திங்கள், 19 அக்டோபர், 2020

குலசேகரன்பட்டினம் - தசரா திருவிழாவிற்கு வரும் பக்தர்களின் உயிரைப் பாதுகாக்க வலியுறுத்தி வருவாய் கோட்டாட்சியரிடம் இளஞ்சிறுத்தைகள் மனு!!!

 தூத்துக்குடி மாவட்டத்தில் உலகப் புகழ்பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கொரோனா பொதுமுடக்கத்தால் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தொடங்கியுள்ளது. 




குலசை முத்தாரம்மன் கோவிலுக்குச் செல்ல  திருச்செந்தூர் - குலசை நெடுஞ்சாலை பிரதான வழிச்சாலையாக இருப்பதால் இச்சாலையில் அனல்மின் நிலையம் மற்றும் துறைமுகம் அமைக்கும் கட்டுமானப் பணிகளுக்காக   நூற்றுக்கணக்கான லாரிகள் மூலம் மண் எடுத்துச்செல்லப்படுகிறது. அதிவேகமாக இயக்கப்படும்  இத்தகைய லாரிகளால் தசரா திருவிழாவிற்காக கோவிலுக்கு வரும் பக்தர்களின் உயிருக்கு பாதுகாப்பில்லாத நிலை உருவாகியுள்ளது. மேலும் லாரிகளில் எடுத்துச்செல்லப்படும் மண் முறையாக மூடப்பட்டு பாதுகாப்பாக எடுத்துச் செல்லப் படாததால் காற்றில் வீசப்படும் மண் சாலையில் திட்டுகளாகவும் படிந்து கிடக்கிறது. 

இதனால் வாகனங்கள் சீராக செல்ல முடியாமல் விபத்துக்குள்ளாகிறது. எனவே குலசை தசரா திருவிழா நிறைவு பெறும் வரையில் (27-10-2020) இச்சாலையில் மண் லாரிகள் மற்றும் தண்ணீர் லாரிகளை இயக்குவதை உடனே நிறுத்தி வைக்க வேண்டுமென்றும், அத்துடன் சாலைகளில் படிந்துள்ள மண்திட்டுகளை அகற்றி  வாகனங்கள் சீராக பயணிக்க உரிய நடவடிக்கைகளை விரைந்து முன்னெடுத்திட வேண்டுமென்றும் வலியுறுத்தி இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப்பாசறையின் சார்பில் திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் அவர்களை நேரில் சந்தித்து மனு அளித்து முறையிட்டோம். உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.


இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப்பாசறையின் மாவட்ட அமைப்பாளர் விடுதலைச்செழியன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முற்போக்கு மாணவர் கழக மாவட்ட அமைப்பாளர்  இரகுவரன், இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப்பாசறையின் மாவட்ட துணை அமைப்பாளர் இராவணன், சாத்தான்குளம் ஒன்றிய துணைச்செயலாளர் சுரேந்தர் ஆகியோர் உடனிருந்தனர்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக