ஞாயிறு, 5 அக்டோபர், 2025

ஜல்ஜீவன் திட்டத்தில் ஊழல் – மாநில அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் : ஏ.என்.எஸ். பிரசாத்

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி

தமிழகத்தில் ஜல்ஜீவன் மிஷன் திட்டம் ஊழல் மற்றும் நிர்வாக சீர்கேட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக பாரதிய ஜனதா கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் முக்கிய நலத்திட்டமான ஜல்ஜீவன் மிஷன் மூலம் கிராமங்களில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் குழாய் இணைப்பின் மூலம் சுத்தமான குடிநீர் வழங்கும் பணிகள் நடைபெற்று வருவதாக அவர் குறிப்பிட்டார். ஆனால், தமிழகத்தில் திட்டம் ஊழல் மற்றும் நிர்வாக குறைபாடுகள் காரணமாக தாமதமடைந்து வருவதாகவும், ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்படும் நிதி முறைகேடாக பயன்படுத்தப்பட்டால் அதை நிறுத்துமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.



மேலும், குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்ட வீடுகளுக்கு சுத்தமான குடிநீர் வழங்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் பிரசாத் வலியுறுத்தினார். மத்திய மோடி அரசு வழங்கும் நிதியில் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டும், மாநில அரசு அதை தங்கள் சாதனை எனக் கூறி விளம்பர அரசியல் செய்து வருவதாக அவர் குற்றம்சாட்டினார்.

“மக்களுக்கான அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்ய மத்திய அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. ஆனால், திமுக அரசு மத்திய அரசை விமர்சித்து அரசியல் செய்யும் நிலையில் உள்ளது. இதனால் திட்ட நிதி நிறுத்தப்பட்டு மக்களே பாதிக்கப்படும் நிலை உருவாகக் கூடாது,” 

முதல்வர் ஸ்டாலின் மக்கள் நல திட்டங்களில் அக்கறை காட்டி, ஜல்ஜீவன் மிஷன் திட்டம் மூலம் அனைத்து கிராமங்களிலும் சுத்தமான குடிநீர் வழங்கும் நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என்றும் ஏ.என்.எஸ். பிரசாத் கேட்டுக்கொண்டார்.

– தூத்துக்குடி லீக்ஸ் 📰

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக