புதன், 27 ஏப்ரல், 2022

தூத்துக்குடி மாவட்ட காவல்துறையின் மாற்றத்தை தேடி... சமூக விழிப்புணர்வு கூட்டம் தூத்துக்குடியில் புதிதாக 58 சிசிடிவி கேமிரா பொருத்தி மத்திய காவல் நிலையத்தில் கண்காணிப்பு பணி தூத்துக்குடி SP.. பாலாஜி சரவணன் துவக்கி வைத்தார்.



தூத்துக்குடி மாவட்ட காவல்துறையின்

மாற்றத்தை தேடி...சமூக விழிப்புணர்வு கூட்டம் தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலைய முன்பிருந்த வளாகத்தில் நடைபெற்றது.





இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர்  முனைவர். லோக. பாலாஜி சரவணன், கலந்து கொண்ட இளைஞர்களுக்கு சமூக விழிப்புணர்வு பற்றி சிறப்புரையாற்றினார். 


1.

சமீபத்திய குற்ற சம்பவங்களின் பின்னணியில் போதைப் பொருள் பயன்பாடு முக்கிய பங்கு

வகிக்கிறது. மேலும், போதைக்கு அடிமையான குற்றவாளிகள் கொலை, கொள்ளை,

கற்பழிப்பு போன்ற குற்றச் செயல்களில் துணிச்சலாக ஈடுபடுகின்றனர்.

2.

தனிநபர் குறுகிய கால போதை மயக்கத்திற்காக போதைப் பொருளை பயன்படுத்துவதனால்

அன்னாரது குடும்பம் மற்றும் குழந்தைகள் வறுமையில் பாதிக்கப்படுகின்றனர்.

3.

போதைப் பொருளை பயன்படுத்துபவர்கள், போதை வெறியில் அறிந்தோ, அறியாமலோ

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற சம்பவங்களில் ஈடுபடுகின்றனர்.

தொடர்ந்து போதைப் பொருட்களைப் பயன்படுத்துபவர்கள், குறுகிய காலத்தில் இளமையை

இழந்து, இல்லற வாழ்க்கை வாழத் தகுதியற்றவர்களாகி விடுகின்றனர்.

4.

எனவே, போதைப் பொருட்கள் விற்பனையை கட்டுப்படுத்த, பொதுமக்கள் அது பற்றிய

தகவல் தெரியும் பட்சத்தில் உடனடியாக காவல்துறைக்கு தொலைபேசி வாயிலாகவோ,

எண். 112, 100 போன்ற கட்டணமில்லா இலவச அழைப்பு எண்களை தொடர்பு கொண்டு

தகவல் தெரிவிக்கலாம். அவ்வாறு தகவல் தருபவர்களின் விபரங்கள் இரகசியமாக

வைக்கப்படும்.

5.

பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணிக்க

வேண்டும்.மேலும், அவர்களுடன் போதுமான நேரம் செலவழிக்க வேண்டும். இல்லையேல்

அவர்கள் வழிதவறி செல்ல நேரிடும்.

6.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பொது இடங்களில் குறிப்பாக பேருந்திற்குள்ளும்

பேருந்து நிலையங்களிலும், மக்கள் நெருக்கடி நிறைந்த அனைத்து இடங்களிலும் உரிய

மரியாதை மற்றும் கண்ணியம் அளிக்க வேண்டும்.

7.

5 நிமிட சுகத்திற்காக கற்பழிப்பு போன்ற குற்றசெயல்களில் ஈடுபட்டு 15 ஆண்டுகள் வரை

சிறைத்தண்டனை வாசம் தேவையா? என்பதை ஆராய்ந்து செயல்பட வேண்டும்.

8.

பதினெட்டு வயது நிரம்பாத மகளிர்க்கு இழைக்கப்படும் குற்றங்கள் மற்றும் அவர்களிடம்

எந்த விதத்திலும் அத்துமீறலில் ஈடுபடுதல் POCSO சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய

குற்றமாகும்.

9.

பதினெட்டு வயது பூர்த்தியடையாத பெண் குழந்தைகளுக்கு நடத்தப்படும் திருமணம்

குழந்தைத் திருமணம் ஆகும். அவ்வாறு நடைபெறுகின்ற குழந்தைத் திருமணங்களில்

தம்பதியரின் பெற்றோர் குற்றவாளிகளாவர்.

10.

பெண்களிடம் நெருக்கமாக அல்லது உறவு கொள்ளும் நிலையில் காதலர்களாக இருந்த போது எடுத்த புகைப்படங்களை காட்டி அவர்களை மிரட்டுவது பிரிவு 66 இ, தகவல்

தொழில்நுட்ப சட்டத்தின் படி தண்டனைக்குரிய குற்றமாகும்.

11. அவ்வாறு நெருக்கமாக எடுத்த புகைப்படங்களை

சமூக வலைத்தளங்களில்

வெளியிடுவதாக மிரட்டுவது 3 வருட கடுங்காவல் தண்டனைக்குரிய குற்றமாகும்.

12.

காதலர்கள் ஓடிச் சென்றுவிடும் சம்பவங்களில், புகார் தர காவல் நிலையத்தை அணுகும்

பாதிக்கப்பட்ட பெற்றோரை கண்ணியத்துடன் நடத்த வேண்டும். அவர்களின் பிள்ளைகளின்

நடவடிக்கைகளுக்கு அவர்களை குறை கூறுதல் கூடாது.


13.

தற்கொலை செய்யத் தோன்றுவதற்கு செரட்டோனின் என்ற ஹார்மோன் சரியாக

சுரக்காததே காரணம். தற்கொலை எண்ணம் கலந்தாய்வு மற்றும் மருத்துவ சிகிச்சையினால்

குணமாகக் கூடிய நோய்தான் என்ற விழிப்புணர்வை தற்கொலை எண்ணம் வருகின்ற

நபர்களுக்கும் அவர்களது குடும்பத்தாருக்கும் ஏற்படுத்த வேண்டும்.

14.

சாலை விபத்துக்களில் அநேக நபர்கள் தங்கள் விலை மதிப்பில்லா உயிர் மற்றும் முக்கிய

உடல் உறுப்புக்களை இழக்கின்றனர்.

15.

முறையாக சாலை விதிகளை கடைபிடித்தல், தலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் அணிதல்,

அதிவேக மற்றும் அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டுவதை தவிர்த்தல் ஆகியவற்றை சரியாக

கடைபிடித்து

சாலைகளில் நிதானமாக செயல்படுகின்ற போது அநேக சாலை

விபத்துக்களை தவிர்க்கலாம்.

16.

கல்வி கற்கும் மாணாக்கருக்கு உயர் ரக இரு சக்கர வாகனம் வாங்குவதை பெற்றோர்

தவிர்க்க வேண்டும்.

17.

செல்போன் பயன்படுத்தும் குழந்தைகளின் நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும்.

18.

அவர்கள் பயன்படுத்தும் வலைதளங்களை முறையாக கண்காணிக்க வேண்டும்.

புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்வதை தவிர்க்க வேண்டும்.

19.

இளைஞர்கள் இணையத்தில் பணப்பரிவர்த்தனை குறிப்பாக வேலை வாங்கித் தருவதாக

ஏமாற்றும் பேர்வழிகளிடம் தகுந்த முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.

20.

அளவுக்கதிகமான ஆசை பெருநஷ்டம் என்பதை உணர்ந்து ஆன்லைன் விளையாட்டுக்கள்

மற்றும் ஆன்லைன் சூதாட்டங்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும்.

21.

ஆன்லைன்

குற்றங்களை தவிர்க்க பெற்றோர்கள் மற்றும் பெரியவர்கள் தங்கள்

குழந்தைகளுடன் தகுந்த நேரம் செலவிட வேண்டும்.

22.

வீட்டில் உள்ள

அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களை உடனெடுத்து செல்வதையும், பயன்படுத்துவதையும்

நல்வழிப்படுத்த வேண்டும்.

பெரியவர்கள் தக்க அறிவுரை கூறி இளைய சமுதாயத்தினரை திருத்த வேண்டும்.

23.

ஒரு கொலை சம்பவமானது இரு குடும்பங்களையும், அவர்களின் வாழ்வாதாரம், கல்வி என

அந்த இரு குடும்பங்களின் தலைமுறையையே பாதிக்கிறது.

24.

ஏதாவது பிரச்சனைகள் அல்லது முன் விரோதம் ஏற்படும் போது அதனை பொறுமையாக

கையாண்டு, சம்பந்தப்பட்ட துறை மூலமாக உரிய நடவடிக்கை மேற்கொண்டு அதனை

தீர்க்க வேண்டுமே தவிர வன்முறையில் ஈடுபடுவது ஒருபோதும் நிரந்திர தீர்வாக அமையாது.

25.

சாலை மறியல்களில் ஈடுபடுவது குற்றமாகும். தங்களது பிரச்சனை தீர சம்பந்தப்பட்ட துறை

அதிகாரிகளையோ, தாமதமாகும் பட்சத்தில் உயரதிகாரிகளையோ அணுகாமல் சாலை

மறியல்களில் ஈடுபடுவது ஏற்புடையதல்ல.

இதனால் அவ்வழியில் பிரயாணம் செய்யும் வயது முதிர்ந்தோர், நோயாளிகள்,

கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர் என்பதை

நினைவில் கொள்ள வேண்டும்.


26. வெவ்வேறு சாதியைச் சேர்ந்த இரு குடும்பத்தினருக்கிடையே ஏற்படும் சிறு பிரச்சனையை

இரு சமுதாயத்தினர் அல்லது இரு கிராமத்தினருக்கிடையேயான

பிரச்சனையாக உருவகப்படுத்துதல் கூடாது. மாறாக இரு தனிப்பட்ட நபர்களின்

பிரச்சனையாக மட்டுமே கருதப்பட வேண்டும்.

27. பொது இடங்களில் சமத்துவம் காக்கப்பட வேண்டும். சாதி ரீதியான செயல்பாடுகள்

தவிர்க்கப்பட வேண்டும். கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணக்கர் ஜாதி ரீதியிலான

வண்ணங்களையோ, பிற அணிகலன்களையோ அணிவதை சம்பந்தப்பட்ட

நிறுவனங்களும், பெற்றோர்களும் ஒருபோதும் அனுமதிக்கவோ, அதை ஊக்கப்படுத்தவோ கூடாது.


28

கல்வி நிறுவனங்களிலும், பொது இடங்களிலும் குறிப்பிட்ட ஜாதிரீதியிலான செயல்பாடுகள் ஒழிக்கப்பட வேண்டும்.

29.

சமூக வலைதளங்களில் பெண்களைப் பற்றியோ, பிற ஜாதியினரை பற்றியோ, பிற

மதத்தினரை பற்றியோ, மாற்று கருத்துடையோர்களைப் பற்றியோ குறைவாகவோ அல்லது

விமர்சித்தோ பதிவேற்றம் செய்தல் கூடாது. 

மேலும், அவ்வாறான

சூழ்நிலைகளில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நேரடியாக அணுகி தக்க தீர்வு எட்டப்பட

வேண்டும். அதை விடுத்து தேவையற்ற வாதங்களையும், விமர்சனங்களையும் சமூக

வலைதளங்களில் பகிர்வதை தவிர்க்க வேண்டும்.

30.

உண்மைக்கு மாறான, தவறான, அவதூறு, பதட்டம் மற்றும் விவாதத்தை தூண்டுகின்ற

வகையிலான கருத்துக்களையோ, மீம்ஸ் போன்றவற்றை பதிவிடுவதோ, பகிர்வதோ கூடாது.

அது சட்டத்தின் படி தண்டனைக்குரிய குற்றமாகும்.

31. எல்லா குற்றவாளிகளின் நடவடிக்கைகளும் உன்னிப்பாக கண்காணிக்கப்படும். மனம் திருந்தி நல்வாழ்வு வாழத் துடிக்கும் குற்றவாளிகளுக்கு உரிய உதவிகள் அனைத்தும்

காவல்துறை சார்பாக ஏற்பாடு செய்யப்படும். அதே சமயம், திருந்தாமல் மீண்டும் மீண்டும்

குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

32.மூன்றாம் கண்ணாகிய கண்காணிப்புக் கேமிராக்களை அனைத்து பொது இடங்களிலும்,நிறுவப்பட வேண்டும்.

33. அதிகப்படியான தங்க நகைகள் மற்றும் அதிக அளவிலான பணத்தை ரொக்கமாக வீட்டில்

வைப்பதற்கு பதிலாக அவற்றை பாதுகாப்பாக வங்கி லாக்கர்களில் வைக்கவேண்டும்.

34.

காவல்துறையினரின் விசாரணைகள் மற்றும் நடவடிக்கைகள் நியாயமாக நடுநிலையான வகையில் வெளிப்படையாக இருக்க வேண்டும்.

35.

குற்ற சம்பவங்களோ அதற்கான முயற்சியோ தெரியவரும் பட்சத்தில் உடனடியாக

காவல்துறைக்கு தொலைபேசி வாயிலாகவோ, எண். 100 போன்ற கட்டணமில்லா இலவச அழைப்பு எண்களை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும். மாவட்ட காவல்

கண்காணிப்பாளரை 8380693933 என்ற எண்ணில் நேரில் தொடர்பு கொள்ளலாம். தகவல்

தருபவரின் விபரங்கள் இரகசியமாக வைக்கப்படும்.

36.

சைபர் க்ரைம் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் இணைய வழியிலான

பணப்பரிவர்த்தனைகளை மிகவும் எச்சரிக்கையுடன் கையாள வேண்டும்.

உறுதிமொழி

நாம்/ நமக்காகவும்/ நம் சந்ததியினருக்காகவும்/ சாதி, மத வேற்றுமைகள்

இல்லாத/ தூத்துக்குடி மாவட்டத்தை உருவாக்குவோம். எதிர்மறை

சிந்தனைகளை களைந்து/ பழிக்குப் பழி எனற எண்ணம் நீங்கி/

நற்சிந்தனைகளை வளர்த்து/ மகளிரையும்/ குழந்தைகளையும்/ மக்களையும்

பாதுகாப்போம். எந்த சூழ்நிலையிலும்/ எக்காரணம் கொண்டும் கத்தி, அரிவாள்

மற்றும் எந்த கொடிய ஆயுதங்களையும்/ பயன் படுத்த மாட்டோம் என உறுதி ஏற்போம்.

இவ்வாறு பேசினார். 

முன்னதாக இன்று (27.04.2022) புதன்கிழமை காலை 10 மணிக்கு தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு பாலாஜி சரவணன் மத்திய பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பொருத்தப்பட்டுள்ள 58 சிசிடிவி கேமராக்களை துவக்கி வைத்தார்.

மத்திய பாகம் காவல் நிலையம் உள் பகுதியில் இயங்குகிறது.



தூத்துக்குடி நகரத்தில் பல்வேறு பகுதிகளில் 58 சிசிடிவி கேமராக்கள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. 

அதாவது தூத்துக்குடி மாநகரத்தில் வி.வி.டி சிக்னல், சின்னதுரை அன்கோ துணிக்கடை, அம்பேத்கார் சிலை, மார்க்கெட் சிக்னல், பழைய பேருந்து நிலையம், குரூஸ் பர்னாந்து சிலை சந்திப்பு, ராமையா லாட்ஜ் எதிர்புறம், சத்யா மொபைல் கடை முன்பு, வி.ஜி.எஸ் பள்ளி ரோடு, சிவன் கோவில் ரோடு, போலீஸ் செக்போஸ்ட், பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு, 1ம் கேட் ரவுண்டானா, பழைய மாநகராட்சி அலுவலகம், தெற்கு ராஜா தெரு, வி.ஓ.சி துறைமுகம் ரோடு ஆகிய பகுதிகளில்  புதிதாக பொருத்தப்பட்டுள்ள 58 சி.சி.டி.வி கேமராக்களை பொருத்தியுள்ளார்கள்.

இந்த சிசிடிவி கேமராக்களை, தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் மின்திரை மூலம் 24 மணி நேரமும் துல்லியமாக கண்காணிக்கப்படுகிறது.

இந்நிகழ்வின் போது தூத்துக்குடி மண்டல TMB வங்கி துணை பொது மேலாளர் சுந்தரேஷ் குமார், உதவி பொது மேலாளர் அருண்மொழியன், தூத்துக்குடி நகர வியாபாரிகள் சங்க தலைவர் விநாயகமூர்த்தி, தூத்துக்குடி நகர காவல் கண்காணிப்பாளர் கணேஷ், மத்திய பாகம் காவல் ஆய்வாளர் ஜெயப்பிரகாஷ், காவல்துறை போக்குவரத்து ஆய்வாளர் மயிலேறும் பெருமாள், மத்திய பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முருகபெருமாள், போக்குவரத்து பிரிவு உதவி ஆய்வாளர் வெங்கடேஷ் உள்ளிட்ட காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக