!

இன்று காலை 10 மணியளவில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் செய்தியாளர் சந்திப்பு ஒன்று நடைபெற்றது. இதில் தங்களுக்குக் கிடைத்த முழுமையான கண் சிகிச்சை மற்றும் செயற்கை கண் பொருத்தப்பட்ட விவரங்கள் குறித்துச் சிறுமி முத்துசெல்வியும் அவரது தாயாரும் செய்தியாளர்களிடம் விவரித்தனர்.


அப்போது, தங்களது குழந்தைக்கு அதிநவீன முறையில் செயற்கை கண் பொருத்தி, புதிய வாழ்வையும் நம்பிக்கையையும் தந்து உதவிய தூத்துக்குடி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அனைவருக்கும், ஏழை எளிய மக்களுக்குத் தரமான மருத்துவ சேவை கிடைக்கத் திறம்படச் செயல்பட்டு வரும் தமிழக அரசுக்கும் தங்களது மிகுந்த மகிழ்ச்சியையும், நெஞ்சார்ந்த நன்றியையும் கண்ணீர் மல்கத் தெரிவித்துக் கொண்டனர்.

 தூத்துக்குடி அரசு மருத்துவமனையில்..

அர்ப்பணிப்புடன் இயங்கும் கண் சிகிச்சை பிரிவு

தூத்துக்குடி அரசு மருத்துவமனை கண் சிகிச்சை பிரிவில் தினமும் சுமார் 200-க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

thoothukudileaks



மேலும், மாதந்தோறும் 200-க்கும் மேற்பட்ட கண் புரை அறுவை சிகிச்சைகளும் (Cataract Surgery), கண் நீர் அழுத்த நோய் (Glaucoma), மாறுகண் (Squint), கருவிழி மாற்று அறுவை சிகிச்சை (Keratoplasty) போன்ற பல்வேறு அதிநவீன சிகிச்சைகளும் இங்கு முற்றிலும் இலவசமாக, அர்ப்பணிப்பு உணர்வோடு வழங்கப்பட்டு வருகின்றன.

பொதுமக்கள் தங்களுக்கு ஏற்படும் கண் தொடர்பான அனைத்துப் பாதிப்புகளுக்கும் எங்களைப் போன்ற அரசு மருத்துவர்களை அணுகிப் பயன்பெறுமாறு மருத்துவமனை நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக