சென்னை மே14
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் தொடர்ந்து உருவாகி வரும் உள்கட்சி பிளவுகள், கட்சியின் அதிகாரப்பூர்வ ஊடகங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாக, அதிமுக மீண்டும் தனது அதிகாரப்பூர்வ நாளிதழ் மற்றும் தொலைக்காட்சி ஊடகத்தை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இது பற்றி செய்தியாவது...
அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழாக நீண்ட காலம் செயல்பட்டது ‘நமது எம்.ஜி.ஆர்.’ நாளிதழ். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஏற்பட்ட அரசியல் மாற்றங்களின் பின்னணியில், அந்த நாளிதழ் டிடிவி தினகரன் அணியின் கட்டுப்பாட்டுக்கு சென்றது. அதேபோல், அதிமுகவின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சி ஊடகமாக இருந்த ‘ஜெயா டிவி’ சசிகலா தரப்பின் வசமாகியது.
இதையடுத்து, சசிகலா கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பின்னர், அதிமுகவுக்கென புதிய அதிகாரப்பூர்வ ஊடகமாக ‘நியூஸ் ஜெ’ தொலைக்காட்சி மற்றும் ‘நமது அம்மா’ நாளிதழ் தொடங்கப்பட்டது. இவ்விரு ஊடகங்களும் முன்னாள் அமைச்சர்கள் சி.வி. சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி ஆகியோரின் தலைமையில் செயல்பட்டு வந்தன.
ஆனால் தற்போது அதிமுகவில் ஏற்பட்டுள்ள புதிய உள்கட்சி மோதலால், சி.வி. சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி ஆகியோர் தனி அணியாக செயல்படுவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர்கள் கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனைத் தொடர்ந்து, ‘நமது அம்மா’ மற்றும் ‘நியூஸ் ஜெ’ ஊடகங்களில் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக தலைமையுடன் தொடர்புடைய செய்திகள் புறக்கணிக்கப்படுவதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு நிலவுகிறது.
இந்த சூழ்நிலையில், அதிமுகவுக்கு மீண்டும் தனி அதிகாரப்பூர்வ நாளிதழ் மற்றும் தொலைக்காட்சி ஊடகம் உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக கட்சி நிர்வாகிகள் மத்தியில் கருத்து நிலவி வருகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக