திங்கள், 21 செப்டம்பர், 2026

ரூ.2 கோடி கடன் தருவதாக ரூ.11.80 லட்சம் மோசடி: முன்னாள் அமைச்சர் பெயரைச் சொல்லி ஏமாற்றிய கும்பல் மீது ஆட்சியரிடம் பெண் பரபரப்பு புகார்!

 :

ரூ.2 கோடி கடன் தருவதாக ரூ.11.80 லட்சம் மோசடி: முன்னாள் அமைச்சர் பெயரைச் சொல்லி ஏமாற்றிய கும்பல் மீது ஆட்சியரிடம் பெண் பரபரப்பு புகார்!

தூத்துக்குடி: ரூ.2 கோடி கடன் பெற்றுத் தருவதாகக் கூறி, “ப்ராசசிங் கட்டணம்” (Processing Fee) என்ற பெயரில் ரூ.11.80 லட்சம் பணம் மற்றும் பத்திரங்களில் கைரேகை வாங்கி மோசடி செய்த நபர்கள் மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்து, பணத்தை மீட்டுத் தரக்கோரி தூத்துக்குடியைச் சேர்ந்த பெண் ஒருவர் மாவட்ட ஆட்சியரிடம் பரபரப்பு புகார் மனு அளித்துள்ளார்.



சம்பவத்தின் விவரம்:

தூத்துக்குடி பிரையண்ட் நகர் 12வது தெருவைச் சேர்ந்த திருமதி ரேவதி (க/பெ முத்துசாமி) என்பவர் அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது:

கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில், கோயம்புத்தூர் VNS நகர், P&T காலனி பகுதியைச் சேர்ந்த தீபக் என்பவர் திருமதி ரேவதியைத் தொடர்புகொண்டு பேசியுள்ளார். ரேவதிக்குச் சொந்தமான இடத்தின் மதிப்பை வைத்து ரூ.2 கோடி வரை கடன் பெற்றுத் தருவதாக வாக்குறுதி அளித்துள்ளார்.

thoothukudileaks


இதனைத் தொடர்ந்து தீபக், அவரது மனைவி, விக்னேஷ், அஜீவ் மற்றும் பெயர் தெரியாத இருவர் அடங்கிய கும்பல் நேரில் வந்து பேசியுள்ளனர். அப்போது, "உங்களுக்கு வழங்கப்படும் கடன் தொகை முக்கிய பிரமுகர்களின் பணம். எங்கள் நிறுவனத்திற்கு முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன் தலைவராக உள்ளார். எனவே நீங்கள் பயப்படத் தேவையில்லை" என்று கூறி நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளனர். மேலும், இத்திட்டம் குறித்து வெளியில் யாருடனும் பேசக் கூடாது என்றும் ரகசியம் காக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதித்துள்ளனர்.


ரூ.11.80 லட்சம் பறிமுதல்:

ரூ.2 கோடி கடனுக்கு 'Loan Processing Fee' செலுத்த வேண்டும் என்றும், பணம் கொடுத்த மறுநாளே கடன் தொகை கைக்கு வந்துவிடும் என்றும் ஆசை வார்த்தை கூறியுள்ளனர். இதற்காக பத்திரங்கள், புரோநோட்டுகள் மற்றும் வெற்றுத் தாள்களில் ரேவதியிடம் கையெழுத்தும் கைரேகையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.

அவர்களின் பேச்சை நம்பிய ரேவதி, பல்வேறு இடங்களில் கடன் வாங்கி:

  • 19.01.2025 அன்று கோவை ரேஸ் ஹோர்ஸ் பகுதி விடுதியில் வச்சு ரூ.7,20,000/-
  • 29.01.2025 அன்று தூத்துக்குடி மீளவிட்டான் ஹார்பர் பைபாஸ் இடத்தில் வைத்து ரூ.4,60,000/- என மொத்தம் ரூ.11,80,000/- பணத்தைக் கொடுத்துள்ளார்.

பணத்தைப் பெற்றுக்கொண்ட கும்பல், 30.01.2025 அன்று கடன் தொகையைத் தருவதாகக் கூறிச் சென்ற நிலையில், தலைமறைவாகியுள்ளது. தொடர்ந்து போனில் தொடர்பு கொண்டபோது, மேலதிகமாக ரூ.5 லட்சம் கேட்டதுடன், கொடுத்த பணத்தைக் கேட்கக் கூடாது என மிரட்டும் வகையில் பேசியுள்ளனர்.

மேலும் பலர் ஏமாற்றம்:

இதே கும்பலை நம்பி, ரேவதியின் உறவினர் நாகராஜ் என்பவர் ரூ.6,30,000/- பணத்தையும், தமிழ்செல்வன் என்பவர் ரூ.4,15,000/- பணத்தையும் கொடுத்து ஏமாந்துள்ளனர். 

தமிழகம் மற்றும் பிற மாநிலங்களிலும் இந்த கும்பல் இதே முறையில் பலரிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்து வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது.


புகாரில் வலியுறுத்தல்:

இதுகுறித்து பாதிக்கப்பட்ட ரேவதி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில்:

  1. மோசடியில் ஈடுபட்ட தீபக், அவரது மனைவி, விக்னேஷ், அஜீவ் மற்றும் கூட்டாளிகள் மீது உடனடியாக FIR பதிவு செய்ய வேண்டும்.
  2. மோசடி கும்பலுக்கும் முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழனுக்கும் உள்ள தொடர்பு குறித்து விசாரணை நடத்த வேண்டும்.
  3. ஏமாற்றிப் பெறப்பட்ட பத்திரங்கள் மற்றும் வெற்றுத் தாள்களை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க அவற்றைக் கைப்பற்ற வேண்டும்.
  4. மோசடி செய்யப்பட்ட ரூ.11.80 லட்சத்தை மீட்டுத் தர வேண்டும் எனக் கோரியுள்ளார்.

இச்சம்பவம் தூத்துக்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

thoothukudileaks


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக