திருச்செந்தூரில் இயங்கி வரக்கூடிய செந்திலாண்டவர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பொறுப்பேற்றது முதல் இப்பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு பெரும்பங்கு ஆற்றி வருபவர் தலைமை ஆசிரியர் கே. எப்ரேம் .
பொதுத்தேர்வில் 40 விழுக்காடு தேர்ச்சி என்றிருந்ததை வகுப்பு ஆசிரியர்களின் துணையோடு 95 விழுக்காடு உயரச் செய்தவர். மாணவர்களை ஒழுங்குபடுத்துவதில் கண்டிப்புடன் கூடிய மிகுந்த ஆர்வம் காட்டியவர். தலை முடியை சீராக வெட்டுவது, சீருடையை முறையாக அணிவது, பள்ளி மாணவர்களுக்கு இடையே பாகுபாட்டை குறைத்தது, ஏழை, எளிய மாணவர்கள், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மனமுவந்து உதவிடுவது, பள்ளியின் உட்கட்டமைப்பை தன்னுடைய அணுகுமுறையால் சமூகநல ஆர்வலர்களின் உதவியோடு பல வழிகளில் சீரமைத்தது, பள்ளி மைதானத்தை சீரமைத்திட நல்ஆசிரியர்களின் உதவியோடு சேர்த்து 1இலட்சம் ரூபாய் வழங்கியது.
கடந்த அதிமுக ஆட்சியில் நடைபெற்ற பள்ளி வகுப்பறை கட்டுமான பணிகளில் நடந்த முறைகேட்டை சுட்டிக்காட்டி முறையான கட்டிடப் பணிகளை மேற்கொள்ள செய்தது, அதே ஆட்சியில் மாற்றுத்திறனாளி மாணவர் ஒருவர் மாற்றுத்திறனாளி சான்றிதழ் பெற அலைக்கழிக்கப்பட்ட நிலையில் அம்மாணவருக்கு சான்றிதழ் கிடைக்க வழிவகுத்தவர். மாலை நேர படிப்பில் மாணவர்களை அமரவைத்து உணவையும் அளித்தது என நிறைய சொல்ல முடியும். மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உபகரணங்களில் தரமில்லை என்பதை சுட்டிக்காட்டி சரி செய்தவர், மிகக்குறைந்த அளவிலான மாணவர்களை கொண்டிருந்த செந்திலாண்டவர் பள்ளியில் தற்போது இடமில்லை என்று சொல்லக்கூடிய அளவில் அதிக அளவில் மாணவர்கள் விரும்பி பயில அடித்தளமிட்டவர். திருச்செந்தூர் சுற்றுவட்டார சமூகநல ஆர்வலர்கள், கல்வியாளர்கள், சனநாயக சக்திகளின் நம்பிக்கையைப் பெற்றவர். பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் பேரன்பைப் பெற்றவர். கொரோனா தடுப்பு நிவாரண நிதியாக தமிழ்நாட்டிலேயே அரசுப்பள்ளியின் சார்பில் நல்ஆசிரியர்களின் துணையோடு 1இலட்சம் ரூபாய் மக்களை காத்திட அரசுக்கு வழங்கியவர். இப்படி தலைமையாசிரியர் கே.எப்ரேம் அவர்களின் நன்மதிப்பீட்டை அளவின்றி சான்றுகளோடு விவரிக்க முடியும்.
இந்நிலையில் ஆசிரியர் ஒருவர் தன்னுடைய தனிப்பட்ட விருப்பு வெறுப்பின் அடிப்படையில் பழிவாங்கும் நோக்கத்தோடு கொடுத்த புகாரின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆகியோர் செந்திலாண்டவர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் கே.எப்ரேம் பணியிட மாற்றம் செய்வது பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மட்டுமின்றி இப்பள்ளி வளர்ச்சியின் மீது அக்கறைகொண்ட அனைத்து தரப்பினரையும் பெரும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
இத்தகைய நடவடிக்கையானது பள்ளி வளர்ச்சியின் மீது ஆர்வம்காட்டும் ஆசியர்களுக்கு அச்சத்தையும், அவநம்பிக்கையையும் உண்டாக்கிவிடும். திமுக அரசுக்கும் அவப்பெயரை ஏற்படுத்திவிடும்.
எனவே அனைத்து தரப்பினரும் பாராட்டக்கூடிய வகையில் பள்ளிக் கல்வித்துறையில் மக்களைத் தேடிக்கல்வி, SMART CLASS, கூடுதல் கல்வி உதவித்தொகை எனப் பெரும் பங்களிப்புச் செய்து செயலாற்றி வரும் மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதி ஸ்டாலின் , மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி தாங்கள் திருச்செந்தூர் செந்திலாண்டவர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் வளர்ச்சியைக் கருத்தில்கொண்டு தலைமை ஆசிரியர் கே.எப்ரேம் அவர்களை பணியிட மாற்றம் செய்யும் முடிவை திரும்பப்பெற்று மீண்டும் செந்திலாண்டவர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியராகவே அவரை பணியமர்த்தும் அறிவிப்பை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வழியே வெளியிட்டு உதவிட வேண்டுமென அனைவரின் சார்பிலும் பணிவோடு வேண்டுகிறோம்.
இவண
சு.விடுதலைச்செழியன்
மாவட்ட அமைப்பாளர்இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப்பாசறை
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி
தூத்துக்குடி தெற்கு மாவட்டம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக