செய்தியாளர் மோசஸ் படுகொலை : குற்றவாளிகளைக் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறைப்படுத்துக!
தமிழக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல்
திருவள்ளூர் மாவட்டம் குன்றத்தூர் பகுதியைச் சேர்ந்த தமிழன் தொலைக்காட்சி செய்தியாளர் மோசஸ் சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இந்தப் பகுதியில் நடந்த சமூக விரோத சம்பவங்களை அம்பலப்படுத்தியதால் அவர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்.கொலையாளிகளை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறைப்படுத்தவேண்டும் எனவும், கொலையுண்ட மோசஸ் குடும்பத்துக்கு 50 லட்சம் நிதியுதவி வழங்கவேண்டுமென்றும் தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.
தனது உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்று காவல்துறைக்கு புகார் அளிக்கும்போது உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால் இந்தப் படுகொலை நிகழ்ந்திருக்கிறது
திருவள்ளூர் பகுதியில் கஞ்சா விற்பனை தாராளமாக நடந்து கொண்டிருப்பதை மோசஸ் அம்பலப்படுத்தியுள்ளார். அதன் காரணமாக சமூக விரோதிகள் அவர் மீது ஆத்திரத்தில் இருந்துள்ளனர். இந்நிலையில் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதை சுட்டிக்காட்டி காவல்துறையில் மோசஸ் புகார் அளித்திருக்கிறார். உரிய நேரத்தில் அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் இந்தப் படுகொலை நிகழ்ந்திருக்காது. கொலை மிரட்டல் புகார்மீது நடவடிக்கை எடுக்காமல் மெத்தனம் காட்டப்பட்டதைப் பார்க்கும்போது காவல்துறையில் உள்ள சிலருக்கும் சமூக விரோதிகளுக்கும் தொடர்பு இருக்கிறதோ என்ற ஐயம் ஏற்படுகிறது. தமிழக அரசு விசாரணை நடத்தி காவல்துறையைச் சேர்ந்தவர்கள் யாரும் இதற்கு உடந்தையாக இருந்தால் அவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
ஊடக சுதந்திரத்தைப் பாதுகாக்க வேண்டிய கடமை தமிழக அரசுக்கு உள்ளது. ஊடகவியலாளர்களின் உயிருக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டால் அது ஜனநாயகத்துக்கு பேராபத்தாகவே முடியும். எனவே ஊடகவியலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
இவண்
தொல். திருமாவளவன்
நிறுவனர் - தலைவர்,
விசிக

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக