தூத்துக்குடி லீக்ஸ் 15.09.2023
வி.ஏ.ஓ கொலை செய்யப்பட்ட வழக்கில் கொலை நடந்த 57 நாட்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து, 143 நாட்களில் குற்றவாளிகள் 2 பேருக்கும் தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு.
இதுபற்றி செய்தியாவது:-
தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முறப்பநாடு கிராம நிர்வாக அலுவகத்தில் கடந்த 25.04.2023 அன்று கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் சேவியர் அவர்கள் குற்றவாளிகள் மீது மணல் கடத்துவதற்கு எதிராக புகார் அளித்ததன் பேரில் ஏற்பட்ட கோபத்தில் மேற்படி கிராம நிர்வாக அலுவலரைக் கொலை செய்தனர்.

ராமசுப்பிரமணியன் (எ) ராமசுப்பு
இவ்வழக்கில் கலியாவூரைச் சேர்ந்த ராமசாமி மகன் ராமசுப்பிரமணியன் என்ற ராமசுப்பு (38) மற்றும் முருகன் மகன் மாரிமுத்து (31) ஆகிய இருவரையும் முறப்பநாடு காவல் நிலைய போலீசார் உடனடியாக கைது செய்தனர்.
அதனைத் தொடர்ந்து இருவரும் குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையிலடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் இவ்வழக்கை தூத்துக்குடி ஊரக காவல் துணை கண்காணிப்பாளர் திரு. சுரேஷ் அவர்கள் தலைமையிலான போலீசார் திறம்பட புலன் விசாரணை செய்து சம்பவம் நடந்த 57 நாட்களில் (21.06.2023 அன்று) குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.
இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த மதிப்பிற்குரிய கனம் நீதிபதி திரு. எம். செல்வம் அவர்கள் இன்று (15.09.2023) குற்றவாளிகளான ராமசுப்பிரமணியன் என்ற ராமசுப்பு மற்றும் மாரிமுத்து ஆகிய இருவருக்கும் இந்திய தண்டனைச்சட்டம் 302 பிரிவின்படி ஆயுள் தண்டனையும், ரூபாய் 2000/- அபராதமும், இந்திய தண்டனைச் சட்டம் 449ன்படி 5 வருடம் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூபாய் 1000/- அபராதமும், இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 506(ii)ன்படி ஒரு வருடம் கடுங்காவல் சிறைத் தண்டணையும் விதித்து ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கினார்.
இந்த சம்பவம் நடந்து 57 நாட்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து 143 நாட்களில் குற்றவாளிகளுக்கு விரைவாக தண்டனை பெற்றுத்தந்தது குறிப்பிடத்தக்கது.
இவ்வழக்கை அரசு சிறப்பு வழக்கறிஞர் மோகன்தாஸ் சாமுவேல் திறம்பட வாதிட்டார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக