தூத்துக்குடி, அக்டோபர் 19 -
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் அதிநவீன தொழில்நுட்ப கண்காணிப்பு அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் இ.கா.ப தெரிவித்துள்ளார்.
கண்காணிப்பு கோபுரங்கள் அமைப்பு
தூத்துக்குடி மாநகரில் பொதுமக்கள் அதிகம் கூடும் முக்கிய இடங்களில் 4 கண்காணிப்பு கோபுரங்கள் நிறுவப்பட்டுள்ளன. தென்பாகம் காவல் நிலையம் முன்பு உள்ள சின்னத்துரை & கோ சந்திப்பு, ஜின் பேக்டரி ரோடு சந்திப்பு, கண்ணா சில்க் அருகே மற்றும் WGC ரோடு அழகர் சந்திப்பு ஆகிய இடங்களில் இந்த கோபுரங்கள் செயல்படுகின்றன.
360 டிகிரி கேமரா ரோந்து வாகனங்கள்
360 டிகிரி கண்காணிப்பு வசதியுடன் கூடிய சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்ட 2 ரோந்து வாகனங்கள் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் தொடர்ச்சியாக ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
விரிவான கண்காணிப்பு வலையமைப்பு
தூத்துக்குடி நகர உட்கோட்ட எல்லைக்குட்பட்ட முக்கிய சாலைகள், சந்திப்புகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மொத்தம் 686 கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட்டு, அவை நேரடியாக கட்டுப்பாட்டு அறையிலிருந்து கண்காணிக்கப்படுகின்றன.
"இரவு நேரங்களில் துல்லியமாக கண்காணிக்கும் வகையில் அதிநவீன தொழில்நுட்ப "ட்ரோன்" கேமராக்களும் பயன்படுத்தப்படுகின்றன,"
பாதுகாப்பு வழிகாட்டுதல்கள்
போக்குவரத்து நெரிசல் தவிர்க்க கூடுதல் போலீசார் பணியமர்த்தப்பட்டுள்ளனர். ஒலிப்பெருக்கி மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
மது அருந்திவிட்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல், மதுபோதையில் வாகனம் ஓட்டுதல், வாகன வேக பந்தயம், அதிக ஒலி எழுப்புதல் போன்றவற்றை தவிர்க்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பட்டாசு வெடிப்பு வழிகாட்டுதல்
காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் மட்டுமே பட்டாசு வெடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குழந்தைகள் பெற்றோர் கண்காணிப்பில் பாதுகாப்பாக பட்டாசு வெடிக்க வேண்டும். பொதுமக்கள் கூடும் இடங்கள், கூரை வீடுகள், பட்டாசு கடைகள், மருத்துவமனைகள், பெட்ரோல் பங்குகள் அருகே பட்டாசு வெடிப்பதை தவிர்க்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் இ.கா.ப பொதுமக்கள் விபத்தில்லா தீபாவளியை கொண்டாடுமாறும், காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொண்டு தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக