Tamil Nadu updates
photo news by Arunan Reporter
தூத்துக்குடி, அக்.30:
தூத்துக்குடி மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் செப்டிக் டேங்க் மற்றும் பாதாள சாக்கடைகளுக்குள் மனிதர்கள் நேரடியாக இறங்கி துப்புரவுப் பணிகளை மேற்கொள்வதற்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் பிரியங்கா தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் ஆணையர் பிரியங்கா தலைமையில் அவசரகால துப்புரவுப் பணி பொறுப்பு ஆணையம் (ERSA) குறித்த விளக்கக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் நகர நல அலுவலர் அனைவரையும் வரவேற்று, அவசரகால துப்புரவுப் பணி பொறுப்பு ஆணையத்தின் செயல்பாடுகள் மற்றும் பொறுப்புகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.
இதில் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பணியாற்றும் தனியார் கழிவுநீர் அகற்றும் வாகன உரிமையாளர்கள், பாதாள சாக்கடை பராமரிப்பு ஒப்பந்தப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், மாநகராட்சி பொறியாளர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.
உயிரிழப்பில்லா துப்புரவுப் பணியே இலக்கு!
கூட்டத்தில் ஆணையர் பிரியங்கா பேசுகையில், தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி துப்புரவுப் பணிகளின்போது ஏற்படும் உயிரிழப்புகளை முற்றிலும் தடுத்து, உயிரிழப்பில்லா நிலையை உருவாக்கும் நோக்கில் இந்த அமைப்பு செயல்படுவதாகத் தெரிவித்தார்.
மாநகராட்சி எல்லைக்குள் உள்ள செப்டிக் டேங்க் மற்றும் பாதாள சாக்கடைகளில் மனிதர்கள் நேரடியாக இறங்குவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. கழிவுநீர் அகற்றுதல் உள்ளிட்ட அனைத்துப் பணிகளும் மாநகராட்சியால் அங்கீகரிக்கப்பட்ட வாகனங்கள் மற்றும் நவீன இயந்திரங்கள் மூலமாக மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும் என அறிவுறுத்தினார்.
24 மணி நேரக் கண்காணிப்பு!
தனியார் கழிவுநீர் அகற்றும் லாரிகளுக்கு முறையான உரிமம் வழங்கப்பட்டு, அவற்றின் செயல்பாடுகள் ஜி.பி.எஸ். தொழில்நுட்பம் மூலம் கண்காணிக்கப்படும். அவசரகால தேவைகளுக்காக 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
தவிர்க்க முடியாத விதிவிலக்கான சூழ்நிலைகளில் பணியாளர்களை ஈடுபடுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டால், முழு உடல் பாதுகாப்பு உடை, முகக்கவசம், கையுறை உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும். மேலும், நச்சு வாயுவைக் கண்டறியும் கருவி மூலம் உரிய பரிசோதனைகள் மேற்கொள்வதும் கட்டாயமாகும் என அறிவுறுத்தப்பட்டது.
தூய்மைப் பணியாளர்களுக்கு காப்பீடு, வாழ்வாதார உதவி!
பாரம்பரியமாக இத்தொழிலில் ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியாளர்களுக்கு முறையான பயிற்சி அளித்து, பாதாள சாக்கடை நுழைவுப் பணிகளில் தேர்ச்சி பெற்ற வல்லுநர்களாக உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், மத்திய அரசின் நமஸ்தே திட்டத்தின் கீழ் அவர்களுக்குக் காப்பீடு மற்றும் வாழ்வாதார உதவிகள் வழங்கப்படும் என்றும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
விதிகளை மீறினால் சிறை தண்டனை!
பாதுகாப்பு விதிமுறைகளை மீறி, நச்சு வாயு நிறைந்த கழிவுநீர்த் தொட்டிகளில் மனிதர்களை இறக்கிப் பணியில் ஈடுபடுத்தும் நபர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்றும் கூட்டத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
துப்புரவுப் பணியாளர்களின் உயிர்ப் பாதுகாப்பை உறுதி செய்வதில் மாநகராட்சி நிர்வாகம் உறுதியுடன் செயல்படும் என ஆணையர் பிரியங்கா தெரிவித்தார்.
செப்டிக் டேங்கில் மனிதர்களை இறக்கினால் கடும் நடவடிக்கை!
தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் பிரியங்கா அறிவுறுத்தல்:
செப்டிக் டேங்க், பாதாள சாக்கடைகளில் மனிதர்கள் நேரடியாக இறங்கத் தடை.
அங்கீகரிக்கப்பட்ட வாகனங்கள், நவீன இயந்திரங்கள் மூலம் மட்டுமே துப்புரவுப் பணி.
தனியார் கழிவுநீர் லாரிகளுக்கு ஜி.பி.எஸ். கண்காணிப்பு.
அவசரகால தேவைகளுக்கு 24 மணி நேரக் கட்டுப்பாட்டு அறை.
விதிகளை மீறுவோர் மீது சிறை தண்டனை, அபராதம் உள்ளிட்ட சட்ட நடவடிக்கை.
தூய்மைப் பணியாளர்களின் உயிர் பாதுகாப்பே முதன்மை!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக