தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி அண்ணா பேருந்து நிலையத்தில் 3 பிளாஸ்டிக் பாட்டில் சேகரிப்பான்கள்!
தூய்மையான தூத்துக்குடியை உருவாக்க ரோட்டரி சங்கத்தின் புதிய முயற்சி
தூத்துக்குடி, செப். 1:
தூத்துக்குடி நகரின் சுற்றுச்சூழல் பாதுகாப்பை மேம்படுத்தவும், பிளாஸ்டிக் கழிவுகளைக் கட்டுப்படுத்தவும், தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி அண்ணா பேருந்து நிலையத்தில் 3 பிரத்யேக பிளாஸ்டிக் பாட்டில் சேகரிப்பான்கள் BoX நிறுவப்பட்டன.
டிரெயில்பிளேசர்ஸ் ரோட்டரி கிளப் ஆஃப் தூத்துக்குடி சார்பில் வழங்கப்பட்ட இந்த பிளாஸ்டிக் பாட்டில் சேகரிப்பான்கள், தூத்துக்குடி மாநகராட்சிக்கு ஒப்படைக்கப்பட்டன. இதனை மாநகராட்சி ஆணையர் எஸ். பிரியங்கா பெற்றுக்கொண்டார்.
பொதுமக்கள் பயன்படுத்திய பிளாஸ்டிக் பாட்டில்களை சாலையோரங்களிலும், பொது இடங்களிலும் வீசுவதைத் தடுப்பதுடன், அவற்றை முறையாகச் சேகரித்து மறுசுழற்சிக்கு அனுப்பும் நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
அண்ணா பேருந்து நிலையத்திற்கு தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்லும் நிலையில், இந்த சேகரிப்பான்கள் மூலம் பிளாஸ்டிக் பாட்டில்களை முறையாக சேகரிப்பதற்கு வாய்ப்பு ஏற்படும். இதன் மூலம் தூய்மையான மற்றும் பசுமையான தூத்துக்குடியை உருவாக்கும் மாநகராட்சியின் முயற்சிக்கு இந்த திட்டம் உறுதுணையாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியை டிரெயில்பிளேசர்ஸ் ரோட்டரி கிளப் ஆஃப் தூத்துக்குடி தலைவர் எம். திவ்யா பிரைட்லின், செயலாளர் டாக்டர் ரஜினி டாட்டியா, பொருளாளர் ராஜீவி மோகன்ராஜ் ஆகியோர் முன்னின்று ஒருங்கிணைத்தனர்.
நிகழ்ச்சியில் மாநகராட்சி நகர்நல அலுவலர் கணேஷ், கிழக்கு மண்டல சுகாதார அலுவலர் ஹரிகணேஷ், ஸ்மார்ட் சிட்டி அண்ணா பேருந்து நிலைய பொறுப்பாளர் முத்துக்குட்டி மற்றும் ரோட்டரி சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.


























