Tamil Nadu updates
photo news by Arunan journalist
தூத்துக்குடி, ஜனவரி 31 :
2026 சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு தமிழக முழுவதும் அஇஅதிமுக தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் பிறந்த நாளான ஜனவரி 17 அன்று, அஇஅதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி, முதற்கட்டமாக ஐந்து முக்கிய வாக்குறுதித் திட்டங்களை அறிவித்தார்.
அந்த திட்டங்களை பொதுமக்களிடையே கொண்டு சேர்க்கும் வகையில், துண்டுப் பிரசுரங்கள் மூலம் தேர்தல் அறிக்கையை விளக்கி வழங்க வேண்டும் என கட்சி தலைமையகம் உத்தரவிட்டது. அதன்படி தமிழக முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் அஇஅதிமுக தலைவர்கள் ஒன்றிணைந்து களத்தில் இறங்கி, பொதுமக்களை நேரில் சந்தித்து வாக்குறுதி துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து வருகின்றனர்.
ஆனால் தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் மட்டும் வேறுபட்ட நிலை உருவாகி வருவது கட்சி தொண்டர்களிடையே பெரும் விவாதமாகியுள்ளது.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட அஇஅதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் தனது ஆதரவாளர்களுடன் துண்டுப் பிரசுரங்கள் வழங்கி வருகிறார்.
அதே நேரத்தில், வர்த்தக அணி மாநில செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த. செல்லப்பாண்டியனும் தனி அணியாக களமிறங்கி பிரசாரம் செய்து வருகிறார்.
ஏற்கனவே ஒருமுறை வழங்கப்பட்ட பகுதிகளில் மீண்டும் மீண்டும் தனித்தனியாக பிரசுரங்கள் வழங்கப்படுவதால், தூத்துக்குடி தொகுதியில் கட்சிக்குள் ஒற்றுமை இல்லை என்ற தோற்றம் உருவாகி வருகிறது என தொண்டர்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தில் மற்ற மாவட்டங்களில் முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், நிர்வாகிகள் அனைவரும் மனக்கசப்புகளை மறந்து ஒன்றிணைந்து களத்தில் இறங்கி தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வரும் நிலையில், தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் மட்டும் முன்னாள் அமைச்சர்கள் தனித்தனியாக செயல்படுவது கட்சி வளர்ச்சிக்கு பாதகமாகும் என தொண்டர்கள் கவலை வெளியிடுகின்றனர்.
“தூத்துக்குடி தொகுதியை அஇஅதிமுக கைவிட்டு விடுகிறதா?” என்ற கேள்வி தற்போது தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த நிலையை கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கவனித்து, அனைவரையும் ஒன்றிணைத்து ஒரே மேடையில் கொண்டு வந்து தேர்தல் பணிகளை ஒருங்கிணைப்பாரா? என்ற எதிர்பார்ப்பும், அதே நேரத்தில் கவலையும், தூத்துக்குடி அஇஅதிமுக தொண்டர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.
![]() |
| இது முன்னாள் அமைச்சர் எஸ் பி சண்முகநாதன் பெயரில் பொதுமக்கள் இடம் வழங்கிய துண்டு பிரசுரம் |
![]() |
| இது முன்னாள் அமைச்சர் சித செல்லப்பாண்டியன் பெயரில் பொதுமக்கள் இடம் வழங்கிய துண்டு பிரசுரம் |
இத்தனைக்கும்... இவர் தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் வேட்பாளராக போட்டியிட அதிமுக தலைமைக்கு விண்ணப்பம் வழங்கி இருப்பதாக கூறப்படுகிறது .



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக