மார்க்சிஸ்ட் கட்சியின் டிஜிட்டல் கிளை இரண்டாவது மாநாடு கட்சியின் மாநில மைய அலுவலகத்தில் ஞாயிறுன்று நடைபெற்றது.
மாநாட்டில், வேலை அறிக்கையை சுதிர் முன்வைத்தார். கிளைச் செயலாளராக சுதிர் தேர்வு செய்யப்பட்டார்.
கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ் நிறைவுரையாற்றினார்.
டிஜிட்டல் கிளை தீர்மானங்கள்!
1) டிஜிட்டல் ஊடக பத்திரிகையாளர்களை அங்கீகரிக்க வேண்டும்!
இந்தியாவில் 44.8 கோடி பேர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி வருகிறார்கள் என்பது சமீபத்திய ஆய்வில் வெளிவந்த தகவல். இந்திய மக்கள் நாள்தோறும் சராசரியாக இரண்டரை மணி நேரத்தைச் சமூக ஊடகங்களில் செலவழிக்கிறார்கள். இதனால் முன்னணி அச்சு பத்திரிகை நிறுவனங்கள் மற்றும் காட்சி ஊடகங்கள் பலவும் டிஜிட்டல் மீடியாவிற்கு வந்துள்ளன.
இந்த டிஜிட்டல் ஊடகங்களில், நாடு முழுவதும் லட்சத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் பத்திரிகையாளர் அங்கீகார அட்டை வழங்கப்படுவதில்லை. மேலும் அரசின் எந்தவொரு நலத்திட்டமும் கிடைக்கப்பெறுவதில்லை.
எனவே டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றும் பத்திரிகையாளர்களையும் அங்கீகரித்து, அவர்களுக்கு அரசு சார்பில் அடையாள அட்டை வழங்கிட வேண்டும். பத்திரிகையாளர் நல வாரியத்தில் அவர்களையும் இணைத்து அவர்களுக்கு எழும் பிரச்சனைகளுக்கும் தீர்வு காண வேண்டும். அச்சு- காட்சி ஊடக பத்திரிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் குடியிருப்பு, இலவச பயண அட்டை உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை, டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றும் பத்திரிகையாளர்கள் செய்தி சேகரிப்பதற்கு வசதியாக வழங்க வேண்டும்.
2. ஊடகங்கள் மீதான தாக்குதலைத் தடுக்க வேண்டும்!
மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு, 2வது முறையாக மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு செய்தி ஊடகங்களின் மீதான தாக்குதல்கள் முன்பைவிட அதிதீவிரமாகியுள்ளது.
மேலும் அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் மீது வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை போன்ற அமைப்புகளை ஏவி மிரட்டும் போக்கும் உள்ளது. மேலும், இந்துத்துவா கும்பல் மற்றும் சில பா.ஜ.க ஆதரவாளர்களால் நடத்தப்படும் யூடியூப் சேனல்கள் மூலம் பகிரங்கமாக செய்தி ஊடகங்களையும், பத்திரிகையாளர்களையும் மிரட்டுகிறது.
இதனால் பத்திரிகையாளர்கள் பலர் தங்கள் வேலையை இழந்து பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். இதுதொடர்பான புகார்கள் மீது ஒன்றிய - மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.
3. பெண் பத்திரிகையாளர்களுக்கு மாதவிடாய் காலத்தில் விடுமுறை அளிக்க வேண்டும்!
பத்திரிகை துறையில் பணியாற்றும் ஊழியர்களின் பணி பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. எனவே முன்னறிவிப்பின்றி பணியில் இருந்து செய்தி ஊடக நிறுவனங்கள் நீக்கக்கூடாது. இதில், தொழிலாளர் நலத்துறை சிறப்புக் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் ஊடகங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு காப்பீடு, வங்கிக் கடன் முதலியவற்றை பெறுவதில் நீடிக்கும் சிக்கலை களைந்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
அதேபோல் பெண் பத்திரிகையாளர்கள் மீதான அவதூறு தாக்குதல்களை தடுத்திட, ‘சிறப்பு ஆணையம்’ அமைத்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மாதவிடாய் காலங்களில், பெண் பத்திரிக்கையாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய 1 நாள் விடுமுறை வழங்குவதை நிர்வாகம் உறுதி செய்திட வேண்டும். அத்தகைய முயற்சியை ‘நியூஸ் 7 தமிழ்’ தொலைக்காட்சி நிறுவனம் செய்துள்ளது. இத்தகைய முயற்சியை அனைத்து நிறுவனங்களும் முன்னெடுக்க வேண்டும்.
திருநங்கை, திருநம்பி ((LGBTQ) - பால்புதுமையினர்) போன்றோர் பத்திரிகையாளர், செய்தி வாசிப்பாளர் மற்றும் நெறியாளராக வருவதை பெரும்பாலான நிறுவனங்கள் ஆதரிப்பதில்லை. அவர்களைப் பணியில் அமர்த்துவதை நிறுவனங்கள் உறுதி செய்திட வேண்டும். மாற்றுத்திறனாளி பத்திரிகையாளர்களுக்கு ஏற்படும் இடர்பாடுகளை களைந்து, அவர்களுக்கு ஏற்ற பணிச் சூழலை ஏற்படுத்திட நிர்வாகம் முன்வரவேண்டும்.
பத்திரிகையாளர்களின் கேமரா உள்ளிட்ட உபகரணங்களை பறித்துக்கொள்ளும் காவல்துறையினரின் அடக்குமுறையை தடுத்திடவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மெமரிகார்டு உள்ளிட்ட பத்திரிகையாளர்களின் உபகரணங்களை பறிக்கும் காவலர்களின் நடவடிக்கையை குற்றச்செயலாகக் கருதி அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவேண்டும்.
4. யூடியூப் சேனல்கள் மீதான வலதுசாரி ஆதிக்கத்தை தடுத்திட வேண்டும்!
2014ம் ஆண்டுக்கு பிறகு, மத்தியில் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்த வலதுசாரி பா.ஜ.க அரசு, தொடர்ந்து கருத்துச் சுதந்திரத்திற்கு எதிராகச் செயல்பட்டு வருகிறது. பத்திரிகையாளர்கள், சமூக செயல்பாட்டாளர்கள் என பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக, கோவிந்த் பன்சாரே, நரேந்திர தபோல்கர், எழுத்தாளர் கல்புர்க்கி மற்றும் பத்திரிக்கையாளர் கௌரி லங்கேஷ் உள்ளிட்டோர் வலதுசாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதேபோல் அரசின் கொள்கைகளை விமர்சிப்போர், அச்சு ஊடகம், காட்சி ஊடகம், பண்பலை, திரைத்துறையினர் மீது தொடங்கிய தாக்குதல்கள், தற்போது வெகுஜன ஊடகமாக விளங்கி வரும் யூடியூப் மீதும் தொடுக்கப்பட்டுள்ளது.
வலதுசாரி கும்பலுக்கு அடிபணிய மறுக்கும் சேனல்களை முடக்கியும், அதில் பணியாற்றும் தொழிலாளர்கள் மீது அச்சுறுத்தல்களையும் ஏற்படுத்தி வருகிறது. இதனால் பல தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். ‘கருத்துச் சுதந்திரம் அடிப்படை உரிமை’ என அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமைக்கு எதிராக செயல்படும் ஒன்றிய அரசு மற்றும் ஆர்.எஸ்.எஸ்-சின் செயல்பாடுகள் கண்டனத்துக்குரியது.
முற்போக்கு கருத்துத் தெரிவிக்கும் யூடியூப் சேனல்களை முடக்கும் போக்கிற்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள, தனிச்சட்டம் அல்லது பாதுகாப்புக் குழு அமைக்க வேண்டும். அச்சுறுத்தல்களுக்கு அஞ்சி, எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, யூடியூப் நிறுவனத்தால் முடக்கப்படும் யூடியூப் சேனல்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவேண்டும்.
யூடியூப் சேனல்களை ஒருங்கிணைத்து, ஒரு ‘பொதுமேடை’ அமைக்கும் பணியை சிபிஐ(எம்) டிஜிட்டல் கிளை எதிர்காலத்தில் மேற்கொள்ளும்.
- ரா.சுதிர். டிஜிட்டல் கிளைச் செயலாளர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக