ஞாயிறு, 22 ஜனவரி, 2023

தூத்துக்குடியில் ஐடிஐ- ல் சமையல் வேலை வாங்கி தருவதாக கூறி 2லட்சம் மோசடி ஆசிரியர் கைது தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அதிரடி 62 லட்சம் மோசடி கண்டுபிடிப்பு

 தூத்துக்குடி மாவட்டம் : 22.01.2023.


தூத்துக்குடியில் வேப்பலோடை அரசினர் தொழிற்பயிற்சி மையத்தில் (ITI) சமையலர் வேலை வாங்கித்தருவதாக ரூபாய் 2 லட்சம் மோசடி செய்த அரசினர் தொழிற்பயிற்சி மைய ஆசிரியர் கைது - மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.



இது பற்றிய செய்தியாவது:-

தூத்துக்குடி புதுக்கிராமத்தைச் சேர்ந்த ரஹீம் என்பவரின் மகன் முகம்மதுகான் (37) என்பவருக்கும், வேப்பலோடை அரசினர் தொழிற்பயிற்சி மையத்தில் (ITI) பணியாற்றி வந்த தூத்துக்குடி சங்கரப்பேரி, தமிழ்நாடு ஹவுசிங் போடு காலணியைச் சேர்ந்த செந்தில்நாயகம் மகன் மாரியப்பன் என்ற ஐடிஐ மாரியப்பன் (47) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து மேற்படி மாரியப்பன், தான் அரசினர் தொழிற்பயிற்சி மையத்தில் ஆசிரியராக பணியாற்றி வருவதால் தனக்கு அதிக பழக்கமும், செல்வாக்கும் இருப்பதாகவும் அதனால் வேப்பலோடை தொழிற்பயிற்சி மையத்தில் சமையலர் வேலை வாங்கித்தர முடியும் என்று ஆசை வார்த்தை கூறி ரூபாய் 2 லட்சம் வேண்டும் என்று முகம்மதுகானிடம் கேட்டுள்ளார்.


அவரும் அதை நம்பி கடந்த 13.01.2021 அன்று மாரியப்பனின் வங்கி கணக்கில் மேற்படி பணத்தை டெபாசிட் செய்துள்ளார்.


பணத்தை பெற்றுக்கொண்ட மேற்படி மாரியப்பன் வேலையும் வாங்கித்தராமல், பணத்தையும் கொடுக்காமல் மோசடி செய்துள்ளார். இந்நிலையில் மாரியப்பன் நீலகிரி மாவட்டம் குன்னூருக்கு மாற்றுதலாகி சென்று, பின் அங்கிருந்து தலைமறைவாகிவிட்டார். 


இது குறித்து முகம்மதுகான் அளித்த புகாரின்பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் திரு. ஜெயராம் அவர்கள் தலைமையில் காவல் ஆய்வாளர் திருமதி. அந்தோணியம்மாள், உதவி ஆய்வாளர் திருமதி. அனிதா, சிறப்பு உதவி ஆய்வாளர்கள் சண்முகசுந்தரம், ராஜ்குமார் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.


அவரது உத்தரவின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த எதிரி மாரியப்பன் என்ற ஐடிஐ மாரியப்பனை இன்று கைது செய்தனர். மேற்படி எதிரி மாரியப்பன் இதுபோன்று பலரிடம் ரூபாய் 62 லட்சம் வரை மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது. 

மேலும் இது குறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக