திங்கள், 28 டிசம்பர், 2020

கல்லூரி மாணவி ஆர்யா திருவனந்தபுரம் மாநகராட்சி மேயரானார்!!!


 மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் நிறுத்தப்பட்டிருந்த 21 வயது கல்லூரி மாணவி ஆர்யா வெற்றி பெற்று திருவனந்தபுரம் மாநகராட்சி மேயராக பதவி ஏற்றுக் கொண்டார்.



கேரளாவில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் திருவனந்தபுரம் மாநகராட்சியை ஆளும் மார்க்சிஸ்ட் கூட்டணி கைப்பற்றியது. அங்கு மொத்தம் உள்ள 100 வார்டுகளில் 52 வார்டுகளை இந்த கூட்டணி வென்றது. இந்த முறை மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.


இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டத்தில் மேயர் வேட்பாளராக முடவன்முகல் வார்டில் வெற்றி பெற்ற ஆர்யா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். 21 வயதாகும் ஆர்யா, திருவனந்தபுரம் ஆல் செயின்ட்ஸ் கல்லூரியில் பி.எஸ்சி. கணிதம் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.



திருவனந்தபுரம் மாநகராட்சி கூட்டத்தில் மேயர் பதவிக்காக இன்று நடைபெற்ற தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் நிறுத்தப்பட்ட ஆர்யா 54 வாக்குகள் பெற்று 19 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.


பாரதீய ஜனதா கூட்டணி வேட்பாளர் சிமி ஜோதிஷ் 35 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். காங்கிரஸ் வேட்பாளர் மேரி புஷ்பம் 9 வாக்குகள் மட்டுமே பெற்றார்.


தேர்தலில் வெற்றி பெற்றதை தொடர்ந்து ஆர்யா மேயராக இன்று பதவி ஏற்றுக்கொண்டார். இந்தியாவிலேயே இளம் மேயராக இவர் தான் உள்ளார்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக