முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு, ஆட்சிக்கு வந்தது முதல்
தமிழகம் எங்கும் ஆர்.எஸ்.எஸ்.
இயக்கத்தின் செயல்பாடுகளை முடக்குவதில் மட்டுமே குறியாக இருக்கிறது.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நூறாண்டு கால பயணம் நாடு முழுவதும் உள்ள மக்களின் இல்லங்களிலும் உள்ளங்களிலும் தேசியச் சுடரை ஏற்றி உள்ளது.
ஆர்.எஸ்.எஸ்.ஸின் இல்லம் தேடி வரும் "வீட்டுத் தொடர்பு" நிகழ்ச்சியில் குடும்பத்துடன் இணைந்து மகிழ்வோம்
உலகின் தலைசிறந்த உன்னதமான சேவை இயக்கமான ஆர்.எஸ்.எஸ்.ஸின் செயல்பாடுகள், கலாச்சார மறுமலர்ச்சி, சமூக நல்லிணக்கம், தேசபக்தி, மனிதநேய செயல்பாடுகள் ஆகியவற்றை விளக்க கடந்த அக்டோபர் இரண்டாம் தேதி முதல் நடைபெற்று வரும் "வீட்டுத் தொடர்பு" நிகழ்ச்சி மூலம் ஒவ்வொருவரின் இல்லத்திற்கு வரும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்திற்கும், தொண்டர்களுக்கும் தமிழக மக்கள் மகிழ்ச்சியுடன் மகத்தான ஆதரவளித்து வருகிறார்கள்.
ஆர்.எஸ்.எஸ். உருவாக்கிய இரண்டு மாபெரும் தலைவர்களான, அடல் பிஹாரி வாஜ்பாய் மற்றும் நரேந்திர மோடி ஆகியோர் இந்தியாவின் சிறந்த பிரதமர்களாகவும், உலகின் தலைசிறந்த தலைவர்களாகவும் போற்றப்படுகிறார்கள்.
நாட்டின் வளர்ச்சிக்கும், சமூகத்திற்கும் சரியான திசையைக் காட்டி, நாட்டு மக்களை ஒன்று திரட்டி, இளைஞர்களை வழிநடத்தி அழைத்துச் செல்வதில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பங்களிப்பு அளப்பரியது.
ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கம் (ஆர்.எஸ்.எஸ்) 1925 ஆம் ஆண்டு விஜயதசமி நாளில் மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் துவங்கப்பட்டது. கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி விஜயதசமி நாளில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தனது 100 ஆவது ஆண்டை நிறைவு செய்துள்ளது. அதைத் தொடர்ந்து வரும் 2026 விஜயதசமி வரை, ஓராண்டு முழுவதும் ஆர்.எஸ்.எஸ்.ஸின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
தமிழகம் முழுவதும், கடந்த அக்டோபர் மாதம் அனைத்து ஒன்றியங்கள், நகரங்கள், மாநகரங்கள் என அனைத்துப் பகுதிகளிலும் ஆர்.எஸ்.எஸ். சீருடை அணிந்த தொண்டர்களின் சங்கமம் நடந்தது.
தமிழ்நாட்டில் நடைபெற்ற இந்த சீருடை சங்கமத்தில் சீருடை அணிந்து 50 ஆயிரத்திற்கும் அதிகமானோரும், சாதாரண உடைகளில் 50 ஆயிரம் பேரும் என சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த சங்கமத்தில் பங்கேற்றனர். இந்தியா முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் அனைத்து மாநிலங்களிலும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
கடந்த நவம்பர் இரண்டாம் தேதி வெற்றிகரமாக துவங்கி, வரும் நவம்பர் 23 ஆம் தேதி வரை நடைபெறும், ஆர்.எஸ்.எஸ்.ஸின் வீட்டுத் தொடர்பு இயக்கம் மூலம் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க., வி.எச்.பி., இந்து முன்னணி, ஏ.பி.வி.பி., உள்ளிட்ட 40 க்கும் அதிகமான அமைப்புகளின் நிர்வாகிகளும், தொண்டர்களும் சிறு சிறு குழுக்களாகப் பிரிந்து, அவரவர் பகுதிகளில் வீடு, வீடாகச் சென்று, மக்களைச் சந்தித்து, ஆர்.எஸ்.எஸ்.ஸின் நூறாண்டு பயணம், கொள்கைகள்,
சேவைப் பணிகள் குறித்து எடுத்துக் கூறி, நூற்றாண்டு விழா பிரசுரத்தை வழங்க இருக்கின்றனர்.
அதையொட்டி, வரும் 9ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, சென்னை மாநகரில் பா.ஜ.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் வீட்டுத் தொடர்பு நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தவுள்ளனர்.
உலகிலேயே திறந்தவெளி மைதானத்தில் நடக்கும் வெளிப்படையான அமைப்பு ஆர்.எஸ்.எஸ். மட்டுமே. தேசம் முதலில் என்பதுதான் அதன் கொள்கை. தேசத்திற்காக எதையும் கொடுக்கிற, தன்னையே இழக்கிற தன்னார்வலர்களை உருவாக்கி வரும் அமைப்பு ஆர்.எஸ்.எஸ்.
1947 ஆம் ஆண்டு இந்திய - பாகிஸ்தான் பிரிவினையின்போது, பாகிஸ்தான் பகுதியில் பல லட்சம் ஹிந்துக்கள் கொல்லப்பட்டனர். அப்போது ஹிந்துக்களுக்காக குரல் கொடுத்து, அகதிகளாக இந்தியா வந்த ஹிந்துக்களுக்கு பாதுகாப்பு அளித்து நம்பிக்கையூட்டிய இயக்கம் ஆர்.எஸ்.எஸ்.
மகாத்மா காந்தி படுகொலையை காரணம் காட்டி நாட்டின் முதல் பிரதமர் நேரு ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை தடை செய்தார். மக்களுக்கான இயக்கம் என்பதால்தான் அந்த நெருக்கடியில் இருந்து மக்கள் ஆதரவுடன் ஆர்.எஸ்.எஸ். மீண்டது.
இந்தியா சுதந்திரம் அடைந்தது முதல் காங்கிரஸ் கட்சியின் திட்டமிட்ட சதி, அவதூறு பிரச்சாரங்களால் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை தடை செய்து, அதன் செயல்பாடுகளை முடக்க நினைத்த அனைத்து முயற்சிகளும் மக்களின் பேராதரவில் முறியடிக்கப்பட்டது.
1975 இல் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி நெருக்கடி நிலையை அறிவித்து, இந்திய அரசியலமைப்பு சட்டத்தை முடக்கினார். அப்போது இந்திராவின் அடக்குமுறைக்கு அனைவரும் அஞ்சிய நிலையில், ஜனநாயகத்தை காக்க தீரத்துடன் போராடியது ஆர்.எஸ்.எஸ்.
எதிர்க்கட்சிகளை ஜனதா கட்சி என்ற பெயரில் ஒருங்கிணைத்து, முதல் காங்கிரஸ் அல்லாத மத்திய அரசை அமைத்தது ஆர்.எஸ்.எஸ். தான்.
ராமஜென்ம பூமி இயக்கத்தை மக்கள் இயக்கமாக மாற்றி, அயோத்தியில் ராமர் ஆலயம் என்ற 500 ஆண்டுகள் கனவை நனவாக்கியதும் ஆர்.எஸ்.எஸ்.தான்.
தமிழ்நாட்டில் முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் சுவாமி விவேகானந்தர் பாறை அமைக்க ஏற்பட்ட தடைகளை உடைத்தெறிந்து அதை சாத்தியமாக்கியதும், வேலூர் கோட்டையில் உள்ள அருள்மிகு ஜலகண்டேஸ்வரர் கோவிலில் மூலவரான சிவலிங்கத்தை மக்கள் ஆதரவுடன் பிரதிஷ்டை செய்ததும் ஆர்.எஸ்.எஸ். தான்.
கடந்த மாதம் காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை தடை செய்ய வேண்டும் என்று ஓலமிட்டார். ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை எதிர்த்து ராகுல் காந்தி செய்த அவதூறு பிரச்சாரங்கள் மக்களால் புறக்கணிக்கப்பட்டது.
கர்நாடகா, தெலுங்கானா, இமாச்சல் பிரதேசம் போன்ற காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் ஈடுபடுபவர்கள் அரசுப் பணிகளில் இருந்து நீக்கப்படுகிறார்கள்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு, ஆட்சிக்கு வந்தது முதல்
தமிழகம் எங்கும் ஆர்.எஸ்.எஸ்.
இயக்கத்தின் செயல்பாடுகளை முடக்குவதில் மட்டுமே குறியாக இருக்கிறது.
தினசரி நடக்கும் சமூக விரோதச் செயல்கள், சீரழிந்து வரும் சட்டம்-ஒழுங்கு ஆகியவற்றைப் பற்றி கவலைப்படாமல், தேசியம், தேசபக்தி, ஆன்மீகம் மற்றும் கலாச்சார நிகழ்வுகளை நடத்தி, மக்களிடையே தேசியத்தையும் தெய்வீகத்தையும் மனிதநேயத்தையும் விதைத்து வரும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை மிரட்டுவதிலும், மக்கள் ஆதரவைக் கட்டுப்படுத்துவதிலும் குறியாக செயல்படுகிறது.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தனது 100 ஆவது ஆண்டு விழாவைக்
கொண்டாடுவதையொட்டி, கடந்த விஜயதசமி தினத்தன்று தமிழகமெங்கும் சிறப்பு நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தது.
உரிய அனுமதி பெறாமல் நிகழ்ச்சி
நடத்துவதாக கூறி ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் ஏற்பாடு செய்திருந்த விஜயதசமி கொண்டாட்டம், குரு பூஜை மற்றும் சாகா பயிற்சி அமர்வை
தடை செய்ய கடும் அடக்கு முறையை மேற்கொண்டு, நிகழ்ச்சி நடத்தக் கூடாது. நடத்தினால் கைது என்று மிரட்டப்பட்டனர்.
ஆனால் அந்தத் தடைகளை தகர்த்து, தமிழகமெங்கும் ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டு விழா நிகழ்ச்சி வெற்றிகரமாக நடந்தது.
சென்னை போரூரில் பல ஆண்டுகளாக ஆர்.எஸ்.எஸ். இயக்கம்
நடத்தும் இடத்தில் காவல்துறையால் அனுமதி மறுக்கப்பட்டு நிகழ்வில் கலந்து கொண்ட ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர் 47 பேர் சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டனர்.
ஆனால், நீதிமன்ற துணையுடன், மக்கள் ஆதரவுடன் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தளராத சேவைப் பணி இன்றளவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
அதற்கு அடையாளமாக கடந்த அக்டோபர் இரண்டாம் தேதி முதல் நடைபெற்ற வீட்டு தொடர்பு நிகழ்ச்சிக்கு தமிழக மக்கள் பேராதரவு அளித்து வருகின்றனர்.
எனவே, இந்தத் தருணத்தில் இந்த வெற்றிகளுக்கு வித்திட்ட ஆர்.எஸ்.எஸ். நிறுவனர் டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவார் அவர்களை நினைவு கூர்ந்து, இந்த நூற்றாண்டு விழாவை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தையும், அதன் பணிகளையும் மக்களிடம் கொண்டு சேர்ப்போம்.
ஏ.என்.எஸ்.பிரசாத்,
செய்தி தொடர்பாளர்,
தமிழக பாரதிய ஜனதா கட்சி,

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக