photo news by sunmugasuthram press club president
தூத்துக்குடி, நவம்பர் 2 -
தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் வடகிழக்குப் பருவமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும் வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவன், திமுக ஆட்சியில்தான் அடிப்படைக் கட்டமைப்புப் பணிகள் முழுமையாக நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார்.
கடந்த 19, 20, 21 ஆகிய தேதிகளில் பெய்த வடகிழக்குப் பருவமழையால் நிகிலேஷன் நகர் பி அண்ட் காலனி உள்ளிட்ட சில தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இதையடுத்து அப்பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் கீதாஜீவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் ஊரகப் பகுதிகளில் எவ்வித கட்டமைப்புப் பணிகளும் முறையாகச் செய்யப்படவில்லை. 2021ல் திமுக ஆட்சி அமைந்த பின்னர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.
கடந்த காலங்களில் மழைநீர் தேங்கிய பகுதிகளில் வரும் காலங்களில் தண்ணீர் தேங்கக் கூடாது, பொதுமக்கள் எந்த விதத்திலும் பாதிப்படையக் கூடாது என்ற அடிப்படையில் பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.
மாநகராட்சிப் பகுதியில் இந்த ஆண்டு கடந்த ஆண்டுகளை விட கூடுதலாக 9 செ.மீ. வரை மழை பெய்துள்ளது.
ஆனால் புதிய கால்வாய் வழித்தடங்கள் அமைக்கப்பட்டதன் வழியாக தண்ணீர் வெளியேறிச் சென்றுவிட்டது. சில காலிமனைகளில் மட்டும் மழைநீர் தேங்கியுள்ளது. சில இடங்களில் மின்மோட்டார் மூலம் வெளியேற்றப்பட்டுள்ளன.
தூத்துக்குடி மக்கள் நன்மை அடைந்து உள்ளார்கள்!!!
கடந்த நான்கரை ஆண்டுகால திமுக ஆட்சியில் மக்கள் நன்மை அடைந்துள்ளனர். எப்போதெல்லாம் திமுக ஆட்சிக்கு வருகிறதோ அப்போதுதான் தமிழகத்திற்கு பொற்காலம். 'எல்லோருக்கும் எல்லாம்' என்ற திராவிட மாடல் ஆட்சியில் மக்களுக்கான உரிமைகளை மத்திய அரசிடம் போராடிப் பெற்றுத் தரும் கொள்கையோடு முதலமைச்சர் ஸ்டாலின் பணியாற்றி வருகிறார்.
எந்த மழை வந்தாலும் இந்தமுறை பொதுமக்களைப் பாதிக்காத அளவிற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை இந்த அரசு எடுத்துள்ளது. எனவே பொதுமக்கள் எவ்வித அச்சப்பட வேண்டிய அவசியமில்லை" என்று அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்.
ஆய்வின்போது மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், கவுன்சிலர்கள் கண்ணன், ஜான், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், வட்டப் பிரதிநிதிகள் பாஸ்கர், வேல்முருகன், மணி ஆல்பர்ட் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
படம்: தூத்துக்குடி நிகிலேஷன் பகுதியில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு மேற்கொண்டார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக