thoothukudi leaks19-8-2023
த.சண்முகசுந்தரம்
மூத்த பத்திரிகையாளர்
2023 ஆகஸ்ட் 20 ம்தேதி நீட்டை திணிக்கும் ஒன்றிய அரசையும் ஆளுரையும் கண்டித்து அறப்போர் திரண்டு வர அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் அறிக்கை விடுத்துள்ளார்கள்
இது பற்றிய செய்தியாவது:-
தூத்துக்குடி தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவராகும் கனவைச் சிதைத்து அவர்களின் உயிரைப் பறிக்கின்ற உயிர்க்கொல்லியாக நீட் தேர்வு உருவெடுத்திருக்கிறது. அரியலூர் அனிதாவில் ஆரம்பித்த நீட் மரணம், குரோம்பேட்டை ஜெகதீஸ்வரன், அவரது தந்தை செல்வசேகா வரை தொடர்கிறது.
இந்த மரணங்கள் அனைத்திற்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசும் - அவர்களுக்கு அடிமைச்சேவகம் செய்துவரும் அ.தி.மு.க.வினரும் நீட் பாதுகாவலர் ஆளுநர் ரவி காரணம்,
ஓட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் எண்ணத்தின் வெளிப்பாடாக நீட் தேர்வுக்கு விலக்கு பெறும் முயற்சிகளை தமிழ்நாடு அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது. ஆனால் அந்த நடவடிக்கைகளுக்கு எல்லாம் ஆளுநர் முட்டுக்கட்டை போட்டு வருகிறார். மேலும் நீட் தேர்வுக்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாட்டு அரசின் நடவடிக்கைகளை எதிர்த்தும் வருகிறார்.
கலைஞர், ஜெயலலிதா ஆட்சியில் இருந்த போது வராத நீட் எடப்பாடி பழனிச்சாமியின் அடிமை ஆட்சியின் போது தமிழ்நாட்டுக்கு வந்தது நீட் விலக்கிற்காக 2017ம் ஆண்டு அ.தி.மு.க. அரசு நிறைவேற்றி அனுப்பிய சட்ட மசோதாவை குடியரசு தலைவர் நிராகரித்ததை 21 மாதங்கள் வரை தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு தெரிவிக்காமல் மறைத்து சென்னை உயர்நீதி மன்றத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சர் சொன்ன போது தான் தமிழ்நாட்டுக்கு அது தெரியவந்தது.
மே 2021 ல் தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் வந்தவுடனே ஓய்வு பெற்ற நீதியரசர் ராஜன் தலைமையில் நீட் பாதகங்கள் குறித்து ஆராயச் சிறப்புக் குழு அமைக்கப்பட்டு அந்த குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் 2021 - செப்டம்பர் மாதம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டு நம்முடைய ஆளுநர் மசோதாவில் கையெழுத்திட்டு அனுப்பாமல் காலம் தாழ்த்தி 2022 - பிப்ரவரி 2ம் தேதி மீண்டும் சட்டப்பேரவைக்கே திருப்பி அனுப்பி விட்டார்.
மசோதாவை திருப்பி அனுப்பியது குறித்து; பிப்ரவரி - 5 ல் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி அதில் எடுக்கப்பட்ட முடிவின்படி, சட்டமன்ற சிறப்பு கூட்டத்தை பிப்ரவரி 8ல் கூட்டி மீண்டும் நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மீண்டும் காலம் தாழ்த்தி வந்த ஆளுநரை தமிழ்நாடு முதலமைச்சர் 2022 மார்ச் - 15 - ல் நேரில் வலியுறுத்தியும், 2022 ஏப்ரல் 22 -ல் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியம் ஆகியோர் நேரில் சென்று விளக்கம் அளித்தும், இறுதியாக 2022 -மே 5 - ல் ஜனாதிபதி அவர்களுக்கு இந்த மசோதா அனுப்பி வைக்கப்பட்டது.
பிரதமர் தமிழ்நாட்டுக்கு வருகை தரும்போதும், டெல்லிக்கு தமிழக முதலமைச்சர் சந்திக்க போகும் போதும் வைத்திடும் முதல் கோரிக்கையே நீட் விலக்கு மசோதாவிற்குதான். அதே போல பாராளுமன்றத்தின் ஒவ்வொரு கூட்டத்திலும் நம் கழகத்தின் உறுப்பினர்கள் நீட் பிரச்சனையை எழுப்பி வருகிறார்கள்.
மாநில இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்று பிரதமரை சந்தித்த 2023 பிப்ரவரி - 28 - அன்றும் நீட் ஒழிப்பைத்தான் வலியுறுத்தினார்கள். இப்படி தமிழ்நாடு அரசு எத்தனை முறை கோரிக்கை வைத்தாலும் ஒன்றிய பா.ஜ.க. அரசு அதனைப் பொருட்படுத்துவதே கிடையாது.
எத்தனை மரணங்கள் நிகழ்ந்தாலும் நீட் தேர்வு நடக்கும் என்ற எதேச்சதிகாரப் போக்கில் உள்ள ஒன்றிய அரசையும் - இல்லாத அதிகாரம் இருப்பது போல் காட்டிக்கொள்ளும் தமிழக ஆளுநரையும் கண்டித்து தி.மு.க. இளைஞரணி, மாணவரணி, மருத்துவரணி சார்பில் ஆகஸ்ட் - 20 - ல் மாவட்ட தலைநகரங்களில் மாபெரும் உண்ணா விரத அறப்போராட்டங்கள் நடத்திட வேண்டும் என்று தி.மு.க. இளைஞரணிச் செயலாளரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு செய்துள்ளார்கள்.
அவர்களது அறிவிப்புக்கிணங்க 20.8.2023 ஞாயிற்றுக்கிழமை தூத்துக்குடி பாளைரோடு - சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம் எதிரில் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை தூத்துக்குடி வடக்கு - தெற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி, மாணவரணி, மருத்துவரணி சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற இருக்கிறது.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளர் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தெற்கு மாவட்டச் செயலாளர் மீன்வளம் மற்றும் கால்நடை பாராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் - கூட்டணிக் கட்சியின் தலைவர்கள் தி.மு.க நிர்வாகிகள் வாழ்த்துரை வழங்கவும் தி.மு.கழகத்தின் துணைப் பொதுச்செயலாளரும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி உண்ணாவிரதத்தை முடித்து வைத்திடவும் இருக்கிறார்கள்.
இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி வடக்கு தெற்கு மாவட்டங்களுக்குட்பட்ட மாவட்ட நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், சட்டமன்ற முன்னாள் இந்நாள் உறுப்பினர்கள், மாநகர, நகர, ஒன்றிய, பகுதி, பேரூர், ஊராட்சி மற்றும் வார்டு கழகச் செயலாளர்கள், இளைஞரணி, மாணவரணி, மருத்துவரணி மகளிரணி உள்ளிட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் நீட்டால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள், தோழர்கள், பொதுமக்கள் அனைவரும் இதனையே அழைப்பாக ஏற்று உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொள்ள வருகை தருமாறு வடக்கு மாவட்டச் செயலாளர் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தெற்கு மாவட்டச் செயலாளர் மீன்வளம் மற்றும் கால்நடை பாராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் வெளிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக