#தூத்துக்குடி லீக்ஸ்
Tamil Nadu updates, photo news by sunmugasuthram press club president
தூத்துக்குடி, மே 20:
2023 டிசம்பர் மாத கனமழையால் வீடுகளை இழந்து தவித்த குடும்பங்களுக்கு கட்டப்பட்ட 10 புதிய வீடுகளை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் இன்று திறந்து வைத்தார்.
2023 டிசம்பர் மாதம் தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த பெரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் பல பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. ஏராளமான மக்கள் தங்களது வீடுகளையும், உடைமைகளையும் இழந்து தவித்தனர். அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பத்துக்கும் மேற்பட்ட அமைச்சர்களை மாவட்டத்தில் தங்கியிருந்து வெள்ள நிவாரணப் பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன், தூத்துக்குடி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தீவிரமாக வெள்ள மீட்பு நிவாரணப் பணிகளை மேற்கொண்டு, மக்கள் விரைவில் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப உதவினார். மேலும், வீடுகளை முற்றிலும் இழந்தவர்களுக்கு புதிய வீடுகள் அமைத்துத் தருவதாக வாக்குறுதி அளித்திருந்தார்.
அதன்படி, தூத்துக்குடி மாநகராட்சி 49-வது வார்டு ராஜபாண்டி நகர் மற்றும் கருணாநிதி நகரில் வெள்ளத்தால் வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு, ஜே.எஸ்.டபுள்யு நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு நிதியுதவியுடன் முதல் கட்டமாக ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் 10 வீடுகள் கட்டும் பணிகளை இவ்வாண்டு ஜனவரி 23-ம் தேதி அமைச்சர் கீதாஜீவன் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.
தொடர்ந்து கட்டுமானப் பணிகளை கண்காணித்து விரைந்து முடிக்க வலியுறுத்தி வந்த நிலையில், ராஜபாண்டி நகரில் 8 வீடுகளும், கருணாநிதி நகரில் 2 வீடுகளுமாக மொத்தம் 10 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டன. இந்த வீடுகளை அமைச்சர் கீதாஜீவன் இன்று திறந்து வைத்து, ஜே.எஸ்.டபுள்யு நிறுவன அலுவலர் ராமராஜ் முன்னிலையில், பயனாளிகளுக்கு சாவிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், ஜே.எஸ்.டபுள்யு அலுவலர் சந்திரமோகன், வட்ட செயலாளர் மூக்கையா, கவுன்சிலர்கள் வைதேகி, சரவணகுமார், இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன்ஜேக்கப், பெருமாள் கோயில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், திமுக தகவல் தொழில்நுட்ப அணி தொகுதி ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை, பிரையன்ட் நகர் பகுதி ஒருங்கிணைப்பாளர் சந்தன முனீஸ்வரன், பகுதி இளைஞரணி அமைப்பாளர் சூர்யா, அவைத்தலைவர் பெரியசாமி, வட்ட பிரதிநிதிகள் பாஸ்கர், ஈஸ்வரன், அய்யாசாமி மற்றும் மணி அல்பர்ட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக