தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் பகுதி சூரங்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வேம்பார் தருவை பாலத்திற்கு அருகே கடந்த 18.02.1995 அன்று வேம்பார் மேலத்தெருவைச் சேர்ந்த பொன்னுச்சாமி மகன் பழனிவேல் (40/95) என்பவர் கொலை செய்யப்பட்டார்.
இது சம்மந்தமாக சூரங்குடி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு இவ்வழக்கின் எதிரிகளை 20.02.1995 அன்று கைது செய்து 14.05.1996ம் அன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.
இந்நிலையில் இவ்வழக்கின் எதிரிகளில் ஒருவரான தூத்துக்குடி பச்சையாபுரத்தைச் சேர்ந்த சிதம்பரம் மகன் சந்திரமோகன் (72) என்பவர் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தார்,
இதனால் 07.06.1999 அன்று நீதிமன்றம் இவருக்கு பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டது. இவரை போலீசார் தேடி வந்த நிலையில் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார்.
இந்நிலையில் பிடிவாரண்ட் பிறப்பித்து 22 ஆண்டுகளாக தலைமறைவாக உள்ள மேற்படி எதிரி சந்திரமோகனை கைது செய்வதற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் விளாத்திக்குளம் காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் மேற்பார்வையில் விளாத்திக்குளம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கங்கைநாதபாண்டியன் தலைமையில் போலீசார் அடங்கிய தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.
இந்நிலையில் மேற்படி தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு, தீவிர தேடுதல் வேட்டையில் தலைமறைவாக இருந்து வந்த எதிரி சந்திரமோகனை கைது செய்தனர்.
கடந்த 22 ஆண்டுகளாக போலீஸ்-கண்ணில் மண் தூவி தலைமறைவாக இருந்த சந்திரமோகனை இப்போது அதிரடியாக கைது செய்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக