Tamil Nadu updates,1-3-2025
கரடிபுத்தூர் கிராம மக்கள் போராட்டம் – குவாரி அனுமதி ரத்து செய்ய தமிழக பாஜக வலியுறுத்தல்
திருவள்ளூர் மாவட்டம், கரடிபுத்தூர் கிராமத்தில் சட்டவிரோதமாக கிராவல் குவாரி அமைக்க அனுமதி வழங்கப்பட்டதாக கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கடந்த ஒரு வாரமாக கிராம மக்கள் போராடி வருவதுடன், கிராவல் குவாரிக்கு வந்த லாரிகளை தடுத்து நிறுத்தி, நிர்வாகத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சூழ்நிலையில், தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத்,
“கரடிபுத்தூர் கிராம மக்களின் உணர்வை மதித்து, தமிழக அரசு உடனடியாக இந்த அனுமதியை ரத்து செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் கிராம மக்களின் வாழ்வாதாரத்துக்கு இடையூறாக கிராவல் மற்றும் மண் குவாரிகளுக்கு அனுமதி அளிக்கக் கூடாது.
ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டிருந்தாலும், கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் அவற்றை செயல்படுத்தக் கூடாது.
மேலும், மாவட்ட நிர்வாகம், கனிம வளத்துறை அதிகாரிகள் சட்டத்திற்கு புறம்பாக நடவடிக்கை எடுத்தால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல், கடந்த காலங்களில் மக்கள் எதிர்ப்பினால் மதுரை மேலூர் தாலுகாவில் டங்ஸ்டன் கனிம ஏலம் ரத்து செய்யப்பட்டதையும் அவர் நினைவூட்டினார்.
“கரடிபுத்தூர் கிராம மக்களின் எதிர்ப்பை கருத்தில் கொண்டு, தமிழக அரசு உடனடியாக கிராவல் குவாரி அனுமதியை ரத்து செய்ய வேண்டும்” என்று அவர் வலியுறுத்தினார்.
கிராம மக்கள் போராட்டம் தீவிரமடைந்த நிலையில், அவர்களை காவல்துறையினர் அப்புறப்படுத்தியதாகவும், சிலர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், அரசு அனுமதியின்றி போலி ரசீதுகளை தயாரித்து கிராவல் மண் கடத்தப்படுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
இந்த விவகாரத்தில் ஊழல் புகார்கள் எழுந்துள்ளதால், தொடர்புடைய அதிகாரிகளை கைது செய்து விசாரிக்க வேண்டும் என்றும், சட்ட விரோதமான குவாரி அனுமதிகளை ரத்து செய்ய வேண்டும் என்றும் தமிழக பாஜக வலியுறுத்தியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக