தூத்துக்குடி டிச 18
தூத்துக்குடி பழைய மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம் முடிவடைந்த பின்பு, மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் பிரியங்கா ஆகியோர் திடீரென இரண்டு மாடிகள் ஏறி மொட்டை மாடிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
மழை பெய்துக் கொண்டிருந்த நிலையில் குடை பிடித்துக் கொண்டு மேயரும் ஆணையரும் மொட்டை மாடிக்கு சென்றதை தொடர்ந்து, அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் உடனடியாக பின் தொடர்ந்து சென்றனர். மொட்டை மாடியை பார்வையிட்ட மேயர் ஜெகன் பெரியசாமி, அங்கு ஒரு பகுதியில் சிறிய அளவில் மரம் வளர்ந்திருப்பதை கண்டறிந்து, “இது உடனடியாக அகற்றப்பட வேண்டும். இதனை இதுவரை ஏன் அகற்றவில்லை?” என அதிகாரிகள் மற்றும் பணியாளர்களிடம் கேள்வி எழுப்பினார்.
அதேபோல், மொட்டை மாடியில் தேவையின்றி வைக்கப்பட்டிருந்த பழைய பைப்புகளை சுட்டிக்காட்டிய அவர், அவற்றை உடனடியாக அகற்றி மாநகராட்சி குடோனில் பாதுகாப்பாக வைக்க வேண்டும் என உத்தரவிட்டார். மேலும் சில இடங்களில் மழைநீர் தேங்கி கீழே ஒழுகுவதை கவனித்த மேயரும் ஆணையரும், மழைநீர் லீக்கேஜ் உள்ள அனைத்து பகுதிகளையும் கண்டறிந்து முழுமையாக சரிசெய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு கடும் அறிவுறுத்தல் வழங்கினர்.
கிழக்கு மண்டல மக்கள் குறை தீர்க்கும் முகாமுக்கு வந்த நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் மொட்டை மாடிக்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டது அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
ஆய்வின்போது அதிகாரிகள் மற்றும் பணியாளர்களிடம் பேசிய மேயர் ஜெகன் பெரியசாமி, “மாநகராட்சி அலுவலகங்கள் மற்றும் கட்டிடங்கள் 100 சதவீதம் பாதுகாப்பாக பராமரிக்கப்பட வேண்டும்.
இது அந்தந்த அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகள், பணியாளர்களின் கடமை. திடீரென மீண்டும் நான் ஆய்வு செய்ய வருவேன். அப்போது அனைத்து குறைகளும் சரிசெய்யப்பட்டு, மொட்டை மாடி சுத்தமாக இருக்க வேண்டும்,” என எச்சரித்தார்.
இந்த ஆய்வின்போது உதவி ஆணையர் வெங்கட்ராமன், நகரமைப்பு திட்ட செயற்பொறியாளர் வேலாயுதம், உதவி செயற்பொறியாளர் ராஜேஷ்கண்ணா, சுகாதார ஆய்வாளர் ராஜசேகர், இளநிலை பொறியாளர் பாண்டி, உதவி பொறியாளர்கள் ஹரிஹரன், நித்தியகல்யாணி, அனுசௌந்தர்யா, தொழில்நுட்ப உதவியாளர்கள் சரண்பிரசாத், பிரின்ஸ் பிரதீப், ஆனந்தஜோதி, கவுன்சிலர்கள் ராமுஅம்மாள், எடின்டா, மும்தாஜ், தனலட்சுமி, பேபி ஏஞ்சலின், ரெக்ஸ்லின், மரியகீதா, போல்பேட்டை பகுதி பிரதிநிதி ஜேஸ்பர், மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
photo news by sunmugasuthram press club president

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக