தூத்துக்குடி லீக்ஸ் : 17.10.2021
இன்று (17.10.2021) உலக விபத்து காய தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மருத்துவ கல்லூரி மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவு மற்றும் தூத்துக்குடி காவல்துறை சார்பாக தூத்துக்குடி விவிடி சிக்னல் சந்திப்பில் விபத்து நடந்தது போல நிகழ்வு உருவாக்கப்பட்டு மருத்துவ பயிற்சி மாணவர்களின் விழிப்புணர்வு நாடகம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது.
இதில் விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு உதவி செய்வதன் முக்கியத்துவம் குறித்தும், அதன் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியும், விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு உதவி செய்வதில் பொதுமக்களின் பங்களிப்பு குறித்தும் இந்த விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது.
பின்னர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
அப்போது தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பேசுகையில்....
விபத்து யாருக்கு வேண்டுமானாலும் நிகழலாம். அதனால் விபத்திலிருந்து நம்மை பாதுகாத்து கொள்வதற்காகத்தான் இந்த விழிப்புணர்வு நாடகம் நடத்தப்படுகிறது. விபத்து ஏற்படாமல் இருக்கவேண்டும் என்றால் நாம் அனைவரும் சாலை விதிகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.
அவ்வாறு விபத்து நடந்தால் அதில் காயமடைந்தவர்களை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல உதவி செய்ய வேண்டும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் 2019ம் வருடம் 378 பேர் சாலை விபத்தில் இறந்துள்ளனர், 2020ம் ஆண்டு 344 பேர் சாலை விபத்தில் இறந்துள்ளனர், இந்த வருடம் இதுவரை 278 பேர் சாலை விபத்தில் இறந்துள்ளார்கள். இந்த சாலை விபத்துகள் ஏற்படாமல் இருக்க மாவட்ட காவல்துறை சார்பாக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது கண்டிப்பாக தலைகவசம் அணிந்து செல்ல வேண்டும்.
அதேபோன்று நான்கு சக்கர வாகனத்தில் செல்லும்போது சீட்பெல்ட் கட்டாயம் அணிய வேண்டும்.
இந்த இரண்டு விதிகளை கடைப்பிடித்தாலே சாலை விபத்துக்களில் மரணம் ஏற்படுவதை தடுக்க முடியும்.
விபத்தால் பாதிக்கப்படுபவர்களுக்கு காவல்துறையினர் மட்டுமல்ல பொதுமக்களும் உதவுவதற்காகவே அரசு 2014ம் ஆண்டு ‘குட் சமாரிட்டன் சட்டம்” (Good Samaritan laws) என்ற சட்டத்தை இயற்றியுள்ளது.
இதன்படி இதுபோன்று பாதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக்கொண்டிருப்பவர்களை பொதுமக்கள் மனிதாபிமானத்தோடு, அவர்களை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்கு அனுமதிக்கலாம், உதவுபவர்கள் பெயர் மற்றும் முகவரி போன்ற விபரங்களை தெரிவிக்க வேண்டியதில்லை, மருத்துவமனையிலும் கேட்கமாட்டார்கள்.
அதே போன்று காவல்துறையினரும் கேட்கமாட்டார்கள், தெரிவிக்க வேண்டிய அவசியமும் இல்லை. பொதுமக்களில் பலர் இதுபோன்று பாதிக்கப்படுபவர்களுக்கு உதவுவதற்கு தயாராக இருப்பார்கள் ஆனால் காவல்துறையால் சாட்சி, அது, இது என்று தங்களுக்கு பிரச்சனை ஏதும் வந்துவிடுமோ என்ற அச்சத்தில் உதவ யாரும் முன்வருவதில்லை.
அவ்வாறு பொதுமக்கள் உதவி செய்ய முடியாவிட்டாலும் கூட உடனடியாக அவசர மருத்துவ சிகிச்சைக்கு இலவச தொலை பேசி எண் 108ற்கோ அல்லது காவல்துறையின் இலவச அவசர உதவி எண். 100க்கோ பொதுமக்கள் உடனடியாக தகவல் தெரிவிக்கலாம்.
பொதுமக்கள் எவ்வித அச்சமும் இல்லாமல் இதுபோன்று பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்து, அவர்களது உயிரைக் காப்பாற்ற முன்வர வேண்டும், அவ்வாறு உதவி செய்து, மருத்துவமனைகளில் காயம்பட்டவர்களை அனுமதிப்பவர்களுக்கு அரசால் பண வெகுமதி அளிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வின் போது தூத்துக்குடி மருத்துவகல்லூரி மருத்துவ கண்காணிப்பாளர் ராஜேந்திரன், உறைவிட மருத்துவ அதிகாரி சைலஸ் ஜெயமணி, மருத்துவர்கள் சூரியபிரபா, பிரதாபன், பயிற்சி மருத்துவர்கள் மற்றும் தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர்
கணேஷ், தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தராஜன், போக்குவரத்துப் பிரிவு காவல் ஆய்வாளர் மயிலேறும் பெருமாள், உதவி ஆய்வாளர்கள் முத்துகணேஷ், உதயலெட்சுமி, போக்குவரத்து பிரிவு உதவி ஆய்வாளர் சுனைமுருகன், தென்பாக காவல் நிலைய தனிப்பிரிவு தலைமை காவலர் மாரிக்குமார் உட்பட காவல்துறையினர் உடனிருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக