ஸ்டெர்லைட்டின் கட்டுமானத்திற்காக அடிக்கல் நாட்டப்பட்ட 1994-ல் இருந்து இன்று வரை 28 ஆண்டுகால போராட்டம் ஆலைக்கு எதிராக நடந்து வருகிறது.
2010-ல் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி ஆலை மூடப்பட்டது.
ஆனால் 2013-ல் உச்சநீதிமன்றம் ஆலையின் விதிமீறலுக்கும், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுத்தியதற்கும்100 கோடி ரூபாய் அபராதம் விதித்து ஆலை இயங்குவதற்கு உத்தரவிட்டது.
அந்த உத்தரவில் எவ்வித விதிமீறல்களையும்,, சுற்றுச்சூழல் பாதிப்புகளையும் மீண்டும் ஏற்படுத்தக்கூடாது என்றும், மீறி ஏற்படுத்தினால் மாநில அரசு மூடலாம் என்றும் உத்தரவு பிறப்பித்தனர்.
அதன் பின்னர் செயல்பட்ட ஆலை மீண்டும் விதி மீறலிலும், தூத்துக்குடியில் பாதிப்பையும் ஏற்படுத்தியதால் மக்கள் நூறு நாட்கள் போராடினார்கள்.
அந்த போராட்டத்திற்கு அதிமுக, பிஜேபி தவிர அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்தனர். அதன் தொடர்ச்சியாக 100-வது நாளில் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க செல்லும்போது மே-22, 2018 இல் நடந்த மக்கள் போராட்டத்தில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். 2 பேர் அடித்தே கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் உடல் ஊனம் அடைந்தனர். 273 வழக்குகள் பொதுமக்கள் மீது பதிவு செய்யப்பட்டது.
அதன்பிறகு அப்போதைய அ.தி.மு.க அரசு அரசாணை பிறப்பித்து ஆலைக்கு சீல் வைத்து மூடியது. ஆலையை மூடிய அரசாணையை ரத்து செய்ய வேதாந்தா தொடுத்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்த உத்தரவை எதிர்த்து வேதாந்தா தாக்கல் செய்துள்ள அப்பீல் வழக்கு தற்சமயம் இறுதி விசாரணைக்காக உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்நிலைமையில் தங்கள் கவனத்திற்கு கொண்டு வருவது என்னவென்றால்,
1-வதாக சாதி, மத & ஏரியா அடிப்படையில் மக்களை பிளவுபடுத்தும் ஸ்டெர்லைட்டின் சட்டவிரோத, நயவஞ்சக நடவடிக்கைகளால் தூத்துக்குடி மாநகரம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களிலும் பொது அமைதி குலைகிறது. சமீபத்தில் கூட தூத்துக்குடி பாத்திமா நகரில் ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் பொது அமைதியை குலைத்துள்ளனர். அவர்களை கைது செய்யக்கோரி அப்பகுதி மக்கள் நூற்றுக்கணக்கானோர் போராட்டம் நடத்தினர். இது போல "எப்போது மோதல் வெடிக்குமோ" என்ற அச்சத்தை தூத்துக்குடி மாவட்டத்தில் ஆலை நிர்வாகம் உண்டாக்கியுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மே-22.2018-ல் நடந்த போராட்டத்தில் 273 வழக்குகளும், அதற்கு முன்பாக நடந்த போராட்டத்தில் 70-க்கும் மேற்பட்ட வழக்குகளும், துப்பாக்கி சூடுக்கு பின்னர் நடந்து வருகிற போராட்டத்தில் 60-க்கும் மேற்பட்ட வழக்குகளும் பல்வேறு காவல் நிலையங்களில் பதிவாகியுள்ளன. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான புகார்கள் வரப்பெற்று இரசீதுகள் வழங்கப்பட்டுள்ளன.
ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் - எதிர்- ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் என மக்கள் பிளவுபடுத்தப்பட்டு பெரும் மோதல் உருவாகும் சூழல் உள்ளது. பொது அமைதியை தொடர்ந்து சீர்குலைக்கும் ஆலையை அகற்றுவதற்கு அரசுக்கு அதிகாரம் உள்ளது. அந்த அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் Cr.P.C. பிரிவு133-ன் கீழ் உரிய முறையில் விசாரணை நடத்தி உத்தரவு பிறப்பித்து ஸ்டெர்லைட்டை சிப்காட்டிலிருந்து அப்புறப்படுத்த வேண்டும்.
2-வதாக ஸ்டெர்லைட் ஆலையை மூடி சீல் வைத்த பின்பு ஆலைக்கு உள்ளே உள்ள கழிவுகளையும், வேதிப் பொருட்களையும் அகற்றுவதற்கு சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையானது உயர்மட்ட கமிட்டியை G.O.No 83, தேதி 21.06.2018 மூலம் அமைத்து அதன் அடிப்படையில் உயர்மட்ட கமிட்டி ஆய்வு செய்து 11-வகையான கழிவுகள், மற்றும் வேதிப்பொருட்களை குறிப்பிட்ட நாட்களில் அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள உள்ளூர் மட்ட கண்காணிப்பு கமிட்டி (LLMC) உருவாக்கப்பட்டு அதிகபட்சமாக 90 நாட்களுக்குள் பணிகளை முடிக்கவும், 250 நபர்களும் ஆலைக்குள் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் கடந்த 4 ஆண்டுகளாக மேற்கண்ட பணியாளர்கள், நிறுவன ஊழியர்கள் & அதிகாரிகள் ஸ்டெர்லைட் ஆலைக்குள் செல்கின்றனர். அப்போதைய ஆட்சித்தலைவர் திரு. சந்தீப் நந்தூரி அவர்கள், ஸ்டெர்லைட்டின் கழிவுகள், வேதிப்பொருட்கள் பெரும்பாலும் 100% ம் அகற்றப்பட்டுள்ளதாகவும், சில கழிவுகள் மட்டும் மீதம் இருப்பதாகவும், அவையும் சில நாட்களில் முற்றிலும் அகற்றப்பட்டு விடும் என்றும் 2018ல் குறிப்பிட்ட நாட்கள் இடைவெளியில் பத்திரிக்கை செய்தி வாயிலாக பொதுமக்களுக்கு அறிவித்தார்.
மேற்கண்ட தகவல்கள் எங்களுக்கு வழங்கப்பட்ட RTI பதிலில், பணியாளர்கள் தற்போது வரை சென்று வருவதற்கு எவ்வித உரிய அனுமதியும் இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. ஆலைக்குள் பணியாளர்கள் சென்று வருவது மாவட்ட நிர்வாகத்தின் மீது மிகப்பெரிய சந்தேகத்தையும், பராமரிப்பு பணிகள் உட்பட ஆலையை மீண்டும் இயக்குவதற்கான அனைத்து பணிகளையும் மேற் கொள்வதற்காகத் தான் தினமும் நூற்றுக்கணக்கானவர்கள் செல்கிறார்கள் என்ற எண்ணத்தையும் பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது. 2018-ல் கொடுத்த 90 நாட்கள் அனுமதியை வைத்துக்கொண்டு தற்போது வரை ஸ்டெர்லைட் நிறுவனம் பணியை மேற்கொள்வது சட்டவிரோதம். இதற்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும்,அரசு அதிகாரிகளும், ஸ்டெர்லைட் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து சட்டவிரோத செயலுக்கு உடந்தையாக இருக்கின்றனர் எனவே ஸ்டெர்லைட் ஆலைக்குள் சட்டவிரோதமாக ஆட்கள் செல்வது உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
3-வதாக, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள ஸ்டெர்லைட் வழக்கில், அதிமுக அரசு கொள்கை முடிவு எடுத்ததாக சொன்னாலும் அதற்கான தரவுகள் அடிப்படையில் முடிவு எடுக்கப்படவில்லை. இதற்கு கமிட்டி அமைத்து அதன் அறிக்கையின் பேரில் அரசாணை பிறப்பிக்கப்படவில்லை. அதனால் தமிழக அரசு உடனடியாக ஒரு வல்லுநர் குழு அமைத்து, பெருவீத தாமிர உற்பத்தி தொழில் என்ன பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது என்றும், கொள்கை முடிவு எடுக்கப்பட்டதற்கான காரணத்தை அறிக்கையாகவும் உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசின் வாதம் மிகவும் வலிமையாக வைக்கப்பட வேண்டும்.
மேற்கண்ட கோரிக்கைகளை தூத்துக்குடி மக்களாகிய நாங்கள் உங்கள் முன் வைக்கின்றோம். இந்த முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்றித் தரும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
----------------------------------------------------மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்துமாறு வேண்டுகிறோம்.
-----------------------------------------------------
ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு
9443584049, 7811940678, 8122275718, 7305172352, 9787195783, 9952763686, 9965345695, 9894574817.
இவ்வாறு தெரிவித்துள்ளார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக