தூத்துக்குடி, அக்.23 - பத்திரிகையாளர்களுக்கு சலுகை விலையில் வீட்டு மனை வழங்கப்படாததை கண்டித்து இன்று (வியாழன்) காலை தூத்துக்குடி பிரஸ் கிளப் அலுவலகம்
முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடியில் வசிக்கும் பத்திரிகையாளர்களின் 30 ஆண்டுகளுக்கும் மேலான நீண்ட நாள் கோரிக்கையான சலுகை விலை வீட்டு மனை வழங்கப்படாததை கண்டித்து தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
காலை 11 மணியளவில் தூத்துக்குடி பிரஸ் கிளப் சங்க தலைவர் சண்முகசுந்தரம் தலைமையிலும், செயலாளர் மோகன் முன்னிலையிலும் ஆர்ப்பாட்டம் தொடங்கியது.
அரசியல் தலைவர்களின் வருகையால் சலசலப்பு
ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த பத்து நிமிடங்களில், அதிமுக முன்னாள் அமைச்சர் சிட செல்லப்பாண்டியன், முன்னாள் மேயர் அந்தோனி கிரேஸி, வழக்கறிஞர் செங்குட்டுவன், பாஜக ராஜவேலு உட்பட பல்வேறு அரசியல் கட்சிகளைச் சார்ந்தவர்கள் திடீரெனக் கலந்துகொண்டதால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
"2026 ல் அதிமுக ஆட்சியில் வீட்டு மனை தருவோம்" - முன்னாள் அமைச்சர் உறுதி
இதையடுத்து முன்னாள் அமைச்சர் சித செல்லப்பாண்டியன் பேசுகையில், ...
"கடந்த அதிமுக ஆட்சியில் இந்த பத்திரிகையாளர் சங்கத்திற்கு இடம் தொடர்பான விஷயங்களை செய்து கொடுத்தோம். அதை அவர்கள் மறக்கவில்லை" என்று குறிப்பிட்டார்.
"இன்னும் சில மாதங்களில் அதிமுக ஆட்சி வந்துவிடும். புரட்சித் தமிழர் எடப்பாடியார் நிச்சயமாக தூத்துக்குடியில் ஒருவர் விடாமல் இங்குள்ள அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் சலுகை விலையில் வீட்டு மனைகள் தருவோம் என உறுதி கூறுகிறேன்" என்று அவர் தெரிவித்தார்.
"பத்திரிகையாளர்கள் மற்றவர்கள் உரிமை பிரச்சினைக்காக போராடும்போது பக்கபலமாக தோள் கொடுப்பார்கள், போட்டோ எடுப்பார்கள். இன்று பத்திரிகையாளர்களே தங்கள் உரிமைக்காக இந்த அவல ஆட்சியில் போராட்ட நிலைக்குத் தள்ளப்பட்டு, அவர்களை யாரோ போட்டோ எடுத்துக்கொண்டிருக்கிறார்கள் பாருங்களேன்" என்று அவர் குறிப்பிட்டார்.
பல்வேறு சங்கத் தலைவர்கள் பங்கேற்பு
ஆர்ப்பாட்டத்தில் தூத்துக்குடியில் உள்ள அனைத்துப் பத்திரிகை சங்கங்களின் தலைவர்கள் டூட்டி முருகன், உதயம் பிரான்சிஸ் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
(நமது சிறப்பு நிருபர் அறிக்கை)





கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக