Tamil Nadu updates,
news by sunmugasuthram Reporter
தூத்துக்குடி, ஏப்.30:
தூத்துக்குடி மாநகராட்சியில் அதிமுக ஆட்சியில் செய்யப்பட்ட தவறுகள் அனைத்தும் படிப்படியாக சரிசெய்யப்பட்டு, மாநகராட்சி முழுவதும் வளர்ச்சிப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக மேயர் ஜெகன்பெரியசாமி தெரிவித்தார்.
தூத்துக்குடி மாநகராட்சி சாதாரண கூட்டம் இன்று 30-4-2025 மாநகராட்சி கூட்ட அரங்கில் மேயர் ஜெகன்பெரியசாமி தலைமையில் ஆணையர் மதுபாலன், துணை மேயர் ஜெனிட்டா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
புதன் தோறும் தூத்துக்குடி மாநகராட்சி மண்டலங்களில் குறை தீர்க்கும் முகாம் வெற்றி
கூட்டத்தில் பேசிய மேயர் ஜெகன்பெரியசாமி, "தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி பொதுமக்களின் குறைகளை தீர்க்கும் முகாம் நான்கு மண்டலங்களிலும் கடந்த 10 மாதங்களாக நடைபெற்று வருகிறது. இதில் பெறப்படும் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்வு காணப்படுகிறது" என்றார்.
1700 புதிய சாலைகள்
"தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் 1700 புதிய சாலைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அண்ணா பேருந்து நிலையத்தின் கீழ்தளத்தில் பேருந்துகள் நிறுத்தப்படுகிறது.
இரண்டு மாடிகள் ஷாப்பிங் மாலாக மாற்றப்பட்டுள்ளது. மூன்றாவது தளம் பொதுமக்களின் படிப்பறிவை ஊக்குவிக்கும் வகையில் தனியார் பங்களிப்புடன் நவீன படிப்பக வசதிக்காக மாற்றப்படவுள்ளது. இதன் மூலம் மாநகராட்சிக்கு வருவாய் கிடைக்கும்" என்றார்.
குறுங்காடுகள் அமைப்பு
மேலும், "மாநகராட்சிக்கு சொந்தமான 50 ஏக்கர் நிலப்பரப்பில் மரங்கள் நடப்பட்டு குறுங்காடுகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மழைக்காலத்திலும் ஏற்படும் பாதிப்புகளை கண்டறிந்து சரிசெய்யப்பட்டு வருகிறது. எதிர்காலத்தில் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன" என்றார்.
புதிய பூங்காக்கள்
"மாநகராட்சி பகுதியில் ஐந்து இடங்களில் ஹைமாஸ்ட் விளக்குகள் அமைக்கப்படுகின்றன. புதிய அங்கன்வாடி மையங்கள் கட்டப்படவுள்ளன.
மாதா கோவில் அருகில் உள்ள பயன்படுத்தப்படாத இடம் அழகுபடுத்தப்பட்டு மகளிருக்கான பூங்கா மற்றும் உடற்பயிற்சி மையம் அமைக்கப்படுகிறது.
அதேபோல ஆண்களுக்கும் எம்.ஜி.ஆர் பூங்கா மற்றும் ராஜாஜி பூங்காவில் நடைபாதையுடன் கூடிய உடற்பயிற்சி மையம் அமைக்கப்படுகிறது" என தெரிவித்தார்.
அண்ணாநகர் பெயர் மாற்றம்
"2022-ஆம் ஆண்டு அண்ணாநகர் பெயர் மாற்றம் தொடர்பாக கொண்டுவரப்பட்ட தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படவில்லை. தற்போது டூவிபுரம் மேற்கு எனப்படும் பகுதி இனி அண்ணாநகர் என அழைக்கப்படும். மாநகராட்சியின் அனைத்து ஆவணங்களிலும் இந்த பெயர் மாற்றம் செய்யப்படும்" என அறிவித்தார்.
சுகாதார மேம்பாடு
"மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சுகாதாரத்தை பாதுகாக்கும் வகையில் நீதிமன்றம் அருகில் உள்ள சுகாதார மையம் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதேபோல அண்ணா பேருந்து நிலையமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் ஐந்து கழிப்பறைகள் நிபந்தனைகளுடன் தனியாரிடம் ஒப்படைக்கப்படுகின்றன" என்றார்.
"சத்யா நகரில் புதிய கழிப்பறை கட்டப்படுகிறது. ராஜபாண்டி நகரில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது. லேபர் காலனியிலும் புதிய கழிப்பறை கட்டப்படவுள்ளது. அதன் அருகில் உள்ள சுனாமி காலனியிலும் கழிப்பறை அமைக்கப்படவுள்ளது. இந்த கழிப்பறைகள் அனைத்தும் மாநகராட்சி நிர்வாகத்தால் பராமரிக்கப்படும்" எனத் தெரிவித்தார்.
30 தீர்மானங்கள் நிறைவேற்றம்
கூட்டத்தில் ஒப்பந்த ஊழியர்கள் பணி நீட்டிப்பு, கழிப்பறை பராமரிப்பு பணி ஒப்பந்த நீட்டிப்பு உள்ளிட்ட 30 அம்ச தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதையடுத்து மாமன்ற உறுப்பினர்கள் தங்களது பகுதிகளில் நிறைவேற்ற வேண்டிய பணிகள் குறித்து மேயரிடமும், ஆணையரிடமும் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
முன்னேற்றப் பணிகள்
மேயர் ஜெகன்பெரியசாமி பேசுகையில், ...
"1995-ல் இருந்த மாநகராட்சிக்கும், நாம் பொறுப்பேற்ற பின் நடைபெற்ற பணிகளுக்கும் பிறகு 2025-ல் வளர்ச்சி அடைந்துள்ள மாநகராட்சியையும் எல்லோரும் அறிவீர்கள். கடந்த அதிமுக ஆட்சியில் செய்யப்பட்ட தவறுகளை ஒவ்வொன்றாக சரிசெய்து வருகிறோம். குறிப்பாக நிறுத்திவைக்கப்பட்ட பாதாள சாக்கடைத் திட்டத்தை முறைப்படுத்தியுள்ளோம்" என்றார்.
"24 மணி நேரமும் பல பகுதிகளுக்கு குடிநீர் வழங்கி வருகிறோம். மாநகராட்சி மேம்பாட்டிற்கான பணிகளை மேற்கொண்டுள்ளோம். மாசு இல்லாத மாநகரை உருவாக்கியுள்ளோம்" என்றார்.
"மக்களின் தேவைகளைக் கருத்தில் கொண்டே திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. பழைய பூங்காக்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன.
"புதிய பூங்காக்கள் அனைவருக்கும் பயன்படும் வகையில் உருவாக்கப்படுகின்றன. சில பூங்காக்களில் பாதுகாப்பிற்காக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்" என்றார்."
"சாலைப் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளன. கால்வாய் பணிகள் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் விரைவுபடுத்தப்பட்டு வருகின்றன.
60 வார்டுகளுக்கும் பாரபட்சமின்றி பணிகள் துரிதமாக செய்யப்படுகின்றன" என்றார்.
"பழைய குடிநீர் குழாய்கள் அகற்றப்பட்டு புதிய குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக சண்முகபுரம், டூவிபுரம் பகுதிகளுக்கு முறையான குடிநீர் வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
கோடைக்காலம் என்பதால் அனைத்து மக்களுக்கும் தடையின்றி குடிநீர் கிடைக்க எல்லோரும் ஒத்துழைக்க வேண்டும்" என்றார்.
கூட்டத்தில் மண்டலத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், துணை ஆணையர் சரவணகுமார், பொறியாளர் தமிழ்செல்வன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
[செய்தி பெட்டி]
ஆக்கிரமிப்புகள் அகற்றம், புதிய பூங்காக்கள்
மாநகராட்சிக்கு சொந்தமான பல இடங்கள் சிலரால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தன. இவை படிப்படியாக மீட்கப்பட்டு பல ஏக்கர் நிலம் மீட்டெடுக்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள இடங்களும் விரைவில் மீட்கப்பட்டு மாநகராட்சியின் பல்வேறு பயன்பாட்டிற்கு செயல்படுத்தப்படும். 206 பூங்காக்கள் அமைக்கும் வகையில் திட்டங்கள் வகுக்கப்பட்டு செயல்படுத்தப்படவுள்ளன.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக