Tamil Nadu updates
photo news by Arunan Reporter
பச்சையாறு அணைக்கட்டை தூர்வார வேண்டும்!
ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெற நாங்குநேரி எம்.எல்.ஏ.விடம் பொதுமக்கள் கோரிக்கை மனு!
திருநெல்வேலி, அக்.29:
திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகே உள்ள பச்சையாறு அணைக்கட்டை தூர்வார நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மஞ்சுவிளை கிராம பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் சார்பில் நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரெட்டியார்பட்டி நாராயணனிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
களக்காடு சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களுக்கு பச்சையாறு அணைக்கட்டு முக்கிய பாசன ஆதாரமாக விளங்கி வருகிறது. ஆனால், இந்த அணைக்கட்டு நீண்ட காலமாகத் தூர்வாரப்படாததால், அணைப்பகுதியில் மண் மேடுகள் உருவாகி நீர் சேமிப்புத் திறன் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
எனவே, பச்சையாறு அணைக்கட்டை முழுமையாகத் தூர்வாரி, கூடுதல் தண்ணீரைச் சேமிக்க நடவடிக்கை மேற்கொண்டால், சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுவதுடன், விவசாயிகளின் வாழ்வாதாரமும் மேம்படும் என மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
விவசாயிகளின் கோரிக்கை மனுவைப் பெற்றுக்கொண்ட நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரெட்டியார்பட்டி நாராயணன், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு சென்று உரிய நடவடிக்கை மேற்கொள்ள ஆவன செய்வதாக உறுதியளித்தார்.
இந்தச் சந்திப்பின்போது மஞ்சுவிளையைச் சேர்ந்த ரவிக்குமார், மார்ச்சூரி பெட்ரோல் பங்க் உரிமையாளர் மனாயின், பிளாசோ சாம்பீட்டர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
பச்சையாறு அணைக்கட்டைத் தூர்வாரும் பணியை விரைந்து மேற்கொண்டு விவசாயிகளின் நீண்டகாலக் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக