திங்கள், 26 மே, 2025

தூத்துக்குடியில் பனைமரத் தொழிலாளர் பாதுகாப்பு மாநாட்டை முன்னிட்டு ஆலோசனைக் கூட்டம் – எர்ணாவூர் நாராயணன் பேட்டி

தூத்துக்குடி, மே 27:

தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நல வாரியத்தின் தலைவர் மற்றும் சமத்துவ மக்கள் கழக நிறுவனர் எர்ணாவூர் நாராயணன் தலைமையில், பனைமரத் தொழிலாளர் பாதுகாப்பு மாநாட்டை முன்னிட்டு தென் மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.



இந்த கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் காமராசு, ஜெபராஜ், டேவிட் அந்தோணி பிச்சை உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். 


தூத்துக்குடி மாவட்ட செயலாளர் மாலை சூடி அற்புதராஜ் வரவேற்று பேசினார். மாநில பொதுச் செயலாளர் சூலூர் சந்திரசேகர், துணைத்தலைவர் நிப்பான் தனுஷ்கோடி, பொருளாளர் கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்திற்கு முன் செய்தியாளர்களை சந்தித்த எர்ணாவூர் நாராயணன், பனைமரத் தொழிலாளர் நலவாரியத் தலைவராக பதவி ஏற்ற பின் 15,000 புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டதாக தெரிவித்தார்.


 சென்னை முதல் கன்னியாகுமரி வரை ஒரு கோடி பனை விதைகள் நடவு செய்யப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

“பனைமரத் தொழிலாளர்கள் மீது காவல்துறையினர் கடுமையாக நெருக்கடி கொடுத்து வருகின்றனர். இதனால் பலர் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.


 அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் ராமநாதபுரத்தில் பனைமரத் தொழிலாளர் பாதுகாப்பு மாநாடு நடைபெறும். இதில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்க உள்ளார்,” என்றார்.

மேலும், பனை ஏறுவதற்கான தொழில்நுட்ப வசதிகளை உருவாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், நலவாரியத்திற்கு போதுமான நிதி ஒதுக்கப்பட வேண்டும் எனவும், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மாநாட்டில் பங்கேற்க உள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் தொடரப்படும் என்றும், இடவசதி தொடர்பான விவாதம் பின்னர் தீர்மானிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக