மாம்பழ சாறு உற்பத்தியில் மோசடியில் ஈடுபடுகின்றன: கனிமொழி எம்.பி குற்றச்சாட்டு
தூத்துக்குடி, லீக்ஸ் ஜூன் 29 -
மாம்பழ சாறு தயாரிக்கும் நிறுவனங்கள் பழச்சாறின் மாம்பழக் கரு வீதத்தை குறைத்து, தமிழக மாம்பழ விவசாயிகளை பெரும் நட்டத்துக்குள்ளாக்கி வருகின்றன. என்றார் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக மகளிரணி தலைவருமான கனிமொழி கருணாநிதி.
இந்தக் குறையை உணவு செயலாக்கத் துறை மத்திய அமைச்சரான சிராக் பஸ்வானுக்கு எழுதிய கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.
அதில், “2022-ஆம் ஆண்டில் 20% மாம்பழக் கரு கொண்டு சாறு தயாரிக்கப்பட்டது. ஆனால், தற்போது 2024-ஆம் ஆண்டில் அது 11% ஆக குறைந்துள்ளது.
இது பான உற்பத்தியாளர்கள் தாங்கள் சந்திக்க வேண்டிய GST வரி உயர்வை தவிர்ப்பதற்காக மேற்கொள்ளும் நடவடிக்கையே” என தெரிவித்துள்ளார்.
28% ஜிஎஸ்டி விதிக்கப்படும் “Fruit Juice” என்ற வகையில் தயாரிக்காமல், 5% முதல் 10% வரை பழச்சத்து மட்டுமே உள்ள “Fruit Drink” அல்லது “Fruit Based Beverages” என்ற வகைப்படுத்தலில் இந்த பானங்களை சந்தைப்படுத்தி வருகிறார்கள்.
இது உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைத்துறை விதிமுறைகளையும் (FSSAI) மீறுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
“மாம்பழ விவசாயிகள் ஏற்கும் இழப்புகளை கண்டு மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். பழச்சாறுகளில் 20% பழச்சத்து கட்டாயம் இருக்கும் விதமாக கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும்” என மத்திய அமைச்சரிடம் கனிமொழி எம்.பி வலியுறுத்தி இருக்கிறார்.
பெருமளவில் மாம்பழ விவசாயிகள் இதில் பாதிக்கப்படுகிறார்கள் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.