தூத்துக்குடி பத்திரிகையாளர்களிடம் தரக்குறைவாக நடந்துகொண்டதாக குற்றச்சாட்டு: கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை கோரி எஸ்.பி.க்கு மனு
தூத்துக்குடி, ஜூலை 21:
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகத்தினரிடம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தீபு தரக்குறைவாக நடந்துகொண்டதாகக் குற்றம்சாட்டி, அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தூத்துக்குடி பத்திரிகையாளர்கள் மற்றும் தூத்துக்குடி பியர்ஸ் சிட்டி பிரஸ் கிளப் சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழக முதலமைச்சரை அவதூறாக பேசியதாகக் கூறப்படும் வழக்கில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு முன் மருத்துவ பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு காவல் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டார்.
அப்போது, சம்பவத்தை செய்தியாக பதிவு செய்ய ஊடகத்துறையினர் புகைப்படம் மற்றும் காணொளி எடுக்க முயன்றபோது, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தீபு அதைத் தடுத்து நிறுத்தியதுடன், ஊடகத்தினரிடம் தரக்குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்தி, அநாகரிகமாக நடந்து கொண்டதாக மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
ஜனநாயக கடமை!!!
மேலும், ஆயிரக்கணக்கான மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான நடவடிக்கைகளை பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்பது ஊடகங்களின் ஜனநாயகக் கடமை என்றும், அந்தப் பணியை மேற்கொள்ள விடாமல் தடுத்தது கண்டனத்திற்குரியது என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்னும் பணி மாற்றம் பன்னாமல் இருப்பது ஏன்!!!
கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தீபு பல ஆண்டுகளாக தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றி வருவதாகவும், இதற்கு முன்பும் பல்வேறு நிகழ்வுகளில் ஊடகத்துறையினரிடம் இதுபோன்ற முறையில் நடந்து கொண்டதாகவும் மனுவில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
எனவே, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தீபு மீது உரிய துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதுடன், அவரை தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து பணியிட மாற்றம் செய்ய பரிந்துரை செய்ய வேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தூத்துக்குடி பத்திரிகையாளர்கள் மற்றும் தூத்துக்குடி பியர்ஸ் சிட்டி பிரஸ் கிளப் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மனு தொடர்பாக காவல்துறை தரப்பின் அதிகாரப்பூர்வ பதில் இதுவரை வெளியாகவில்லை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக