Tamil Nadu updates
Photo news by Arunan journalist
#தூத்துக்குடி லீக்ஸ்
நாளிதழ் செய்தி | புதன்கிழமை |
மே 21, 2025
## ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு கொலை :
ஏழாம் ஆண்டு நினைவு நாளில் கேள்விக்குறியாகும் நீதி
தூத்துக்குடி, மே 21
: நாளை (மே 22) ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்ட 15 பேரின் ஏழாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.
இந்நிலையில், ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு தமிழக அரசுக்கு முன்வைத்துள்ள கோரிக்கைகள் கவனம் பெறுகின்றன.
###தீர்ப்பு வந்து ஓராண்டு மேலாகியும் ஸ்டெர்லைட்டை அகற்ற தமிழக அரசுக்கு தயக்கம் ஏன்?
கடந்த பிப்ரவரி 29, 2024 அன்று உச்சநீதிமன்றம் ஸ்டெர்லைட்டின் அப்பீலை தள்ளுபடி செய்து நிரந்தரமாக ஆலையை மூட உத்தரவிட்டது.
அதனைத் தொடர்ந்து தமிழக முதல்வரை சந்தித்த போராட்ட அமைப்பினர், உடனடியாக ஸ்டெர்லைட் ஆலையை அகற்ற வேண்டும் (DISMANTLE) என வலியுறுத்தினர். தாமதிக்கும் பட்சத்தில் ஸ்டெர்லைட் ஆலை தரப்பில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்து சட்டச் சிக்கலை உருவாக்குவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரித்தனர்.
"தமிழக முதல்வர் ஆலையை அகற்றுவதற்கான சட்டப்படி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்."
ஆனால், எதிர்பார்த்தபடியே, ஸ்டெர்லைட் நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் மீண்டும் மறு சீராய்வு மனு தாக்கல் செய்தது.
அந்த மனுவும் கடந்த நவம்பர் 11, 2024 அன்று உச்சநீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.
மீண்டும்.. மீண்டும்....!!!
தற்போது சிறிது காலம் அமைதியாக இருந்த ஆலை நிர்வாகம் மீண்டும் உச்சநீதிமன்றத்தில் CURATIVE மனுவை தாக்கல் செய்து, ஆலைக்கு மக்கள் மத்தியில் ஆதரவு இருப்பதாகக் காட்டி குறுக்கு வழியில் திறப்பதற்கு முயற்சித்து வருகிறது.
### மக்களின் கேள்வி: "இன்னும் ஏன் இந்த ஆலையை அப்புறப்படுத்தவில்லை?"
தூத்துக்குடி மக்கள் "இன்னும் இந்த ஆலையை ஏன் தான் இங்கிருந்து அப்புறப்படுத்தாமல் இருக்கிறார்கள்?" என்று தமிழக அரசைப் பார்த்து கேள்வி எழுப்புகின்றனர்.
ஸ்டெர்லைட் நிர்வாகம் மீண்டும், மீண்டும் உச்ச நீதிமன்றத்தை அணுகுவதற்கு காரணம், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பின்னும் ஸ்டெர்லைட் ஆலையை தூத்துக்குடியிலிருந்து அகற்றாமல் தமிழக அரசு மௌனம் காப்பதே என்று மக்கள் கூட்டமைப்பு குற்றம் சாட்டுகிறது.
இது வேதாந்தாவிற்கு ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க முடியும் என்ற நம்பிக்கையை கொடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
"ஒருவேளை மீண்டும் உச்சநீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு உத்தரவிட்டால், இதற்காகப் போராடி உயிர்நீத்த 15 பேரின் உயிரை யாராவது திருப்பிக் கொடுக்க முடியுமா?" என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது.
### அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையின் முக்கிய கண்டுபிடிப்புகள்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் படுகொலை தொடர்பாக தமிழ்நாடு அரசு நியமித்த நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம், பல்வேறு சாட்சிகளை விசாரித்ததில், 20-30 பேர் அடங்கிய கூட்டம் ரகசியமாக போராட்டக் கூட்டத்தில் நுழைந்து நாசவேலையில் ஈடுபட்டதாகக் கண்டறிந்தது.
இவர்கள் ஸ்டெர்லைட் நிர்வாகம் மற்றும் காவல்துறையின் கூட்டுப் பங்களிப்புடன் செயல்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது.
"இதை சாதாரணமாக எடுத்துக் கொண்டு விட்டுவிட முடியாது,
இது நிச்சயமாக சம்பந்தப்பட்ட அலுவலர்களால் தொடர்ந்து விசாரிக்கப்பட வேண்டியதாகும்" (ஆணையத்தின் இறுதி அறிக்கை, பகுதி-2, பக்கம் 84) என்று ஆணையம் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தும், தமிழக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
### கோரிக்கைகள்
ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்துள்ளது:
1. ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் கலவரமாக மாறியதற்கு ஸ்டெர்லைட்டின் பின்புலத்தை புலன் விசாரணை செய்ய வேண்டும்.
2. போராடிய பொதுமக்களைச் சுட்டுக் கொன்ற கொலையாளிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
3. உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக அகற்ற வேண்டும்.
"படுகொலை நடந்து 7 ஆண்டுகள் ஆகியும், இன்னும் நீதி கிடைக்கவில்லை.
குற்றவாளிகள் தண்டிக்கப்படாமல் இருப்பது ஏன்? ஸ்டெர்லைட் ஆலை அகற்றப்படாமல் இருப்பது ஏன்? இந்தக் கேள்விகளுக்கு தமிழக அரசு பதில் சொல்ல வேண்டும்," என்று ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பின் சட்ட ஆலோசகர் கே. அரி ராகவன் வலியுறுத்தியுள்ளார்.
ஸ்டெர்லைட் இன்னும் அகற்றப்படாதது ஏன்? கொலையாளிகள் மீது நடவடிக்கை எடுக்காத மர்மம் என்ன?
---
*தூத்துக்குடி லீக்ஸ் செய்தி குழு*

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக