வெள்ளி, 28 பிப்ரவரி, 2025

கொளத்தூர் அரசு மருத்துவமனையின் அலட்சியம் – முதல்வர் தலையிட வேண்டும்: பாஜக தகவல் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் வலியுறுத்தல்

 Tamil Nadu updates,1-3-2025

கொளத்தூர் அரசு மருத்துவமனையின் அலட்சியம் – முதல்வர் தலையிட வேண்டும்: பாஜக தகவல் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் வலியுறுத்தல்

சென்னை கொளத்தூர் பகுதியில் உள்ள பெரியார் நகர் அரசு மருத்துவமனையின் அலட்சியமான மருத்துவ சேவையால் ஒன்று ஆம் வகுப்பு மாணவி பாவனா உயிரிழந்ததாக பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். 

போட்டோ மாடல் 

இதனைக் கண்டித்தும், அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும், தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், "தவறான சிகிச்சை காரணமாக உயிரிழந்த சிறுமி பாவனாவின் குடும்பத்திற்கு உரிய இழப்பீட்டை தமிழக முதல்வர் தாயுள்ளத்தோடு வழங்க வேண்டும். 


அரசு மருத்துவமனைகள், பொதுமக்களுக்கு தரமான சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதே முதல்வரின் கடமை.


 ஆனால், வெறும் பெயர்கள், கட்டிடங்கள், விளம்பரங்கள் மூலம் மட்டுமே பெருமை பேசுவதை விட, மக்களுக்கு சேவை செய்வதை உறுதி செய்வதே உண்மையான மனிதநேயத்திற்கான அடையாளம்" என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், "முதல்வரின் சொந்த தொகுதியாக இருக்கும் கொளத்தூர் பகுதியில் நிர்வாக சீர்கேடுகள் மலிந்து காணப்படுகின்றன. பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் முறையான பரிசோதனை மற்றும் சிகிச்சை வழங்கப்பட்டிருந்தால், சிறுமி பாவனாவின் உயிரைக் காக்கலாம். 


இது குறித்து முதல்வர் உடனடியாக ஒரு மருத்துவ குழுவை அமைத்து விசாரணை நடத்த வேண்டும். மருத்துவர்களின் அலட்சியத்தால் இந்த மரணம் ஏற்பட்டது என்பது நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும்" என்று அவர் வலியுறுத்தினார்.

கடந்த 2022ல், கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா, தவறான சிகிச்சையால் உயிரிழந்த சம்பவம் இன்னும் மக்கள் நினைவில் இருக்கும்போதே, தற்போது ஒன்றாம் வகுப்பு மாணவி பாவனாவின் மரணம் ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம், அரசு மருத்துவமனைகளின் சேவை தரம் கேள்விக்குறியாகி உள்ளது.

"கொளத்தூர் தொகுதியில் மொத்தம் ஆறு வட்டங்களின் கீழ் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மக்களுக்கு நம்பகமான சிகிச்சை அளிக்கின்றனவா?


 சுகாதாரத் துறையின் செயல்பாடுகள் மக்கள் நலனை பாதுகாக்கும் வகையில் உள்ளனவா? இதனை முதல்வர் நேரடியாக ஆய்வு செய்ய வேண்டும். பொதுமக்களின் உயிரை காப்பது அரசின் முதல் கடமை" என்று ஏ.என்.எஸ். பிரசாத் தனது அறிக்கையில் வலியுறுத்தினார்.


மாணவி பாவனாவின் மரணம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் உடனடியாக நடவடிக்கை எடுத்து, சிறுமியின் குடும்பத்திற்கு நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்றும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க அரசு உறுதி கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக