தூத்துக் குடி லீகஸ்
தூத்துக்குடி மாவட்டம் 23 - 11 - 2020
லடாக் பகுதியில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்த கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரர் கருப்பசாமியின் உடல் நேற்று 24 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள தெற்கு திட்டங்குளத்தைச் சேர்ந்த கந்தசாமி மகன்கருப்பசாமி(34). இந்திய ராணுவத்தில் கடந்த 14 ஆண்டுகளாக பணியாற்றி வந்த இவர் நாயக் பதவி வகித்து வந்த நிலையில், கடந்த 19-ம் தேதி பணி நிமித்தமாக லடாக் கிளேசியர் பகுதியில் சென்றபோது விபத்தில் உயிரிழந்தார்.
கருப்பசாமியின் உடல் விமானம் மூலம் 6-வது பீரங்கிப்படை சுபேதார் பழனிச்சாமி தலைமையில் நேற்று 22 - 11 - 2020 மாலை 4 மணிக்கு மதுரை கொண்டு வரப்பட்டது.
அங்கிருந்து, 13-வது கார்வெல் ரைபிள் கார்டு கமாண்டர் நரேந்திர சிங், ஜூனியர் கமிஷன் ஆபீஸர் மான்பர் சிங் தலைமையிலான வீரர்கள், கருப்பசாமியின் உடலைப் பெற்று, அவரது சொந்த ஊரான தெற்கு திட்டங்குளத்துக்கு மாலை 6.30 மணிக்கு கொண்டு வந்தனர். உடலைப் பார்த்து கருப்பசாமியின் மனைவி தமயந்தி மற்றும் பெற்றோர், உறவினர்கள் கதறி அழுதனர். அரசியல் கட்சியினர், முன்னாள் ராணுவத்தினர், பொதுமக்கள் அஞ்சலிக்கு பின்னர் கருப்பசாமியின் உடல் அவரது இல்லத்தில் இருந்து ஊர்வலமாக அங்குள்ள மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. தமிழக அரசு சார்பில் அமைச்சர் கடம்பூர் செ.ராஜு, ஆட்சியர் செந்தில்ராஜ், எஸ்பி ஜெயக்குமார் ஆகியோர் கருப்பசாமியின் உடலுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
பின்பு இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டு, 24 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்பட்டது.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக