வியாழன், 21 ஆகஸ்ட், 2025

நாய் உரிமையாளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாய விதிகள்

சென்னை மாநகராட்சி கடும் எச்சரிக்கை

சென்னை, ஆக. 21 –
பெருநகர சென்னை மாநகராட்சி செய்தி வெளியீட்டின் மூலம் செல்லப்பிராணி நாய்களை வளர்ப்பவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் கடுமையான எச்சரிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.



சமீப காலமாக செல்ல நாய்கள் பொதுமக்களை தாக்கும் சம்பவங்கள் குறித்து அதிக புகார்கள் வந்துள்ள நிலையில், நாய்களை வளர்ப்போர் கட்டாயம் மாநகராட்சியின் உரிமம் பெற்றிருக்க வேண்டும் என்றும், வெறிநாய்க்கடி தடுப்பு தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

செல்ல நாய்களுக்கு உணவு, தண்ணீர் மற்றும் சரியான பராமரிப்பு வழங்கப்பட வேண்டும். மேலும் பொது இடங்களுக்கு அழைத்து செல்லும் பொழுது சங்கிலியுடன் கட்டி, முகமூடி (Muzzle) போடுதல் கட்டாயம். சங்கிலி இல்லாமல் அல்லது முகமூடி போடாமல் பொது இடங்களில் நாய்களை விடும் உரிமையாளர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒரே நேரத்தில் ஒரு நாயை மட்டுமே வெளியே அழைத்து செல்ல அனுமதி உண்டு. நாய்களை வீதிகள், பூங்காக்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளின் லிஃப்ட்களில் பிறருக்கு அச்சம் உண்டாக்கும் வகையில் நடத்த கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்திய பிராணிகள் நல வாரியம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதலின் படி விதிகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும். விதிகளை மீறி உரிமம் பெறாமல் அல்லது வெறித்தனமாக தாக்கும் தன்மையுள்ள நாய்களை பொது இடங்களில் விட்டால், உரிமையாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி கடுமையாக எச்சரித்துள்ளது.


👉 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக