தவெக முன்னாள் நிர்வாகி முத்துக்குமரன் மனமுவந்து விஷம் அருந்தி மருத்துவமனையில் அனுமதி
நேர்மையான விசாரணை நடத்த சட்ட உரிமைகள் கழகம் வலியுறுத்தல்
தூத்துக்குடி, செப்.22:
தூத்துக்குடி மாவட்டம் குலையன்கரிசல் பகுதியைச் சேர்ந்த முத்துக்குமரன், தமிழக வெற்றிக் கழகத்தின் தெற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளராகப் பணியாற்றி வந்த நிலையில், கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அவர் மருந்து அருந்தியதால் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
திமுக வினர் செய்த சதியால் என்னிடம் எந்த விளக்கமும் கேட்காமல் நீக்கப்பட்டேன் !!!
தன்னை எந்தவித விளக்கமும் கேட்காமல் கட்சிப் பொறுப்பிலிருந்து நீக்கியதாகவும், முன்னதாக திமுகவில் செயல்பட்டவர்களுக்கு தவெகவில் பதவிகள் வழங்கப்படுவதாகவும் முத்துக்குமரன் குற்றஞ்சாட்டியுள்ளதாக சட்ட உரிமைகள் கழகம் தெரிவித்துள்ளது.
மேலும், இதுதொடர்பாக தவெக தலைவர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய்யின் கவனத்திற்கு கொண்டு செல்ல முயன்றும் முடியவில்லை என்றும் அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
நடுநிலையான விசாரணை தேவை!!!
முத்துக்குமரன் மருந்து அருந்தியதற்கான உண்மையான காரணம் என்ன, அவருக்கு ஏதேனும் அரசியல் அல்லது நிர்வாக அழுத்தம் இருந்ததா, அவர் முன்வைத்த கோரிக்கைகள் முறையாக பரிசீலிக்கப்பட்டனவா என்பது குறித்து நடுநிலையான விசாரணை நடத்த வேண்டும் என சட்ட உரிமைகள் கழகம் வலியுறுத்தியுள்ளது.
குற்றச்சாட்டு!!!
மருத்துவ மற்றும் காவல்துறை விசாரணைகள் நிறைவடைவதற்கு முன்பாக, இந்தச் சம்பவத்திற்கு எந்தத் தனிநபரையோ அல்லது அமைப்பையோ நேரடியாகப் பொறுப்பாக்குவது சரியானதல்ல என்றும், அதே நேரத்தில் முத்துக்குமரன் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் முறையாக விசாரிக்கப்பட வேண்டும் என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
முத்துக்குமரனுக்கு உரிய மருத்துவச் சிகிச்சை கிடைப்பதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். அவரது உடல்நிலை அனுமதிக்கும் நிலையில், மருத்துவர்களின் ஆலோசனையுடன் காவல்துறையினர் அவரது வாக்குமூலத்தை முறையாகப் பதிவு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், அவர் எழுதிய கடிதங்கள், குறுஞ்செய்திகள், காணொலிகள் உள்ளிட்ட ஆவணங்கள் இருந்தால் அவற்றை சட்டப்படி பாதுகாத்து விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குடும்பத்தினரை சந்தித்து குறைகளை கேட்க வேண்டும்
தமிழக வெற்றிக் கழகத் தலைமையும் இந்த விவகாரத்தை மனிதநேயத்துடன் அணுகி, முத்துக்குமரனின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து அவர்களது கோரிக்கைகளைக் கேட்டறிய வேண்டும் என சட்ட உரிமைகள் கழகம் தெரிவித்துள்ளது.
மேலும், முத்துக்குமரனின் பதவி நீக்கம் மற்றும் புதிய நிர்வாகிகள் நியமனம் தொடர்பாக கட்சிக்குள் வெளிப்படையான விசாரணை நடத்தி, அதற்கான காரணத்தை எழுத்துப்பூர்வமாகத் தெரிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அரசியல் கட்சிகளில் அடித்தளத்தில் பணியாற்றும் தொண்டர்களின் கருத்துகளுக்கும் குறைகளுக்கும் உரிய முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என்றும், பதவி தொடர்பான கருத்து வேறுபாடுகள் காரணமாக எந்தத் தொண்டரும் தன்னைத்தானே பாதிக்கும் முடிவை எடுக்கும் நிலை ஏற்படாத வகையில் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அமைப்புகள் தேவையான ஆதரவை வழங்க வேண்டும் என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
முத்துக்குமரன் விரைவில் முழுமையாகக் குணமடைய வாழ்த்து தெரிவித்துள்ள சட்ட உரிமைகள் கழகம், அவரது உடல்நிலை, மருந்து அருந்தியதற்கான சூழ்நிலை மற்றும் அவர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
– டாக்டர் எஸ்.ஆர். செல்வம் கிறிஸ்டோபர்
நிறுவனர் மற்றும் தலைவர், சட்ட உரிமைகள் கழகம்
புகைப்படம்: தூத்துக்குடி லீக்ஸ் / thoothukudileaks

















