Tamil Nadu updates,8-10-2026
photo news by Arunan Reporter
தூத்துக்குடியில் இரண்டாம் ரயில்வே கேட் அருகே கொம்பு கோனார் பாலம் பாதி இடிந்து விழுந்தது!
பொதுமக்கள் அவதி – உடனடியாக சீரமைக்க கோரிக்கை
தூத்துக்குடி, அக். 8:
தூத்துக்குடி மாநகரில் இரண்டாம் ரயில்வே கேட் அருகே, விவிடி பூங்கா பகுதியில் உள்ள கொம்பகோனார் பாலத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்ததால், அப்பகுதியில் பொதுமக்கள் சென்று வருவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளதால், அந்த வழியாக செல்ல முடியாமல் பொதுமக்கள் சுற்றுப்பாதையில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
பக்கிள் ஓடையின் வரலாறு
ஆங்கிலேயர் காலத்தில் தூத்துக்குடியில் ஹாரி மில் என அழைக்கப்பட்ட மதுரா கோட்ஸ் நூற்பாலை தென்கிழக்கு கடற்கரைப் பகுதியில் செயல்பட்டு வந்தது. அங்கு பணியாற்றிய ஆண், பெண் தொழிலாளர்கள் பெரும்பாலும் தூத்துக்குடி வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் இருந்து வேலைக்கு வந்து சென்றனர்.
மழைக்காலங்களில் ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால், வெள்ளநீர் குறையும் வரை தொழிலாளர்கள் அந்தப் பகுதிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் தொழிலாளர்கள் வருகை பாதிக்கப்பட்டு, ஆட்கள் பற்றாக்குறையால் நூற்பாலை இயக்கத்திலும் பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, ஹாரி மில் நிர்வாகத்தினர் மற்றும் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பாதிக்கப்படுவது குறித்து பக்கிள் துரையிடம் எடுத்துரைத்தனர். அதன் தொடர்ச்சியாக மடத்தூரில் இருந்து தூத்துக்குடி திரேஸ்புரம் வரை ஓடை அமைப்பு உருவாக்கப்பட்டு, இடையிடையே 20-க்கும் மேற்பட்ட பாலங்கள் அமைக்கப்பட்டு போக்குவரத்துக்கு ஏற்ற வகையில் சீரமைக்கப்பட்டதாக வரலாற்றுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த காலத்தில் உருவாக்கப்பட்ட இந்த ஓடை அமைப்பே இன்றளவும் தூத்துக்குடி மாநகரின் முக்கிய கழிவு நீர்வழித்தடமாக விளங்கும் பக்கிள் ஓடை என அழைக்கப்படுகிறது.
தூத்துக்குடி ஒன்றாம் கேட், எஸ்.எஸ். பிள்ளை மார்க்கெட் பாலம் உள்ளிட்ட முக்கிய பாலங்களின் வரிசையில், விவிடி பூங்கா அருகே அமைந்துள்ள கொம்பகோனார் பாலமும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்து வருகிறது.
இந்நிலையில், கொம்பகோனார் பாலத்தின் ஒரு பகுதி தற்போது இடிந்து விழுந்திருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகமும், தூத்துக்குடி மாநகராட்சியும் உடனடியாக சம்பவ இடத்தை ஆய்வு செய்து, பாலத்தின் பாதுகாப்புத் தன்மையை ஆய்வு செய்து, சேதமடைந்த பகுதியை விரைந்து சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக