தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி தூத்துக்குடி, நவம்பர் 11
SIR திட்டத்திற்கு எதிராக திமுக தொடர்ந்த வழக்கு: பதில் அளிக்க தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
புதுடெல்லி:
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) விவகாரத்தில் தேர்தல் ஆணையம் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடைபெற உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்தது. அதன்படி தமிழ்நாட்டில் கடந்த 4-ம் தேதி முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தத்திற்கு தடை விதிக்கக் கோரி திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யപட்டது.
திமுக தரப்பு வாதம்!!!
இந்த வழக்கு இன்று நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. திமுக தரப்பில் வாதிடும்போது, "தமிழ்நாட்டில் தற்போது வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடங்கிவிட்டது. ஒரு மாதத்தில் முடிக்க உள்ளனர். இது பருவமழை காலம் என்பதால் SIR நடவடிக்கையை மேற்கொள்ள முடியாது. குறிப்பாக மாநில அதிகாரிகள் பருவமழை, வெள்ளம் உள்ளிட்ட பணிகளுக்காக ஈடுபடுத்தப்படுவார்கள். இவ்வாறான சூழ்நிலையில் மக்கள் முழுவதுமாக SIR நடவடிக்கையில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்படும்" என தெரிவிக்கப்பட்டது.
மேலும், "SIR நடத்துவதற்கு இது உகந்த காலம் அல்ல. லட்சக்கணக்கான படிவங்கள் பதிவேற்றம் செய்ய வேண்டியுள்ளது. ஆனால் அதற்குப் போதிய அவகாசம் இல்லை. தேர்தல் ஆணையம் போதிய அவகாசம் தராமல் அவசர அவசரமாக மேற்கொள்வது மக்களை பெருமளவுக்கு பாதிக்கும். தமிழ்நாட்டில் பல இடங்களில் இணையதள சேவை இல்லை. மலைக் கிராமங்களில் இணைய சேவை பிரச்சனை உள்ளது" என வாதிடப்பட்டது.
நீதிமன்ற உத்தரவுகள்
இதையடுத்து தேர்தல் ஆணையம் தரப்பில், உயர்நீதிமன்றங்களில் SIR தொடர்பான மனுக்களை விசாரிக்கக் கூடாது என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அதிமுக தரப்பில் இந்த வழக்கில் அதிமுகவையும் இணைத்துக் கொள்ளக் கோரி இடையிட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நீதிபதிகள், தேர்தல் ஆணையத்தின் கோரிக்கையை ஏற்று, உயர்நீதிமன்றங்களில் SIR குறித்து விசாரணை நடத்தக் கூடாது எனவும், ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை நிறுத்தி வைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.
மேலும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கு தடை கோரப்பட்டது தொடர்பாக இரண்டு வாரத்தில் பதிலளிக்க தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அளித்து உத்தரவு பிறப்பித்தனர். "குறைபாடுகளை தேர்தல் ஆணையம் சரி செய்யும் என நினைக்கிறோம்" என நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து, SIR-க்கு ஆதரவாக அதிமுக தாக்கல் செய்த இடையிட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள், அம்மனுவை திரும்பப் பெற்று ரீட் மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். வழக்கு விசாரணையை நவம்பர் 26-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
முக்கிய அம்சங்கள்:
- தேர்தல் ஆணையம் இரண்டு வாரத்தில் விளக்கம் அளிக்க வேண்டும்
- உயர்நீதிமன்றங்களில் SIR தொடர்பான விசாரணைகள் நிறுத்தப்பட்டன
- அடுத்த விசாரணை நவம்பர் 26-ல் நடைபெறும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக