தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி
சென்னை, ஜூன் 14:
தவெக கட்சியின் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நேற்று பனையூரில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழக முதல்வர், கட்சி நிர்வாகிகளுக்கு பல்வேறு முக்கிய அறிவுரைகளையும் எச்சரிக்கைகளையும் வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
கூட்டத்தில் பேசிய முதல்வர், "ஒயின்ஷாப் பார் லைசன்ஸ் எடுக்கிறேன், காவல் நிலையங்களில் சென்று கட்டப்பஞ்சாயத்து செய்கிறேன் என்ற பெயரில் எந்தவித அடாவடி செயல்களிலும் யாரும் ஈடுபடக்கூடாது" என கடுமையாக அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
மேலும், ...
"உள்ளூர் அளவில் செல்வாக்கு மிக்க நபர்கள் பல்வேறு சிபாரிசுகள் மற்றும் ஆதரவுகளுக்காக பணம் வழங்க முயற்சிக்கலாம். அவற்றை ஏற்றுக்கொள்ள வேண்டாம். மேல்மட்டத்தில் உள்ள அமைச்சர்கள் யாரும் கமிஷன் பெறமாட்டார்கள். தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டால், அதனால் பாதிக்கப்படுவது நீங்களாகவே இருப்பீர்கள்" என எச்சரித்தார்.
அத்துடன், "மக்களின் கோரிக்கைகள் மற்றும் நலத் திட்டங்கள் தொடர்பாக தலைமைச் செயலகத்தில் அமைச்சர்களை எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம். ஆனால், சிபாரிசுகளுக்காக தனிநபர்களை அழைத்து வருவதை தவிர்க்க வேண்டும்" என்றும் முதல்வர் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கட்சி நிர்வாகிகள் மக்கள் நலன் சார்ந்த பணிகளில் முழு கவனத்துடன் செயல்பட்டு, கட்சியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படாத வகையில் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக