செவ்வாய், 22 செப்டம்பர், 2026

 தூத்துக்குடி லீக்ஸ் சிறப்புச் செய்தி

தவெக முன்னாள் நிர்வாகி முத்துக்குமரன் மருத்துவமனையில் அனுமதி: நேர்மையான விசாரணை நடத்த சட்ட உரிமைகள் கழகம் வலியுறுத்தல்!

தூத்துக்குடி: தமிழக வெற்றிக் கழகத்தின் தெற்கு ஒன்றிய இளைஞரணி முன்னாள் அமைப்பாளரான குலையன்கரிசலைச் சேர்ந்த முத்துக்குமரன், மருந்து அருந்தி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

கட்சிக்காகத் தொடர்ந்து உழைத்த தன்னை எந்தவித விளக்கமும் கேட்காமல் பொறுப்பிலிருந்து நீக்கியதாகவும், முன்பு திமுகவில் செயல்பட்டவர்களுக்கு தவெகவில் புதிய பதவிகள் வழங்கப்படுவதாகவும் முத்துக்குமரன் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக தவெக தலைவரும் நடிகருமான விஜய்யின் கவனத்திற்குப் பலமுறை கொண்டுசெல்ல முயன்றும் பலனில்லாமல் போனதாகத் தெரிகிறது.

இச்சம்பவம் குறித்து சட்ட உரிமைகள் கழகத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் Dr. S. R. செல்வம் கிறிஸ்டோபர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

"முத்துக்குமரன் மருந்து அருந்தியதற்கான உண்மையான காரணம் என்ன, அவருக்கு ஏதேனும் அரசியல் அல்லது நிர்வாக ரீதியான அழுத்தங்கள் கொடுக்கப்பட்டதா என்பது குறித்து நடுநிலையான விசாரணை நடத்தப்பட வேண்டும்.

தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் அவருக்கு உயர்தர மருத்துவச் சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். அவரது வாக்குமூலம் பெறக்கூடிய உடல்நிலை ஏற்பட்டவுடன், மருத்துவர்களின் அனுமதியுடன் காவல்துறையினர் வாக்குமூலத்தைப் பதிவு செய்ய வேண்டும். அவர் வெளியிட்ட கடிதங்கள், குறுஞ்செய்திகள் மற்றும் காணொலிகளை ஆதாரமாகப் பாதுகாத்து விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்."

மேலும், தமிழக வெற்றிக் கழகத் தலைமை இவ்விவகாரத்தை மனிதநேயத்துடன் அணுகி, முத்துக்குமரனின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூற வேண்டும் என்றும், அவரது பதவி நீக்கம் தொடர்பாக வெளிப்படையான விசாரணை நடத்தி எழுத்துப்பூர்வமான விளக்கத்தை அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அரசியல் கட்சிகளின் வளர்ச்சிக்காக உழைக்கும் அடித்தளத் தொண்டர்களின் குறைகளுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் எனவும், பதவி தொடர்பான கருத்து வேறுபாடுகளால் தொண்டர்கள் தீவிர முடிவுகளை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்படக் கூடாது என்றும் குறிப்பிட்ட சட்ட உரிமைகள் கழகம், முத்துக்குமரன் விரைவில் முழுமையாகக் குணமடைய வாழ்த்து தெரிவித்ததுடன், இவ்விவகாரத்தில் பாரபட்சமற்ற விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக