தூத்துக்குடி, ஜன.8:
தூத்துக்குடி மாவட்டம் தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள கஞ்சா ஆயிலை வைத்திருந்த இரு நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தாளமுத்துநகர் காவல் நிலைய ஆய்வாளர் அருளப்பன் தலைமையில், சார்பு ஆய்வாளர் முத்துராஜா, சிறப்பு சார்பு ஆய்வாளர் சிவன் உள்ளிட்ட காவலர்கள், நேற்று (07.01.2026) ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கோவில் பிள்ளைவிளை சந்திப்பு பகுதியில் சந்தேகத்திற்கிடமாக இருசக்கர வாகனத்தில் நின்றிருந்த தூத்துக்குடியைச் சேர்ந்த ராஜேஷ் (39) மற்றும் பிரான்சிஸ் (22) ஆகிய இருவரை சோதனை செய்ததில், அவர்கள் கஞ்சா ஆயில் வைத்திருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து, இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.1 கோடி மதிப்புள்ள கஞ்சா ஆயிலும், ஒரு இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் துரிதமாக செயல்பட்டு போதைப்பொருள் கடத்தலை தடுத்த தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசாரை, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நை.சிலம்பரசன் அவர்கள் வெகுவாக பாராட்டினார்.
மேலும், கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தலை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில், தமிழ்நாடு அரசு உருவாக்கியுள்ள “DrugFreeTN” செயலியின் மூலம், பொதுமக்கள் அநாமதேயமாக (Anonymous) புகார் அளிக்கலாம் என காவல்துறை தெரிவித்துள்ளது. புகார் அளிப்பவர்களின் விவரங்கள் முழுமையாக ரகசியமாக பாதுகாக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் போதை பழக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில், போதைப்பொருள் விற்பனை மற்றும் வாங்குதல் தொடர்பான செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நை.சிலம்பரசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
24x7 காவல்துறை உதவி எண் / WhatsApp: 95141 44100
செய்தி புகைப்படங்களில் செயற்கை தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது

.png)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக