தூத்துக்குடி மேலூர் ரயில் நிலையம், அண்ணாநகர் சாலை மற்றும் புதிய பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் கோரி மாநகராட்சிக்கு கோரிக்கை!!!
தூத்துக்குடி: செப் 30
தூத்துக்குடி மேலூர் ரயில் நிலையம் அருகே சாலை மற்றும் வடிகால் வசதிகளை மேம்படுத்த வேண்டும், அண்ணாநகர் மெயின் ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி நடைமேடையை பொதுமக்கள் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையரிடம் போர்ட் சிட்டி வெல்ஃபேர் அசோசியேசன் தலைவர் கணேசன் கோரிக்கை மனு அளித்துள்ளார்.
அந்த மனுவில், தூத்துக்குடி வளர்ந்து வரும் தொழில் நகரமாக இருப்பதுடன், சென்ன ை, பாலக்காடு, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. கீழூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் ரயில்கள் மேலூர் ரயில் நிலையத்திலும் நின்று பயணிகளை ஏற்றி, இறக்கிச் செல்கின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் பயணிகள் நலன் கருதி மேலூர் ரயில் நிலையத்தின் தென்புறத்தில், தேவாலயம் முதல் மேலூர் ரயில்வே டிக்கெட் முன்பதிவு அலுவலகம் வரையிலான கிழக்கு–மேற்கு தார் சாலையையும், வடிகால் வசதியையும் மேம்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தென்புறத்தில் இருந்து வரும் பயணிகள் ரயில்வே கேட்டை கடக்காமல் மேலூர் ரயில் நிலையத்திற்குள் செல்ல வசதியாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அண்ணாநகர் பிரதான சாலையில் விவிடி சிக்னல் முதல் நான்காம் கேட் வரையிலான இருபுற நடைமேடைகளும் தனிநபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் பொதுமக்கள் சாலையிலேயே நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்றி நடைமேடைகளை பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் ...மாநகராட்சிக்கு சொந்தமான இருசக்கர வாகன நிறுத்துமிடத்தின் தரைத்தளம் குண்டும் குழியுமாக இருப்பதால் மழைக்காலங்களில் தண்ணீரும் சகதியும் தேங்கி வாகனங்களை நிறுத்துவோர் சிரமப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, தரைத்தளத்தை தரமான சிமெண்ட் தளமாக அமைத்து, மேற்கூரையும் அமைத்து தர வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
மேற்கண்ட கோரிக்கைகள் தொடர்பாக கடந்த 29.05.2026 அன்று ஏற்கனவே மாநகராட்சியிடம் மனு அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விவரமும் தெரிவிக்கப்படவில்லை என்றும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்களின் நலன் கருதி மேற்கண்ட கோரிக்கைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து, அதன் விவரத்தைத் தெரிவிக்க வேண்டும் என போர்ட் சிட்டி வெல்ஃபேர் அசோசியேசன் தலைவர் கணேசன் மாநகராட்சி ஆணையரிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக