தூத்துக்குடி லீக்ஸ் – நாளிதழ் செய்தி
தூத்துக்குடி, டிசம்பர் 27:
தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளில் தெருவிளக்குகள் எரியாமல் சாலைகள் இருளில் மூழ்கியுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்த புகாரை அடுத்து, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் நேரடியாகச் சென்று மாநகரம் முழுவதையும் ஆய்வு செய்தார்.
காரில் சென்றால் பிரச்சினைகளை சரியாகக் கண்டறிய முடியாது என்ற எண்ணத்தில், இருசக்கர வாகனத்தின் பின் இருக்கையில் அமர்ந்துகொண்டு இரவு நேரத்தில் சுமார் இரண்டு மணி நேரம் மாநகரின் பல்வேறு பகுதிகளை தெருத்தெருவாகச் சென்று ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது, எந்தப் பகுதிகளில் தெருவிளக்குகள் எரியவில்லை என்பது குறித்த குறிப்புகளை எடுத்துக்கொண்ட மேயர், சாலைகளின் நிலை, சாலை விரிவாக்கம், கழிவுகள், குப்பைகள், மணல் தீட்டுகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளையும் நேரடியாகக் கண்டறிந்தார்.
ஆய்வின் அடிப்படையில், முக்கிய சாலைகளில் எரியாத மின்விளக்குகள் கணக்கெடுக்கப்பட்டு, உடனடியாகப் பொருத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், சாலைகளில் உள்ள கழிவுகளை அகற்றுவதற்கான பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கிய பொறுப்பை உணர்ந்து செயல்படும் விதமாகவும், உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு ஆலோசனையின்படியும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி முன்னெடுப்பிலும் மேயர் ஜெகன் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இரவு நேரத்தில், பாதுகாப்பு அணியுடன் கூட இல்லாமல், இருசக்கர வாகனத்தில் மாநகரம் முழுவதும் சுற்றிப் பார்த்த மேயர் ஜெகனின் இந்த திடீர் ஆய்வை பார்த்த பொதுமக்கள் வியப்படைந்தனர்.
மேலும், மேயர் இரவு நேரத்தில் மாநகரைப் பார்வையிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, பொதுமக்கள் மத்தியில் பெரும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக