திங்கள், 21 ஏப்ரல், 2025

தூத்துக்குடி: முத்துக்குளித்துறை பரதர் நலச்சங்க அலுவலகத்தை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்க வேண்டும் - நிர்வாகிகள் வலியுறுத்தல்

Tamil Nadu updates

Photo news by sunmugasuthram Reporter 

தூத்துக்குடி, ஏப்ரல் 21

 முத்துக்குளித்துறை பரதர் நலச் சங்க அலுவலகத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளவர்களிடமிருந்து மீட்க வேண்டும் என வலியுறுத்தி, சங்க நிர்வாகிகள் இன்று தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்து முறையிட்டனர்.



இதுகுறித்து பேசிய முத்துக்குளித்துறை பரதர் நலச் சங்கத்தின் பொதுச் செயலாளர் கனகராஜ் மற்றும் நிர்வாக செயலாளர் ராஜ் ஆகியோர், "எங்கள் சங்கம் முறையாக பதிவுத்துறையால் பதிவு செய்யப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளால் நடத்தப்பட்டு வருகிறது. தூத்துக்குடி பனிமய மாதா கோயில் அருகில் உள்ள, கத்தோலிக்க மறை மாவட்டத்திற்கு சொந்தமான வணிக வளாகத்தில் இயங்கி வரும் எங்கள் அலுவலகத்தை சிலர் முறைகேடாக ஆக்கிரமித்துள்ளனர்" என்றனர்.



கட்டிட வாடகைதாரர் உரிமை பிரச்சனையில், தூத்துக்குடி உட்கோட்ட நிர்வாக நடுவர் மற்றும் கோட்டாட்சியரின் நீதிமன்ற செயல்முறை ஆணை (ந.க.ஆ.1/BNSS. 164/687/2025 நாள் 05.03.2025) அமல்படுத்தப்படவில்லை என்றும், கடந்த ஏப்ரல் 7ஆம் தேதி தூத்துக்குடி தென் பாகம் காவல் ஆய்வாளர் காவல் அறிவிப்பு வெளியிட்டு சங்கத்திற்கு ஆதரவாக சார்பு செய்த பின்னரும், சில நபர்கள் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்தும் நோக்கில் சங்கத்தின் அன்றாட நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவித்து, அலுவலகத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளதாக குற்றம் சாட்டினர்.


"இந்த ஆக்கிரமிப்பாளர்கள் மீது காவல்துறையில் ஏற்கனவே புகார்கள் அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுத்து, சங்க அலுவலகத்தை மீட்டுத்தர வேண்டும்," என்று அவர்கள் வலியுறுத்தினர்.


இந்த செய்தியாளர் சந்திப்பில் சங்கத்தின் அவைத் தலைவர் ஜான்சன், துணைச் செயலாளர்கள் ராஜா, ஜோ, துணைத் தலைவர் அந்தோணி, பொதுக்குழு உறுப்பினர்கள் விஜயகுமார், ஜான் மற்றும் ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக