ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு: காவல்துறையினர் மீது நடவடிக்கை குறித்து அரசு தெளிவுபடுத்த வேண்டும்
தூத்துக்குடி மக்களின் எதிர்பார்ப்பை சட்டப்பேரவையில் அறிவிக்க வேண்டும் மக்கள் சிவில் உரிமை கழகம் வலியுறுத்தல்
தூத்துக்குடி:செப 14
தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து தமிழக அரசு தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வேண்டும் என்று மக்கள் சிவில் உரிமை கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து...
மக்கள் சிவில் உரிமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழக முதல்வர் ஆட்சிப் பொறுப்பேற்பதற்கு முன்பு, ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின்போது தூத்துக்குடியில் அப்பாவி பொதுமக்கள் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த நிலையில், அவர்களது துயரத்தில் பங்கேற்றதுடன், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை இரவோடு இரவாக சந்தித்து, என்றும் தூத்துக்குடி மக்களோடு இருப்பேன் என்று உறுதியளித்ததை மக்கள் அனைவரும் அறிவர்.
இதனால், ஆட்சிக்கு வந்ததும் தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கையுடன் தூத்துக்குடி மக்கள் காத்திருந்தனர்.
எந்த அறிவிப்பும் இல்லை???
ஆனால், ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதல் இன்றுவரை, 2018-ம் ஆண்டு மே 22-ம் தேதி நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டிற்கு காரணமான காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் எந்தத் தெளிவான அறிவிப்பும் வெளியாகவில்லை.
காவல்துறை மீது நடவடிக்கை கைவிடல் என பரவும் செய்தி உண்மையா?...
மாறாக, காவல்துறை அதிகாரிகள் மீதான நடவடிக்கைகள் கைவிடப்பட்டதாக சில பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகி வருகின்றன.
தூத்துக்குடி மக்கள் அதிர்ச்சி!!!!
இந்தச் செய்திகள் தூத்துக்குடி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. ஏற்கனவே துயரத்தில் உள்ள மக்களின் மனவேதனையை மேலும் அதிகரிக்கும் வகையில் இந்தச் செய்திகள் அமைந்துள்ளன.
ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு தொடர்பாக விசாரணை நடத்திய ஒருநபர் ஆணையத்தின் பரிந்துரைகளை தமிழக அரசு நிறைவேற்றுமா என்பது குறித்தும், இந்த விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும் என உயர்நீதிமன்றம் கோரியுள்ளது.
அரசு அறிவிப்பு வெளியிட வேண்டும்!!!
எனவே, தற்போது நடைபெற்று வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, தூத்துக்குடி மக்களின் எதிர்பார்ப்பான துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தொடர்புடைய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை உறுதி செய்யும் வகையில் அரசு அறிவிப்பு வெளியிட வேண்டும்.
தற்போது தமிழக அரசு நிலைப்பாடு என்ன?
மேலும், மக்களுக்கான அரசாக மக்களோடு நின்று, உயர்நீதிமன்றத்திலும் முறையான குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளும் நிலைப்பாட்டை தமிழக அரசு தெளிவாகத் தெரிவிக்க வேண்டும்.
நிம்மதி!!!
2018-ம் ஆண்டு நடைபெற்ற உயிரிழப்புகளுக்குப் பின்னர், ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்பட்டுள்ளது என்ற நிம்மதியில் தூத்துக்குடி மக்கள் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில், ஸ்டெர்லைட் விவகாரத்தில் தமிழக அரசின் தற்போதைய நிலைப்பாடு என்ன என்பதையும் அரசு வெளிப்படையாகத் தெளிவுபடுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
எனவே, தூத்துக்குடி மக்களின் உணர்வுகளையும் எதிர்பார்ப்புகளையும் கருத்தில் கொண்டு, துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கையை உறுதி செய்ய வேண்டும் என மக்கள் சிவில் உரிமை கழகத்தின் தூத்துக்குடி மாவட்டம் சார்பில் அழுத்தமாக வலியுறுத்துகிறோம்.
இவ்வாறு மக்கள் சிவில் உரிமை கழகம் (பி.யூ.சி.எல்.), தூத்துக்குடி மாவட்டம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக