வெள்ளி, 19 டிசம்பர், 2025

தூத்துக்குடி பேருந்து நிலையத்தில் மாநகராட்சி வாகன காப்பகத்திலேயே இருசக்கர வாகனம் திருட்டு பாதுகாப்பு கேள்விக்குறி – பொதுமக்கள் அதிர்ச்சி

தூத்துக்குடி லீக்ஸ் – நாளிதழ் செய்தி

தூத்துக்குடி டிச 20

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் பழைய பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வரும் வாகன காப்பகத்தில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் மர்மமான முறையில் திருட்டு போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி வண்ணார் முதல் தெருவை சேர்ந்த சரவணகுமார் என்பவர், கடந்த 16ஆம் தேதி இரவு தன்னுடைய இருசக்கர வாகனத்தை பழைய பேருந்து நிலையத்தில் உள்ள மாநகராட்சி வாகன காப்பகத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளார். 


மறுநாள் 17ஆம் தேதி காலை வாகனத்தை எடுத்து செல்ல வந்த போது, அது அங்கு காணாமல் போனது தெரியவந்தது.



இதுகுறித்து அங்கு பணியில் இருந்த மாநகராட்சி ஊழியர்களிடம் விசாரித்த போது, தெளிவான பதில் எதுவும் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. பின்னர் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை பார்வையிட்ட போது, ஒருவர் அந்த இருசக்கர வாகனத்தை வாகன காப்பகத்திலிருந்து எடுத்துச் செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.

இதனைத் தொடர்ந்து சரவணகுமார் மத்திய பாகம் காவல் நிலையத்தில், தன்னுடைய இருசக்கர வாகனம் காணாமல் போனதாக புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், இதே மாநகராட்சி வாகன காப்பகத்தில் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் திருட்டு போவதாக பலரும் புகார் தெரிவித்து வருகின்றனர். 


வாகன காப்பகத்தில் போதிய பணியாளர்கள் மற்றும் பாதுகாப்பு காவலர்கள் இல்லாததே இதற்குக் காரணம் என வாகன உரிமையாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

எனவே, மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக தலையிட்டு, பாதுகாப்பு பணியாளர்கள் நியமனம், சிசிடிவி கண்காணிப்பை வலுப்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொண்டு, இனி வரும் காலங்களில் வாகன திருட்டு சம்பவங்கள் நடைபெறாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

செய்தி புகைப்படம் செயற்கை தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக