தூத்துக்குடி, மார்ச் 7:
தூத்துக்குடி மாவட்டம் சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வீட்டுக்குள் புகுந்து பெண்மணியை கத்தியால் மிரட்டி 7 பவுன் தங்கச் செயினை பறித்துச் சென்ற நபரை போலீசார் 5 மணி நேரத்திற்குள் அதிரடியாக கைது செய்தனர். துரிதமாக செயல்பட்டு குற்றவாளியை கைது செய்த போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்.

தூத்துக்குடியைச் சேர்ந்த சசிகுமார் (30)
நேற்று (06.03.2026) சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கதிர்வேல் நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மர்ம நபர் ஒருவர் அத்துமீறி நுழைந்தார். அப்போது வீட்டில் இருந்த பெண்மணியிடம் கத்தியை காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த 7 பவுன் தங்கச் செயினை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றார்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சி. மதன் உடனடியாக நடவடிக்கை எடுத்து, மாவட்டம் முழுவதும் தீவிர ரோந்து மற்றும் வாகன தணிக்கை மேற்கொள்ள போலீசாருக்கு உத்தரவிட்டார்.
அவரது உத்தரவின் பேரில் சிப்காட் காவல் நிலைய போலீசார் சம்பவம் நடைபெற்ற பகுதி மற்றும் சுற்றுவட்டாரங்களில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து, சந்தேக நபரை அடையாளம் கண்டனர்.
தொடர்ந்து தீவிர ரோந்து மற்றும் வாகன தணிக்கை மேற்கொண்ட போது தூத்துக்குடி பி & டி காலனி பகுதியில் சந்தேகத்திற்கிடமாக வந்த நபரை போலீசார் மடக்கிப் பிடித்து விசாரணை செய்தனர்.
விசாரணையில்....
தூத்துக்குடியைச் சேர்ந்த சசிகுமார் (30) என்பதும், கதிர்வேல் நகர் பகுதியில் உள்ள வீட்டில் புகுந்து பெண்மணியிடம் இருந்து தங்கச் செயினை பறித்துச் சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, அவரிடமிருந்து 7 பவுன் தங்கச் செயினை மீட்டனர்.
இதுகுறித்து சிப்காட் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து சசிகுமாரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
வீடு புகுந்து கொள்ளை சம்பவத்தில் துரிதமாக செயல்பட்டு குற்றவாளியை கைது செய்து தங்கச் செயினை மீட்ட சிப்காட் காவல் நிலைய போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சி. மதன் பாராட்டினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக