Tamil Nadu update
photo news by Arunan journalist
தூத்துக்குடி லீக்ஸ்” நாளிதழ் செய்தி
தூத்துக்குடி, ஜனவரி 05:
தமிழ்நாட்டில் நடைபெறும் பொதுக் கூட்டங்கள், பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள், அரசியல் நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பெரும் மக்கள் கூடல்களை ஒழுங்குபடுத்தும் வகையில் அரசாணை எண் 5 (காவல் VIII) மூலம் புதிய செயல்பாட்டு நடைமுறை வழிகாட்டுதல்கள் (SOP) இன்று (05.01.2026) முதல் அதிகாரப்பூர்வமாக அமல்படுத்தப்பட்டுள்ளன.
இந்த SOP-ன் முக்கிய அம்சமாக, மாவட்ட வாரியாக பொதுக் கூட்டங்களுக்கான உச்ச அளவு (Crowd Limit) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் அங்கீகரிக்கப்பட்ட இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, அந்த இடங்களின் பரப்பளவு, பாதுகாப்பு வசதி மற்றும் போக்குவரத்து சூழ்நிலை ஆகியவற்றின் அடிப்படையில் அதிகபட்ச கூட்டத் திறன் கணக்கிடப்படும்.
அனுமதி பெற புதிய நடைமுறை
பொதுக் கூட்டம் நடத்த விரும்பும் அமைப்புகள் மற்றும் கட்சிகள்,
அங்கீகரிக்கப்பட்ட இடங்களில் நடத்த வேண்டுமெனில் 10 முதல் 21 நாட்களுக்கு முன்பாக
அங்கீகரிக்கப்படாத இடங்களில் நடத்த வேண்டுமெனில் 15 முதல் 30 நாட்களுக்கு முன்பாக
மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி விண்ணப்பிக்க வேண்டும்.
5,000 பேருக்கு மேற்பட்ட கூட்டங்களுக்கு SOP விதிகள் கட்டாயம் நடைமுறையில் இருக்கும்.
பாதுகாப்பு, மருத்துவ வசதி கட்டாயம்
கூட்டம் நடத்தும் அமைப்புகள்:
✔️ போதிய வாலண்டியர்கள் நியமனம்
✔️ குடிநீர், கழிப்பறை, தீயணைப்பு வசதி
✔️ ஆம்புலன்ஸ், மருத்துவ குழு
✔️ CCTV கண்காணிப்பு
✔️ போக்குவரத்து ஒழுங்கு ஏற்பாடு
போன்ற அனைத்தையும் கட்டாயம் செய்ய வேண்டும் என SOP-ல் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியர், காவல்துறை பொறுப்பு
இந்த SOP-ஐ அமல்படுத்தும் முழு பொறுப்பு மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளருக்கு வழங்கப்பட்டுள்ளது.
விதிகளை மீறி கூட்டம் நடத்தினால் அனுமதி ரத்து, வழக்குப்பதிவு உள்ளிட்ட கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரித்துள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்பே முக்கியம்
பெரும் கூட்டங்களில் ஏற்படும் அசம்பாவிதங்களை தவிர்க்கும் நோக்கில் இந்த வழிகாட்டுதல்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், மக்கள் பாதுகாப்பே அரசின் முதன்மை குறிக்கோள் எனவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக