தூத்துக்குடி: நவ 9
தமிழ்நாடு அரசு சார்பில் தமிழ் வளர்த்த இத்தாலியப் பேரறிஞர் வீரமாமுனிவரின் 346-வது பிறந்தநாள் விழா தூத்துக்குடி மாவட்டம், காமநாயக்கன்பட்டியில் நடைபெற்றது.
இதையொட்டி, அங்குள்ள வீரமாமுனிவர் மணிமண்டபத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன், கருணாநிதி எம்.எல்.ஏ. முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
வீரமாமுனிவரின் தமிழ்ப்பணியை நினைவுகூரும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், அவர் தமிழ் மொழிக்கு ஆற்றிய இலக்கியத் தொண்டுகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
இத்தாலி நாட்டில் பிறந்த கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி என்பவரே பின்னாளில் வீரமாமுனிவர் என்று அழைக்கப்பட்டார். கிறித்தவ சமயப் பணிக்காகத் தமிழகத்திற்கு வந்த அவர், தமிழ் மொழியின் சிறப்பால் ஈர்க்கப்பட்டு தமிழைக் கற்று, தமிழறிஞராகவும் சிறந்த இலக்கியப் படைப்பாளராகவும் திகழ்ந்தார்.
தமிழில் புகழ்பெற்ற காப்பியங்களில் ஒன்றான **தேம்பாவணி**யை இயற்றியதுடன், திருக்காவலூர்க் கலம்பகம், அடைக்கல மாலை, கித்தேரியம்மாள் அம்மானை உள்ளிட்ட சிற்றிலக்கியங்களையும் படைத்துள்ளார்.
மேலும், தமிழ் இலக்கண வளர்ச்சிக்கு தொன்னூல் விளக்கம், கொடுந்தமிழ் இலக்கணம் போன்ற நூல்களையும், தமிழ் அகராதி வளர்ச்சிக்கு சதுரகராதி என்ற நூலையும் வழங்கியுள்ளார். தமிழில் உரைநடை இலக்கிய வளர்ச்சிக்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளார். குறிப்பாக, பரமார்த்த குரு கதை தமிழ் இலக்கியத்தில் நகைச்சுவை உரைநடைப் படைப்பாகத் தனிச்சிறப்புப் பெற்றுள்ளது.
தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிராத போதிலும், அதன் இலக்கியம், இலக்கணம், உரைநடை, அகராதி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஆழ்ந்த புலமை பெற்று அரிய நூல்களைப் படைத்த வீரமாமுனிவரின் தமிழ்த்தொண்டு என்றும் போற்றத்தக்கது.
இந்த நிகழ்ச்சியில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கருப்பணராஜவேல், கயத்தாறு வட்டாட்சியர் அப்பனசாமி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.







